இன்றிலிருந்து டிவிட்டர் நிறுவனம், முக்கியமான பிரபலங்கள் பலருக்கு இலவசமாகக் கொடுத்திருந்த புளூ (நீலம்) முத்திரையை பிடுங்கிவிட்டது. இனி காசுக் கொடுத்தால் தான் புளூ முத்திரை. இதில் சாதகமும் இருக்கிறது, பாதகமும் இருக்கிறது. ஒரு பிரபலத்தின் அல்லது அதிகாரியின் டிவிட்டர் கணக்கு உண்மையா, பொய்யா என்று அறிந்து கொள்வதில் இனி சிக்கலாகும்.

அது ஒரு புறம் இருக்க, நான் இதைச் சற்று வித்தியாசமாகப் பார்க்கிறேன். இதுவரை இலவசமாகக் கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்ததால் பயனாளர்களாக  நாம் அவர்களை எந்தக் கேள்வியும் கேட்க முடியவில்லை. சேவைகளை அவர்கள் நமக்கு இனாமாகக் கொடுத்ததால் நமக்கு அவர்களிடம் எந்தவித உரிமையும் இல்லை, சேவை சரியாக வேலை செய்யவில்லை என்றாலும் நாம் அவர்களின் உதவியை நாட முடியாது. நாமாகவே  இணையத்தில் தேடிச் சரி செய்து கொள்ள வேண்டும், அல்லது அழித்துவிட்டு புதுக் கணக்கைத்  தொடங்கிக் கொள்ள முடியும். அவர்கள் நம் தரவுகளை அவர்களின் செயற்கை நுண்ணறிவு பயிற்சிக்குப் பயன்படுத்துவதைத் தடுக்க / கேள்வி கேட்க முடியவில்லை.

டிவிட்டர் புளூ சேவைக்கு நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் கூட நாம் ‘இலவச’ பயனர் என்பது மாறி, வாடிக்கையாளர் என்றாகிவிடுவோம். நமக்கு அவர்கள் மொபைல் நிறுவன வாடிக்கையாளர் சேவை போன்று மட்டமாகவாவது உதவி செய்தாக வேண்டும். அவர்கள் இஷ்டத்திற்கு நம் கணக்கை முடக்க முடியாது – காரணமாவது சொல்ல வேண்டும் – நம் மனத் திருப்திக்குத் திட்டவாவது முடியும்.

இலான் மாஸ்க் நல்லது தான் செய்கிறார். காசு கொடுத்தால் காசு/நேரம் மிச்சம் செய்யலாம். தூசி எல்லாம் அடங்கியவுடன், கூடுதல் வசதியைப் பொறுத்து டிவிட்டருக்கு நான் பணம் கட்டிவிடுவேன். ஏற்கனவே ஒரு டஜன் சேவைகளுக்குக் கட்டுகிறேன்  – மைக்ரோசாப்ட் 365, கூகிள் ஒன், டிராப்பாக்ஸ், ஸ்ட்ராங்க்பாக்ஸ், எவர்நோட், பிளெக்ஸ், மற்றும் சில.

Tagged in: