இன்றைக்குத் தான் சென்னையில் இருக்கும் புகழ் பெற்ற மலைக்குச் சென்றேன்!

நான் பிறந்ததில் இருந்து மெட்ராஸ்வாசி. இத்தனை ஆண்டுகாலமாகச் இங்கே வாழ்ந்தாலும் புனித தோமையார் மலைக்கு இதுவரை நான் போனதில்லை. St. Thomas Mount எனக் கேட்கும் பொழுதெல்லாம் போக வேண்டும் என எண்ணி பிறகு மறந்துவிடுவேன். இரண்டாயிரம் வருடங்கள் பாரம்பரியம் இருப்பதாக நம்பப்படும் இந்தப் புனித மலைக்குப் போகும் வாய்ப்பு இன்று எனக்கு அமைந்தது.

இன்று அதிகாலையில் சென்னை விமான நிலையம் சென்று கிண்டிக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தைத் தாண்டி, ஓடிஏ நங்கநல்லூர் மெட்ரோ நிலையத்தைத் தாண்டி, ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலை வலதுபுறமாக வளையும் இடத்தில், கவனமாகப் பார்த்தால் இடது புறத்தில் ஒரு சிறு சாலை போகும். ஆட்டோக்களும் டாக்சிகளும் மட்டுமே திரும்பிக் கொண்டிருப்பார்கள், இது ஏதோ உட்புறச் சாலை என்று எண்ணி இருக்கிறேன். இன்று நான் மெதுவாகப் போனதால், அங்கே இருந்த மஞ்சள் வண்ணப் பதாகையைப் பார்த்தேன் – செயிண்ட் தாமஸ் தேவாலயம் என்று இருந்தது. உடனே திரும்பிவிட்டேன்.

கொஞ்சம் தூரம் போய் எந்தப்பக்கம் திரும்புவது என்று தெரியாமல், இளநீர் வியாபாரியிடம் வழி கேட்டுச் சென்றேன். ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் இடது திரும்பி, சிறிது தூரத்தில் மீண்டும் இடது திரும்ப வேண்டும் – இந்தச் சந்திப்பில் ஆட்டோக்களும் டாக்சிகளும் பூந்தமல்லி செல்ல வலதுபுறம் திரும்புகிறார்கள், மலைக்குச் செல்ல நாம் இடது பக்கம் திரும்ப வேண்டும். இது இராணுவ பகுதி, வீரர்கள் பயிற்சி ஓட்டம் செய்து கொண்டிருந்தார்கள், அதனால் நாம் மெதுவாகச் செல்வது நல்லது. அந்தச் சாலையில் சுமார் அரைக் கிலோ மீட்டர் சென்றால் இந்திய இராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய ( Officers Training Academy/OTA) நுழைவாயிலைப் பார்க்கலாம். அங்கே வலது பக்கம் திரும்பி, சிறிது தூரம் சென்றால் வலது புறத்தில் குடிசைப் பகுதியைப் போலக் குறுகலான ஒரு தெரு கண்ணில் பட்டது. தெருவின் இரண்டு புறமும் இரு சக்கர வாகனங்கள் இடைஞ்சலாக இருந்தன, ஒரு கார் போகலாம் பிரச்சனை இல்லை, இருந்தும் சந்தேகமாக இருந்தது. எதிரில் மோட்டர்பைக்கில் வந்த இளம் ஜோடியிடம் வழி கேட்டு வலது பக்கம் அந்த சிறு தெருவில் திரும்பினேன். ஒரு நூறு அடிக்குப் பிறகு காட்சி மாறியது. ரம்மியமான மலைப்பிரதேசச் சுழல் வரத் தொடங்கியது. அதில் சுமார் அரைக் கிலோ மீட்டர் மலை ஏற்றம். பின்னர் தேவாலய நுழைவாயில். கார்களை நிறுத்த பெரிய வாகன நிறுத்துமிடம். இன்று வெள்ளிக்கிழமை காலை ஏழு மணி என்பதால் காலியாக இருந்தது, அதனால் நேராகத் தேவாலயத்தின் வாசல் வரை காரிலேயே செல்ல முடிந்தது. ஞாயிறு காலையில் நிச்சயமாக இங்கே கூட்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நடந்துவருபவர்களுக்குத் தனியாக நடைபாதை இருக்கிறது.

காரை நிறுத்திவிட்டு, இறங்கி நடந்தால் எதிரிலேயே தேவாலயம். நான் காலையில் குளிக்காமல் சென்றுவிட்டதால் புனித தோமையார், புனித இயேசு கிறிஸ்து, புனித மாதா ஆலயங்களை வெளியில் இருந்தபடியே வணங்கிவிட்டுச் சுற்றிப் பார்த்தேன். எல்லாப் புறமும் கண்ணில் தெரிந்தது கழுகுப் பார்வையில் சென்னை நகரின் கம்பீரத் தோற்றம். நடுவில் பச்சைப்பசேலாக கிண்டி குதிரைப் பந்தயப் பூங்கா தெரிந்தது. அதைச் சுற்றி மெட்ரோ ரயில் பாதை வளைந்து வளைந்து செல்வது அழகாக இருந்தது. அதற்குள் எனக்குப் பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது. பத்து நிமிடங்கள் எல்லாவற்றையும் பார்த்து ரசித்துவிட்டு காருக்கு திரும்பினேன். ஐந்து நிமிடங்களில் மீண்டும் ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலைக்குத் திரும்பிவிட்டேன்.

Way to Saint Thomas Mount, Chennai
Way to Saint Thomas Mount, Chennai
View on the way to Saint Thomas Mount, Chennai
View on the way to Saint Thomas Mount, Chennai
Saint Thomas Mount, Chennai
Saint Thomas Mount, Chennai
புனித தோமையார் தேவாலயம்
புனித தோமையார் தேவாலயம்
புனித தோமையார் மலை
புனித தோமையார் மலை
புனித தோமையார் மலை
புனித தோமையார் மலை
புனித தோமையார் மலை
புனித தோமையார் மலை
புனித தோமையார் மலை
புனித தோமையார் மலை
View from Saint Thomas Mount
View from Saint Thomas Mount
View of Chennai City from Saint Thomas Mount
View of Chennai City from Saint Thomas Mount
View from Saint Thomas Mount
View from Saint Thomas Mount

இந்த அழகாக இடம், அதோடு புனிதமாகக் கருதப்படும் இந்த மலை சென்னையில் இருப்பது நமக்குக் கிடைத்த வரம். சென்னைவாசிகள் எல்லோரும் அவ்வப்பொழுது போய்வர வேண்டிய மலை இது. இயற்கையை ரசிக்க நல்ல வாய்ப்பும் கூட.

குறிப்பு: கூகுள் மேப்ஸ்ஸில் “St. Thomas Relic Chapel” எனத் தேடி, வழியைப் பார்க்கலாம்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading