லெபனான் பேஜர்கள் வெடி நிகழ்வுகள் எப்படி நடந்தது?

வெளிர் நிற அரைக்கைச் சட்டை, தலையில்  நீலத் தோப்பி அணிந்த நடுத்தர வயது நபர், ஆரஞ்சுப் பழங்களைத் தள்ளுவண்டிக் கடையிலிருந்து பொறுக்கிக் கொண்டிருக்கிறார், கடை பையன் அதை நெகிழி உறையில் போட்டு முடிச்சுப் போடப் போகத் திடீரென்று தோப்பி ஆசாமியின் இடிப்பின் அருகிலிருந்து கரும் புகை, சின்ன வெடிச் சத்தம் கேட்கிறது நம் ஆசாமி வயிற்றைப் பிடித்தபடி கீழே விழுகிறார். கடை பையன் தலை தெரிக்க ஓடுகிறான், எதிரிலிருக்கும் இளைஞர் தன் காதைப் பொத்துகிறார். என்ன நடந்தது என்று பார்த்தபடியே அருகில் இருந்த பெண்மணி அவரின் சிறுமியை  மெதுவாகத் தூக்கி இடிப்பில் வைத்துக் கொண்டு நடக்கிறார். சில தினங்களுக்கு முன் மாலை மூன்று-முப்பது மணிக்கு இந்தக் கோரச் சம்பவம் நடந்தது லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் ஒரு கடைத் தெருவில்.

இது ஏதோ ஒரு நிகழ்வில்லை. அதே நொடியில் லெபனான் மற்றும் சிரியா நாடுகளின் பல பகுதிகளில் சுமார் மூவாயிரத்திற்கும் அதிகமான நபர்கள் இது போன்ற வெடி நிகழ்வில் காயமடைந்தார்கள். இருபதுக்கும் மேலானவர்கள், குழந்தைகள் உட்பட இறந்துள்ளார்கள். இங்கெல்லாம் என்ன நடந்தது?

மத்திய-கிழக்கில் கத்தார் அளவேயிருக்கும் சிறிய நாடு லெபனான். இஸ்ரேலுக்கு வடக்கேயிருக்கும் இந்த நாட்டில் அதிகாரமிக்க அரசு பல ஆண்டுகளாகக் கிடையாது, ஹிஸ்புல்லா என்கிற ஆயுதம் ஏந்திய அமைப்பின் கட்டுப்பாட்டில் பெரும்பகுதிகள் இருக்கிறது. 1982ஆம் ஆண்டு இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமித்த போது இரான் நாட்டின் உதவியோடு உருவாக்கப்பட்ட அமைப்பு ஹிஸ்புல்லா, அவர்களுக்கு அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தற்சமயம் பதினைந்து உறுப்பினர்கள் இருக்கிறார்கள், சுமார்  இலட்சம் ஆயுதம் ஏந்திய படைகள் இருப்பதாக நம்பப்படுகிறது.  இவர்களுக்கும் இஸ்ரேலுக்கும் எப்பொழுதும் சண்டை நடந்து கொண்டேயிருக்கும், நம்மூரில் தீபாவளிக்கு, உள்ளூர் தலைவர் இறப்பிற்குத் தான் சாதா பட்டாசு வெடிப்போம், இவர்கள் அடிக்கடி ஒருவருக்கு ஒருவர் ஏவுகணைகளை அப்பாவி மக்கள் வசிக்கும் இடங்களில் மாறி மாறி எய்துவார்கள், பலர் இறப்பார்கள், துரதிருஷ்டவசமாக இதெல்லாம் அங்கே சர்வ சாதாரணம். இப்படியிருக்கக் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இவர்களின் பழிக்கு-பழி கொலைகள் நாடுகளைக் கடந்து எல்லைகளைக் கடந்து நடந்து கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக  ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை அழிக்க இந்தத் தாக்குதல்களைச் செய்தது இஸ்ரேல் நாட்டின் உளவுத் துறை என்று நம்பப்படுகிறது. சரி, எல்லா இடங்களிலும் ஒரே சமயத்தில் எதை வெடிக்க வைத்தார்கள்?

17 செப்டம்பர் 2024 செவ்வாய்க்கிழமை அன்று வெடித்தது சின்ன சிறிய பேஜர் கருவிகள். பேஜர்கள் கண்டுபிடிக்கப்பட்டது அமெரிக்காவில் 1950களில். ஒருவர் எந்த இடத்தில் இருந்தாலும் அவருக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பப் பயன்படுத்தப்படுவது இந்த பேஜர். 1990களில் ஒரு சமூக அடையாளமாகவே வெகு பரவலாகவே இருந்தது, செல்பேசியின் வரவால் சில ஆண்டுகளிலேயே இந்தியா மற்றும் பல நாடுகளிலும் மறைந்துவிட்டது இந்த பேஜர்கள். செல்பேசி என்றால் இன்றும் கூட பல இடங்களில் கட்டிடங்களின் உட்புறங்களில் தொடர்பு கிடைக்காது, ஆனால் பேஜர் வேலை செய்யும், தடங்களின்றிச் செய்திகளைப் பெற முடியும். இவை இயங்குவது நாம் வானொலியில் பாடல்கள் கேட்கும் பண்பலை அலைவரிசை அமைப்பைக் கொண்டவை. சென்னை ஹலோ-எப்-எம் நிகழ்ச்சிகளை மகாபலிபுரம் வரை கூட நம்மால் கேட்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம் இந்த அலைவரிசைகளில் அனுப்பும் ஒலிபரப்புகளால் அதிகத் தூரங்களைக் கடக்க முடியும், ஆனால் அதிகத் தகவல்களைச் செலுத்த முடியாது. இதற்கு எதிர்மாறானவை செல்பேசியில் பயன்படுத்தும் 4ஜீ-5ஜீ அலைவரிசைகள், இவற்றைக் கொண்டு சிறிய தொலைவிற்கு ஆனால் அதிகத் தகவல்களை இருபுறமும் அனுப்ப இயலும். ஒரு சில சிறப்பு வகைகளைத் தவிர்த்து பேஜரில் பொதுவாகக் குறுஞ்செய்தியைப் பெற்றுக் கொள்ள முடியுமே தவிர, பதில் அனுப்ப முடியாது. இவற்றில் நாம் இருக்கும் இடத்தைச் செல்பேசியைப் போல ஜீ.பி.எஸ். செயற்கைக்கோள்களைக் கொண்டு கண்டு கொள்ள முடியாது, இணையச் சேவைகளும் கிடையாது, செயலிகள் கிடையாது – இந்தக் காரணங்களால் பேஜர்கள் பாதுகாப்பானது என்று நம்பப்படுகிறது. பல நாடுகளில் பாதுகாப்பு அமைப்பினர்களும், மருத்துவர்களும் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

உலகளவில் செல்பேசி, இணையப் பாதுகாப்பு மற்றும் அதிலிருக்கும் ஓட்டைகளைத் தங்களின் உளவு வேலைகளுக்காக  உருவாக்குவதும் அல்லது அதைக் கண்டுபிடித்து யாருக்கும் சொல்லாமல் இருப்பதில் இஸ்ரேல் அமெரிக்காவைவிடக் கில்லாடி என்பதால், செல்பேசியை அவர்களின் எதிரிகள் பலரும் பயன்படுத்துவது கிடையாது. இந்தியாவில் கூட சென்ற 2021ஆம் ஆண்டு இஸ்ரேல் உளவு மென்பொருளைக் கொண்டு எதிர்க்கட்சியினரை அரசு உளவு பார்த்தது என்கிற குற்றச்சாட்டு வந்தது நினைவில் இருக்கலாம். இந்தக் காரணங்களுக்காக இஸ்ரேலால் உளவு பார்க்கக் கூடிய செல்பேசியைத் தவிர்த்து, ஹிஸ்புல்லா தலைவர்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பி பேஜர்களைப் பயன்படுத்தி வந்தார்கள். அப்படி நம்பி பயன்படுத்திய பேஜர்களைக் கொண்டு இந்தத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியிருக்கிறது.

நான் மின்னணு பொறியாளர் என்பதால்,  எப்படி ஒரு சின்ன சிறிய பேஜர் வெடிக்கும் என்று யோசித்தேன். நெருப்பெட்டியைவிட அளவில் சிறியது இன்று கிடைக்கும் பேஜர்கள். அதிலிருக்கும் ஆக்கக்கூறுகளில் வெடிக்கக்கூடியது என்றால் அது மின்கலம் (பேட்டரி) மட்டுமே, ஆனால் அவையும் மிகச் சிறிய அளவில் ஆனது, அவற்றுக்கு இந்தளவு வெடித்துச் சிதறவைக்கும் திறன் கிடையாது. பெரும்பாலான பேஜர்களில் நம் வீட்டிலிருக்கும் சுவர்க் கடிகாரங்களுக்கு, குழந்தைகளின் பொம்மைகளுக்குள் போடும் ஏஏஏ வகை அளவில் பேட்டரி இருக்கும். இவற்றினுள் சேமிக்கக்கூடிய சக்தி 500 மில்லி-ஆம்ப்-ஹவர், நம் கையில் செல்பேசியில் இருக்கும் பேட்டரின் சக்தி இது போன்று பத்து மடங்கு. எப்படி என்ற புதிருக்கு அடுத்த நாட்களில் இதற்கான விடைகள் வரத் தொடங்கியது. இந்தத் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டவை தைவான் நிறுவனம் ஒன்றின் படைப்புகள், ஆனால் தயாரிக்கப்பட்டது ஐரோப்பாவில் ஹங்கேரியில் இருக்கும் ஒரு நிறுவனம், இந்த நிறுவனமே இஸ்ரேல் உளவு அமைப்பினால் இதற்காகவே உருவாக்கப்பட்டது என்றும் தகவல்கள் வருகிறது. அங்கே இந்த பேஜர்களின் உள்ளே நெகிழி வகைச் சக்தி வாய்ந்த வெடி மருந்தையும் அதை வெடிக்கச் செய்யும் சொடுக்கியையும் மறைத்து வைத்திருக்கிறார்கள் இஸ்ரேல் உளவாளிகள் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். பொதுவாக ஒரு பேஜர் சுமார் நூறு கிராம் எடையிருக்கும், உள்ளே வைக்கப்பட்ட வெடி மருந்தின் எடை ஐந்து கிராம் தான் இருந்திருக்கும் என்பதால் பயனர்களுக்குச் சந்தேகம் வரவில்லை.

இதைப் பல்லாயிரக் கணக்கிலான பேஜர்களில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகச் செய்வது மிக மிகக் கடினம், பல மாதங்கள் முன்னரே இது நடந்திருக்க வேண்டும். இப்படிப் பல மாதங்களாக ஆழ் உறக்கத்தில் இருந்த வெடிகளை, ஒரே சமயத்தில் இயக்கத் தேவையான சிறப்புச் சமிஞ்ஞையைத் துல்லியமாக அனுப்ப அந்தந்த பேஜர் நிறுவனத்தின் கட்டளை மையங்களில் இருக்கும் மென்பொருட்களினுள்ளும் இஸ்ரேல் பொறியாளர்கள் ஊடுருவி இருக்கக்கூடும். இந்த பேஜர்களை வாங்கி சில மாதங்களே ஆகி இருக்கும் என்று நினைக்கிறேன், அதனால் தான் ஆயிரக் கணக்கான கருவிகளில் எதுவும் பழுதாகி உள்ளூர் ஆல்-இன்-ஆல் அழகு ராஜாக்கள் யாரும் கழட்டிப் பார்த்திருக்கவில்லை.

பொதுவாகப் பெரும்பாலானவர்கள் தங்களின் பேஜர்களை அவர்களின் இடுப்பு பட்டையில் தான் அணிவார்கள். இந்தத் தாக்குதலில் முதலில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த அறிவிக்கை ஒலி வந்தவுடன், என்னவென்று பார்க்கப் பலரும் எடுத்துப் பார்க்க முகத்திற்கு எதிரே கொண்டுவரும் சமயம் வெடித்திருக்கிறது, இதனாலேயே பலருக்கும் கண், முகப்பகுதிகளில் பெருங்காயம். இந்த வகைத் தாக்குதலில் அந்தச் சமயம் அந்த பேஜர் யாரிடம் இருக்கிறது, அவருக்கு அருகில் யார் யார் இருக்கிறார்கள் என்று தொலைவிலிருந்து இயக்கும் உளவாளிகளுக்குத் தெரியாது, அதனால் பல அப்பாவி, பொதுமக்களும் சிறுவர்களும் இந்தத் தாக்குதலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதல் நடந்த அடுத்த நாளில், இறந்தவர்களின் இறுதி சடங்களில் கலந்து கொண்டிருந்த ஹிஸ்புல்லா படையினர் பலரின்  வாக்கி-டாக்கி (நடைபேசி) கருவிகளும் வெடித்துள்ளது. இதிலும் பலர் இறந்துள்ளார்கள். இந்த  வாக்கி-டாக்கிகளை தயாரித்தாக இருக்கும் பெயர் ஐ-காம், இது ஜப்பானில் இருக்கிறது, இந்த வகைக் கருவிகளை அவர்கள் கடைசியாகத் தயாரித்தது பத்தாண்டுகளுக்கும் முன்னர் என்று தெரிகிறது.

இந்த பேஜர்கள் தாக்குதலில் இந்தியாவில் பிறந்த ஒருவரின் தொடர்பு இருந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வருகிறது. கேரளாவில் பிறந்து தற்போது நார்வே நாட்டின் குடிமகனான ரின்சன் ஜோஸ் என்பவரின் பல்கேரிய நிறுவனம் இந்த பேஜர்கள் விற்பனையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சர்வதேசப் பாதுகாப்பு அமைப்பினர்கள் விசாரிக்கிறார்கள். இந்த விசயத்தில் வரும் நாட்களில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வரலாம்.

இந்தத் தாக்குதலைச்  செய்தவர்கள் செய்தது, தங்களின் தற்சமய ராணுவ நோக்கில் வெற்றியாக இருந்தாலும், தொலைநோக்குப் பார்வையில் பொறுப்பில்லா செயலாகப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட முறை இதோடு நின்றுவிடப் போவதில்லை. இதைப் பின்பற்றி தீவிரவாத அமைப்புகள் பல நாடுகளில் இருக்கும் அப்பாவி மக்களைத் தாக்கக்கூடும். நாம் அனைவரும் நம் செல்பேசியை நம் மேல் சட்டை அல்லது கால் சட்டைப் பையில் வைக்கிறோம், பேஜரைவிட பெரிய கருவியான செல்பேசிகளில் மேலும் அதிகமான வெடி மருந்தை மறைக்க முடியும். அதனால் பாதிப்பு இன்னும் அதிகமாகவிருக்கும்.  இதன் அதிர்வுகள் நம் ஒவ்வொரு விமானப் பயணத்தின் போதும், நாம் எதிர் கொள்ளப் போகும் கூடுதல் பாதுகாப்பு சோதனைகளில் உணரக்கூடும்.

உளவு வேலைகளைத் தங்களின் கருவிகள் மூலம் அவர்கள் செய்யக் கூடும் என்பதால், சீனாவின் ஹூவாய் நிறுவனத்தைப் பல மேலை நாடுகளிலிருந்து வெளியேறக் கட்டளையிட்டது என்பதை நினைவில் கொள்ளலாம். இப்போது நடந்ததோடு இதையும் இணைத்துப் பார்த்தால் நாம் எல்லோரும் அச்சப்படத் தான் வேண்டும். எப்படி அமெரிக்காவில்  செப்டம்பர் 2001ஆம் ஆண்டில் நடந்த இரட்டைக் கோபுரங்களின் தாக்குதலுக்குப் பின்னர், உலகளவில் பாதுகாப்புகள் அதிகமானதோ அது போல இப்போதும் ஆகும் என்று ஊகிக்கலாம், மேலும்  இந்த வகை வெடி மருந்துகளைச் சுலபமாகக் கண்டுபிடிக்கும் புது முறைகளும் வரக்கூடும் என்று நம்புவோமாக.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading