இரண்டு நாட்களுக்கு முன் ஆரம்பித்தது. முதலில் வறட்டு தொண்டை மற்றும் சோர்வு. நேற்று அது முன்னேறிக் காய்ச்சல், அதீத உடல் வலி, பயங்கரச் சோர்வு என ஆனது. மருத்துவரைப் பார்த்தேன், வழக்கமான மாத்திரைகள் எழுதிக் கொடுத்து நான்கைந்து நாட்களில் சரியாகிவிடும் என்றார். இன்று பரவாயில்லை. சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில் பரவும் தொற்றுகள், இந்த ஆண்டு மார்ச் வரை தொடர்வது புதிர். நான் புத்திசாலியாகத் தப்பித்துவிட்டேன் என நினைத்தேன் – மெட்ரோ, திரையரங்கு, கல்யாண மண்டபம், பல் பொருள் அங்காடிகள் எனக் கூட்டமான இடங்களில் எப்போதும் N95 மாஸ்க் அணிந்து தான் செல்கிறேன், சனிடைசர் பயன்படுத்துகிறேன், பெருந்தொற்று முடிந்தும் கூட. இருந்தும் இந்த வருட ஃப்ளூ என்னைப் பிடித்துவிட்டது.

இரண்டு வாரம் முன்னர் என் பையன் கல்லூரியில் ஆண்டு விழா, அதிலிருந்து அவன் கொண்டு வந்ததாகத் தான் இது இருக்க வேண்டும். அவனுக்குப் போன வாரம் சளி, இருமல், வேறு எதுவும் தொந்தரவு இல்லை. அவனை உடனே தனிமைப் படுத்தியாயிற்று. அவனும் என்னைப் போல முகக்கவசம் அணிந்து தான் இரயிலில் செல்கிறான், இருந்தும்.

இதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது, வயதானவர்கள் (எண்பதைக் கடந்த என் அம்மா) உடன் இருப்பதால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது.

உடல் நலம் விஷயத்தில் நான் எப்போதும் கொஞ்சம் ஜாக்கிரத்தை ஆகத் தான் இருப்பேன், முடிந்தளவு நானாக மருந்துகளை எடுத்துக் கொள்ள மாட்டேன். எந்தச் சிறப்பு மருத்துவரைப் பார்த்தாலும் என் குடும்ப மருத்துவரிடம் சரிபார்த்துவிடுவேன் அவர் சரி என்று சொல்லிவிட்டால் வேறு பலரைக் கேட்டுக் கொண்டு, குழம்பிக் கொண்டிருக்க மாட்டேன். மருத்துவத்தை விட மருத்துவரை நம்ப வேண்டும், நம்பிக்கையானவரையே மருத்துவராக வைத்துக் கொள்ள வேண்டும்.

[குறிப்பு: நம்பிக்கையான மருத்துவரை எங்கே தேடுவது, எப்படித் தேர்வு செய்வது என்றெல்லாம் கேட்கக் கூடாது. எனக்குத் தெரியாது. பல வருடங்களாக எங்கள் குடும்ப நண்பர்/மருத்துவரின் மகன் தான் இப்போது எனக்கு மருத்துவர்]

Categorized in:

Tagged in: