ஜென் கதைகள் நம்முள் நாமே சென்று பார்த்துக் கொள்ளச் செய்பவை. மிகச் சில வார்த்தைகள், அல்லது ஓரிரு வரிகளே விடையென்று சொல்லிச் செல்பவை இவை. தீவிரமாக நம் வாழ்க்கையை ஆராயச் சொல்லிக் கொடுக்கக் கூடியது. ஓஷோ அவரின் பல உரைகளில் இவற்றை வேடிக்கையாகச் சொல்லிச் செல்வார். இப்படியான ஜென் கதைகளை ஊக்கமாகக் கொண்டு வேடிக்கையாகக் கதைகளை உருவாக்கும் முயற்சியில் மெட்ராஸ் பேப்பர் ஆசிரியர் திரு பா ராகவன் வெற்றி பெற்றுள்ளார். ஜீரோ டிகிரி பதிப்பகத்தில் கிடைக்கும் “ஜென் கொலை வழக்கு – நவீன நாசகார ஜென் கதைகள்” புது நூலில்.
இந்த சிறு கதைகள், ஒவ்வொன்றும் மூன்று அல்லது நான்கு பக்கங்கள் தான். முதலில் இவை வெளிவந்தது பா. ரா.வின் வாட்ஸ்-ஆப் குழுவில், தமிழில் இதுவே முதல் முயற்சி என்று நினைக்கிறேன். செல்பேசியின் சிறியத் திரையில் தினமும் காத்திருந்து ‘வாட்ஸ்-ஆப்’பில் படித்தால் சுவாரஸ்யம் இருக்காது என்பதால், புத்தக அறிவிப்பு வந்தவுடன் வாங்கிப் படித்தேன், மகிழ்ந்தேன், ரசித்தேன்.
மொத்தம் முப்பது கதைகள். எல்லாமே நம்மை சிரிக்க வைக்கக் கூடியது. பல கதைகளில் தீவிரமான வாழ்வியல் கேள்விகளை மாணவர்கள் கேட்க, ஜென் குருமார்கள் ஏதோ வாய்க்கு வந்ததை விடையாகச் சொல்கிறார்கள். தீவிரமான ஒரு விசயத்தை இப்படியும் பார்க்க முடியுமா என்று ஆச்சர்யப் படுத்துகிறார் ‘பா ரா’.
‘பா ரா’வின் ஜென் கதைகளில் வரும் மடங்களில் தேர்தல் உண்டு, போட்டியும் உண்டு, ஏன் சண்டைகளும் கைகலப்பும் கூட உண்டு. சைதாப்பேட்டை மீன் மார்க்கெட் வருகிறது. ‘மதுசூதன்’ மினொரு என்கிற பெயர் கொண்ட ஜென் குருவும் வருகிறார். வித்தைக்காரர் என்கிற கதையில், செல்பேசிகளின் மீது ஆர்வமிருப்பவராக ஒரு குரு வருகிறார். பல சமூக வலைத்தளங்களில் வெவ்வேறு கணக்குகள் வைத்திருக்கும் ஒரு குருவும் இருக்கிறார். இன்னொரு கதையில் ஓ.டி.டி. தளங்களும் கூட வருகிறது. குரு ஜல்ஸாசான், பிரியாணி சாப்பிடும் போது ஞானம் அடைந்தவர் என்று நம்மை திகைக்கவைக்கிறார் பா.ரா. அது மட்டுமா, டீ கடை வைத்திருக்கிறார் ஒரு ஜென் குரு. ஒரு கதையில் பாண்டம், பண்டம் என்று வார்த்தைகளைக் கொண்டு விளையாட்டும் செய்கிறார் ஆசிரியர்.
இந்த நூலில் இன்னொரு சிறப்பு, இதில் வரும் ஒவ்வொரு கதைக்கும் ஏற்ற படங்களை வரைந்திருப்பது இயற்றறிவு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். அமேசானில் மற்றும் பதிப்பகத்தில் கிடைக்கும் இந்த நூலைப் பலரும் வாங்கி உங்கள் கவலைகளை ஓரிரு மணி நேரங்கள் மறந்து சிரிக்கலாம்.

Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.

