திரு.பழ.கருப்பையா எழுதியுள்ள “எல்லைகள் இல்லா இராம காதை” என்ற இந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு மிகவும் விருப்பமான கம்ப இராமாயணத்தை எளிமையான முறையில், உதாரணங்கள் பல கொடுத்து அனைவருக்கும் எட்டும் வகையில் தந்துள்ள ஆசிரியரை நாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இராமாயணக் கதை நம் அனைவருக்கும் தெரியும், அதனால் ஆசிரியர் கதை சொல்லிக் கொண்டு போகாமல், நுணுக்கமான இடங்களையும், இராமனின் சிறப்பையும், கம்பனின் ஆற்றலையும் காட்டும் இடங்களை மட்டுமே குறிப்பிடுகிறார். இருநூறு பக்கங்களில் இவ்வளவு தான் சொல்ல வேண்டும் என்று உணர்ந்து செய்துள்ளார். இது ஓர் அலசல் தானே தவிர முழு இராமாயணம் அல்ல.நல்லதொரு புத்தகம், அனைவரும் படித்து மகிழலாம்!.

புத்தகத்திலிருந்து சில உதாரணங்கள்:

“எவனுடைய ஆட்சியில் அரசு ஒவ்வொரு காரியமும் செய்து முடிக்கும்போது, மக்கள் அதைத் தாங்களே செய்ததாக நினைக்கிறார்களோ … , அவனுடைய ஆட்சியே சிறந்த ஆட்சி என்று சீனத்துத் தாவோயியம் கூறும்!”

“இத்தாலிய நாட்டு மாக்கியவேலி உலகப் பெரும் அரசியல் விற்பன்னன். அவன் மன்னன் என்னும் உலகப் புகழ்பெற்ற ஒரு நூலினை எழுதினான். அரசியலில் வெற்றி ஒன்றுதான் குறிக்கோள்; அதை அடைய எந்தப் பித்தலாட்டமும் செய்யலாம்; யாரை வேண்டுமானாலும் பலியிடலாம்; கருவுத்தை எந்த வகையாலும் நிரப்பிக் கொள்ளலாம்; அரசியலுக்குச் சூதும் வாதும் சூழ்ச்சிகளும் தான் முக்கியம்”

“ஏதோ திருவிழாக் கூட்ட நெரிசலில் சந்தித்த ஒருவரோடு பேச முடியாமல் கழிவதுபோல், இராமன் கைகேயி சந்திப்பு கழியக்கூடாதே!ஆனால் அப்படித்தானே நடந்தது”

“பழைய ஏற்பாட்டின் (old testament) இறுதிக் காலத்திலும் புதிய ஏற்பாட்டின் தொடக்க காலத்திலும் ஏரோது என்ற மன்னன் இருந்தான். அவனுக்கு ஓர் ஆசைநாயகி இருந்தாள்… ஒரு நாள் அந்த ஆசைநாயகியின் மகள் நடனமாடி மன்னன் ஏரோதை மகிழ்வித்தாள். ஏரோது தன்னிலை மறந்த பெரு மகிழ்ச்சியில் ‘நீ என்ன கேட்டாலும் தருகிறேன், கேள்! என்று பலர் முன்னிலையில் ஆணையிட்டு வாக்குக் கொடுத்தான்”

“குடியாட்சிகளிலும் இளவரசுப் பட்டங்கள் உண்டு; மணிமுடி மட்டும் தலையில் வைத்துக் கொள்வதில்லை. குடும்பங்களின் ஆட்சிதான் இப்போதைய குடியாட்சி. குடி என்பது குடும்பங்களையும் குறிக்கும் தானே! … ஆகவே அன்றும் இன்றும் அதிகாரம் என்பது அரசபோகமே!”

“வால்மீகி இராமனையும் சீதையும் முன்கூட்டியே ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளும்படி செய்யவில்லை… கம்பன் சங்ககாலம் போற்றிய அன்பின் ஐந்திணையைத் தானும் போற்றுபவன். தமிழினத்தின் வாழ்வை ஒழுங்குபடுத்த ஒல்காப் புகழ்த் தொல்காப்பியன் எழுதிய பொருளதிகாரத்தைப் பெரிதும் போற்றுபவன்”

“…குடியாட்சி முறைக்குக் கொள்ளி வைக்க வந்தவன் சீசர் என்பதனால் புருட்டசு சீசரை எதிர்க்கிறான்… ஒன்றுக்கொன்று நேர்மாறான வாழ்க்கைப் போக்கினர் குடியாட்சிக்கான போரில் ஒன்றாக இணைகிறார்கள்…. இங்கே சீதையை மீட்கவும் அறத்தை நிலைநிறுத்தவுமான ஒரு பெரும்போரில் சுக்கிரீவனோடு வருகின்றவர்களையோ, தன்னோடு இதில் இணைய விரும்புகின்றவர்களையோ தராதரம் பார்த்துக் கொண்டிருப்பது இயலக்கூடிய செயலுமில்லை; அறிவான செயலுமில்லை”

“குழு அரசியல் (groupism) ஒரு கட்சியை மொத்தமாக வலுவிழக்கச் செய்துவிடும்! எதிர்க்கட்சியின்மீது ஒன்றுபட்டுப் பாயவேண்டிய அம்புகள் பிளவுபடுவதால், ஒருமைப்பட்ட தாக்குதல் நடக்காது”

“எல்லாப் புகழும் அல்லாவுக்கே என்று இறைமையைத் துதிப்பது வேறு; எல்லாப் புகழும் தலைவனுக்கே என்று தன் புகழை மட்டுமே பாடியாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவது வேறு!”

Categorized in:

Tagged in:

,