அமெரிக்கா ஏன் ₹141 லட்சம் கோடி செலவில் ஏவுகணைகளை உற்பத்தி செய்கிறது?

எல்லோரும் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை தி நியூயார்க் டைம்ஸ் ( NYT ) இதழில் வெளிவந்துள்ளது. வருங்காலத்தில் இந்த உலகம் இருக்குமா, நம் சந்ததியினர்கள் இங்கே வாழ்வார்களா என்பதைத் தீர்மானிக்கக் கூடிய விசயத்தைப் பற்றிய கட்டுரை இது.

அதி வேகமாகத் தனது இராணுவ வளங்களைப் பெருக்கிவரும் சீனாவை எதிர் கொள்ள, வட கொரியா மற்றும் ஈரான் நாடுகள் அணு ஆயுதத் திட்டங்களை விரிவுபடுத்தி வரும் நிலையில், போரில் இருக்கும் ரஷ்யாவைச் சமாளிக்க என்று அமெரிக்கா தனது ஆயுதக் களஞ்சியத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 30 ஆண்டுகளில் மொத்தமாகச் சுமார் $1.7 டிரில்லியன் (₹1,41,100,000 கோடி அதாவது ₹141 லட்சம் கோடி) செலவிடத் திட்டமிட்டுள்ளது என்று எழுதியுள்ளது நியூயார்க் டைம்ஸ் (கட்டுரை இணைப்பு கீழே).

அடுத்த முப்பது ஆண்டுகளில் அமெரிக்கா மட்டும், ஆண்டுக்கு 57 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் சுமார் ₹4,73,100 கோடி), தங்களது நீர்மூழ்கிகளில் மற்றும் உள்நாட்டில் இருக்கும் பதுங்குக்குழிகளில் இருக்கும் அணு அயுத ஏவுகணைகளைப் புதிதாக நிறுவ இருக்கிறது. படிக்க படிக்க பிரமிப்பாகவும் இருக்கிறது, பயமாகவும் இருக்கிறது. ஏன் என்று தெரிந்து கொள்ளத் தொடர்ந்து படிக்கவும்.

டைம்ஸ் கட்டுரையில் வெளிவந்துள்ள படங்களைப் பாருங்கள். இது வரை அமெரிக்காவிடம் ஐம்பது ஆண்டுகளாக இருந்த ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்கள் பழையதாகிவிட்ட நிலையில், அவற்றுக்குப் பதிலாக இவை எல்லாம் புதிதாக நிறுவப்படப் போகிறது. அமெரிக்காவின் பல மாநிலங்களில் இருக்கும் விவசாய நிலங்களின் அடியில் மிக ஆழத்தில் வைக்கப்படப் போகிறது இந்த அதி நவீன ஏவுகணைகள். உலகின் எந்த மூலையிலும் இருக்கும் இடத்தை முப்பதே நிமிடங்களில் தாக்கக்கூடிய இந்த அணு ஏவுகணைகள் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது அமெரிக்க போட்ட இரண்டு அணுக் குண்டுகளைவிட அதிக அழிவைச் செய்யக்கூடியவை. பல கோடி மக்களை நிமிடங்களில் கொல்லக்கூடியவை. நிலத்தைத் தாண்டி 12 அணு நீர்மூழ்கிக் கப்பல்களிலும் இவை இருக்கப் போகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக நடந்துவரும் இந்தப் பணிகள் அடுத்த முப்பது ஆண்டுகள் தொடரும் என்கிறார்கள். மொத்தமாக இந்தப் பணியில் ஓர் இலட்சத்திற்கு மேலான ஆராய்ச்சியாளர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் நிறுவன பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்களாம்.

அமெரிக்கா உலகின் பெரிய பணக்கார நாடு. இந்த ₹141 லட்சம் கோடி அதிகமான பணம் என்றாலும் இதனால் அந்த நாட்டின் வரிவருவாய்க்கு, வேலை வாய்ப்புக்கு என்று இந்தச் செலவால் அவர்களின் மக்களுக்குப் பயன் மிக அதிகமாக இருக்கும். மேலும் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு இந்தச் செலவு பெரிய விசயமே இல்லை. தங்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவர்களின் கடமை, உரிமையும் கூட, அதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.

டைம்ஸ் கட்டுரையில் சொல்லியுள்ளது போல, இந்த உற்பத்தி பெருக்கத்தின் சோகம் என்னவென்றால் – இவ்வளவு செலவு செய்து உருவாக்கும் ஒரு குண்டு கூட வெடிக்கப் போவதில்லை – வெடிக்கும் நிலைமை வந்தால் உலக அழிவு நிச்சயம் – வெடிக்காமல் இருக்க வேண்டும் என்று இந்தப் பணியில் இருக்கும் இலட்சம் மக்களும் தினம் வேண்டிக் கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். அதோடு இந்தப் பணிகளுக்கு வேலைக்கு ஆட்களைத் தயார் செய்ய, பத்து வயது பள்ளி மாணவர்களிடம் நீர்மூழ்கிக் கப்பலைப் பற்றி பாடம் எடுத்து அமெரிக்க இராணுவம் அவர்களைக் கவருகிறதாம் – பிஞ்சு மனங்களில் இது எந்தவகை தாக்கத்தை உருவாக்கும் என்பது பயமாக இருக்கிறது. தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் இளம் வயதில் நாட்டுப்பற்றை விதைப்பது எல்லா நாடுகளும் செய்யும் செயல், ஆனால் அணு ஆயுத உற்பத்திக்குச் சிறுவர்களைக் கவர்ந்து, அவர்கள் வளர்ந்தவுடன் வர வைப்பது உறுத்துகிறது.

அணு அயுதங்களே வேண்டாம் என்பது இன்றைய உலகில் சாத்தியமில்லை, அது முட்டாள்தனமானதும், பொறுப்பற்றதாகவும் இருக்கும், இந்தளவு பிரமாண்டமாக, இத்தனை ஆயிரம் ஏவுகணைகள் வேண்டுமா, இதில் ஒரு நூறு வெடித்தாலும் அடுத்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு உலகில் கரப்பான்பூச்சி, புல், பூண்டுக் கூட வளர முடியாது.

அதோடு இந்தப் பிரமாண்ட அணு ஏவுகணைகள் பெருக்கத்தால் உலகளவில், குறிப்பாகத் தன்னிச்சையான நாடுகளையும் இத்தகைய உலக அழிவு குண்டுகளைத் தயார் செய்யத் தூண்டிவிடும் (ஏற்கனவே பலவும் செய்ய முயன்று கொண்டிருக்கிறது). அதற்கு அடுத்த வரும் சில பத்தாண்டுகளில் உலகம் தயாராக இருக்கிறதா என்பது சந்தேகமே. பெரிய நாடுகள் அனைத்தும் அவர்களின் உள்நாட்டு நலனை மட்டுமே பார்ப்பதாகத் தோன்றுகிறது. அதைவிட அச்சமளிக்கும் நிலைமை உலகளவில் இந்தச் சவாலை ஏற்று வழிநடத்தும் உலக தலைவர்கள் யாரும் இருப்பதாக என் கண்ணிற்குத் தெரியவில்லை.

யார் செய்த புண்ணியமோ சோவியத்-அமெரிக்கப் பணிப் போரில் பூவுலகம் அழியவில்லை, அதனால் தான் நான் இதை 2024இல் எழுதமுடிகிறது, நீங்களும் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், ஐக்கிய நாடுகள் அமைப்பு பலம் இழந்து கொண்டிருக்கும் இன்றைய காலத்தில், இந்த அதி நவீனக் கட்டுப்பாடற்ற அணு ஆயுதப் போட்டி ஆபத்தில் போய் முடியாமல் இருப்பது இறைவன் கருணையில் இருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை!

ஓம் சாந்தி. ஓம் சாந்தி. ஓம் சாந்தி.

நன்றி: The Price by W.J. Hennigan, Photographs by An-My Lê. The New York Times


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading