சில வருடங்களுக்கு முன்புவரை ”தமிழ் ராக்கர்ஸ்” என்கிற திரைப்படங்களைத் திருட்டுத்தனமாக, இலவசப் பதிவிறக்கம் செய்யக்கூடிய இணையத்தளத்தைத் தெரியாத தமிழர்கள் உலகெங்கிலும் யாருமே இருந்திருக்க மாட்டார்கள்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓ.டி.டி. என்கிற சந்தா கட்டி படங்களைப் பார்க்கும் இணையச் சேவைகள் வந்த பின்பு தமிழ் ராக்கர்ஸ் காணாமல் போனது. பல வருடங்களாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர் சங்கம், தமிழக அரசு, காவல்துறை, நீதிமன்றம் என்று பல்வேறு தரப்பினர்கள் முயற்சி செய்தும் நிறுத்த முடியாத தமிழ் ராக்கர்ஸ், ஓ.டி.டி. வருகையால் (சந்தைப் பொருளாதாரத்தின் வெற்றி எனக்கூட பார்க்கலாம்) வெற்றிகரமாக நிறுத்தப்பட்டுள்ளது. அவர்களை மாதிரியே நிறையப் புதியவர்கள் வந்தாலும், அவையெல்லாம் தமிழ் ராக்கர்ஸ் போன்று பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகமே.

இந்தத் தமிழ் ராக்கர்ஸ் யார் என்று இதுவரை தெரியாதப் புதிராகவே இருக்கிறது. பல்வேறு யூகங்கள், சினிமா துறையிலிருந்தும், பத்திரிகைகளும் வெளிவந்திருக்கிறது. ஆனால் இதுவரை அவர்கள் யார் என அறுதியிட்டுத் தெரியவில்லை.

இந்தப் பின்னணியில் “தமிழ் ராக்கர்ஸ் – தோற்றமும், மறைவும்” என்கிற புத்தகத்தைச் சமீபத்தில் பேஸ்புக்கில் பார்த்தேன். அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தாலும் விலை ரூபாய் 49 தான் என்பதாலும் இந்தப் புத்தகத்தை அமேசானில் வாங்கிப் படித்தேன்.

ஒரு புத்தகத்தை வாங்க வைப்பது என்பது இன்றைக்குப் பெரிய சவால் அதை ஆசிரியர் ரிஷிகேஷ் ராகவேந்திரன் செய்திருக்கிறார், அதற்காக அவருக்கு பாராட்டுக்கள். அதற்கு மேல் எவ்வளவு யோசித்தும் சொல்வதற்குப் பெரிதாக எதுவுமில்லை. இதுவரை இணையத்தில் பார்த்த, படித்த, வெளிவந்த விஷயங்களை ஒரு கூட்டு கதம்பமாக போட்டு பக்கங்களை நிரப்பி, புத்தகம் என்று கூறி விலை வைத்து வெளியிட்டுள்ளார். இதுவரை இணையத்தில் தமிழ்ராக்கர்ஸ் பற்றி அல்லது இணையத்தில் திரைப்படங்கள் எப்படி வருகிறது என்பதைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களுக்கு சில விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கலாம், அவ்வளவு தான்.

#tamilrockers #amazonkindle #tamilbook #தமிழ்ராக்கர்ஸ்

Categorized in:

Tagged in:

,