இன்று (18 ஜூன் 2022) வந்த செய்தி, “புளோரிடா பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்குத் தனித் துறை”. இந்த முயற்சியை எடுத்துள்ள அமெரிக்கத் தமிழர்கள் சிலர், தமிழக அரசு இதற்கு தாயுள்ளத்தோடு (சில மில்லியன் டாலர்) கொடையளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். இது எனக்குப் புரியவில்லை. நான் தவறாகப் பார்க்கிறேனா? புரிந்தவர்கள் விளக்கினால் தெரிந்துக் கொள்வேன்.

உலகம் முழுவதும், குறிப்பாக அமெரிக்காவில் இருக்கும் வசதியானப் பல்கலைகளைக்கு எதற்கு தமிழக பாட்டாளி அவளது வரிப்பணத்தை நன்கொடையாகக் கொடுக்க வேண்டும்? அங்கே தமிழ் அமர்வுகள் வந்தால் நமக்கும் மகிழ்ச்சி தான். அதற்கு அங்கேயுள்ள தமிழர்கள் / இந்தியர்கள் தான் கொடையளிக்க வேண்டும்.விருப்பப்பட்ட தயவாளர்களைக் கேட்கலாம். அவர்களும் செய்கிறார்கள் என்று தான் நினைக்கிறேன். அதோடு சேர்த்து அவர்கள், இங்கே (தமிழகத்தில் /இந்தியாவில்) இருக்கும் வசதியில்லாத பல தமிழ் ஆராய்ச்சிகளுக்கு நன்கொடை தர வேண்டும், அப்படி செய்தால் நம் மாணவர்களும், வல்லுநர்களும் பல அரிய தமிழ்ப் படைப்புகளைத் தமிழுக்குத் தருவார்கள்.

ஏன், வெளிநாட்டில் செய்யும் ஆராய்ச்சி தான் சிறந்ததா? நம் நாட்டின் ஆராய்ச்சி மட்டம் என்றே வைத்துக் கொள்வோம், முதலில் அதைச் சரி செய்யத் தானே நாம் பணத்தைச் செலவு செய்ய வேண்டும்? அதைவிடுத்து பெருமைக்காக அமெரிக்காவுக்கு மேலும் பணத்தைக் கொடுக்க வேண்டுமா?

தமிழக அரசே கடன் சுமையில் இருக்கிறது (யார் யார் காரணம் என்பது இங்கே வேண்டாம்). இங்கேயே வசிக்கும் ஏழை குடிமக்களுக்கு, இங்கே இருக்கும் பல பல்கலைகளுக்கே பல சமயங்களில் நிதி நெருக்கடி வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசைக் கேட்பது சரியாக எனக்குப் படவில்லை. அரசிடம் நிறைய நிறையப் பணமிருந்தால் உலகம் முழுவதும் தமிழ் அமர்வுகளை நிறுவலாம், to spread our soft power, அதற்கான காலம் தமிழனுக்கு வரும், அது இப்போதில்லை.

இதற்கு விதிவிலக்கு செய்யத் தமிழக அரசுக்கு உரிமையிருக்கிறது. சில அரிய சந்தர்ப்பங்களில் வெளிநாட்டு பல்கலைகளைக்கு பணம் கொடுக்கலாம். அப்படி தான், தமிழக அரசு, ஹார்வர்ட் தமிழ் அமர்வுக்கு கொடையளித்தது. அப்படி ஒன்றிரண்டுக்கு அரசு செய்தல் கடமை, செய்தால் போதும்.

இந்தக் கருத்தைப் பகிர எனக்கு உரிமையிருக்கிறது, இங்கே இருக்கும் பலரைப் போல நானும் வரி செலுத்தும் இந்தியக் குடிமகன். மேலும், 2017யில் நானும் (தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவிற்கு) ஹார்வர்ட் தமிழ் அமர்வுக்கு மகிழ்ச்சியாகக் கொடையளித்தேன் (அதைப் பற்றி அப்போதே பதிவு செய்துள்ளேன்).

Categorized in: