மனிதர்கள் எப்போது மற்ற விலங்குகளைப் போல் அல்லாமல் சடங்குகளை, குறிப்பாக ஈமச் சடங்குகளைச் செய்யத் துவங்கினார்கள் என்று கண்டுபிடிக்கத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பல காலமாக முயன்று வருகிறார்கள். இதைத் தெரிந்துக் கொள்வதால் என்ன பயன்?

இந்த வினாவிற்கு விடைத் தெரிந்தால், பரிணாம வளர்ச்சியைப் பற்றிய மற்ற பல புதிர்களுக்கு அது வழிக்காட்டக்கூடும். இறந்தவர்களை (சடலங்களை) அப்படியே விட்டுவிட்டுப் போகாமல் இருப்பவர்கள் குழுவாக/குடும்பமாக வாழ்ந்திருக்கக்கூடும், நாகரிகம் வளர தொடங்க இந்த அமைப்பு ஒரு முக்கிய அடித்தளம்.

எதற்கு இதையெல்லாம் இங்கே எழுதுகிறேன்? சமீபத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மனிதக் குல தொட்டில் என அழைக்கப்படும் ஆப்பிரிக்காவின் கென்யா நாட்டில், கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஒரு மலைக்குகையில் 78,000 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஓர் இரண்டு (அல்லது முன்று) வயது குழந்தையின் மிச்சங்களைக் கண்டுப்பிடித்துள்ளார்கள். “மோடோடோ” (ஸ்வாஹிலி மொழியில் குழந்தை என்று அர்த்தம்) என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் குழந்தையின் மிச்சங்களில் அப்படியென்ன சிறப்பு?. இங்கே மிச்சம் என்று தான் சொல்கிறார்கள், சடலம் என்று சொல்ல பெரியதாக எதுவுமில்லை, சிறு சிறு எலும்புத் துண்டுகள் தான் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழிந்து இருக்கிறது.

இதில், முதல் சிறப்பு, “மோடோடோ” புதைக்கப்பட்டு இருக்கிறான் (ஆணா, பெண்ணா என்றுக் கண்டுப்பிடிக்க முடியவில்லை), அவன் தூக்கி வீசப்படவில்லை, அப்படியே இறந்து விழவில்லை என்று சொல்கிறார் இங்கிலாந்தில் இருக்கும் தூர்ஹம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் திரு பால் பேட்டிட். அடுத்தது, இது தான் ஹோமோ சேப்பியன் (Homo sapiens) என்று அழைக்கப்படும் ஆதி மனிதனின், ஆப்பிரிக்காவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதிலேயே, மிக பழமையான புதைக்கப்பட்ட சடலம். மோடோடோவின் சடலத்தை உடனிருந்தவர்கள் ஒரு துணிப் போர்வையில் சுற்றி, தலையை ஒரு தலையணையில் வைத்துப் புதைத்திருக்கிறார்கள் – இதெல்லாம் சந்தர்ப்பங்களை வைத்து அறிவியல் ஊகங்கள்.

ஸ்பெயின் நாட்டு அறிஞர் திரு மரியா மார்ட்டின்-தோரஸ் சொல்கிறார், “எண்பதாயிரம் ஆண்டுகள் முன்னிருந்தவர்களின் மனதை நாம் படிக்க முடியாது, ஆனால் இப்படிப் புதைக்கப்படுவதால் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று ஊகிக்க முடியும், இறந்தவர்களை நாங்கள் உடனே மறக்க மாட்டோம், அவர்களை அப்படியே துறந்துவிட மாட்டோம்”. இது பிறப்பு, இறப்பு என்னும் இயற்கையைப் புரிந்துக் கொண்ட ஒரு விலங்கினத்தின் அடையாளம்.

இயற்கையின் மகத்துவத்தை அறிய மரணத்தைப் பார்த்தாலேயே போதும், எண்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் அது ஒன்றுதான் நிலையானது, இப்போதும் அது தான். இந்தப் பூமியில் நாம் வாழும் காலத்தில் நாம் ஒவ்வொரும் நல்லதைச் செய்து நலமாக வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டி இந்தப் பதிவை முடிக்கிறேன்.

இந்தக் கண்டுப்பிடிப்பை பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள இந்த காணொலியைப் பார்க்கவும் அல்லது (National Geographic) நேஷனல் ஜியோகிராபிக் கட்டுரைப் படிக்கவும்.

(Courtesy of the images on the top: Fernando Fueyo, 
María Martinón-Torres, National Research Center on Human Evolution (CENIEH) & 
Mohammad Javad Shoaee, Max Planck Institute for the Science of Human History)

Categorized in:

Tagged in:

,