அம்மா வந்தாள் – திரு தி. ஜானகிராமன்

இதற்கு முன் நான் எழுத்தாளர் தி. ஜானகிராமன் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர அவரின் ஒன்பது நாவல்களில் எதையுமே படித்ததில்லை. அவரின் “மோகமுள்” புதினம் 1995ஆம் ஆண்டு திரைப்படமாக வந்தப் போது பார்த்துள்ளேன், அப்போதே  அவரின் படைப்புகளைப் படித்திருக்க வேண்டும், தவறவிட்டேன்.

கடந்த சில வாரங்களாகத் தனது பேஸ்புக் பக்கத்தில் நண்பர் திரு மாலன் அவர்கள் தி.ஜாவின் நூற்றாண்டு நினைவாக அவரின் படைப்புகளிலிருந்து பல முத்துக்களைப் பகிர்ந்து வருகிறார். அதில் கவரப்பட்டு தி.ஜாவின் “அம்மா வந்தாள்” நாவலை கிண்டிலில் வாங்கிப் படித்தேன். இரண்டு நாட்களாக அதில் வந்த கதாப்பாத்திரங்களும், ஊரும் தான் என் நினைவிலும் கனவிலும் வருகிறது, அந்தளவு என்னைப் பாதித்துவிட்டது.

கதை ஆரம்பிப்பது சித்தன்குளத்துக் காவேரி கரையில். அந்த முதல் பத்தியிலேயே நம்மைக் கட்டிப் போட்டுவிடுகிறார் தி.ஜா, என்ன உவமைப் பாருங்கள்.

// சரஸ்வதி பூஜையன்று புத்தகம் படிக்கக் கூடாது என்பார்கள். ஆனால், அன்று ஒரு நாளுமில்லாத திரு நாளாகப் புத்தகத்தின் மேல் வருகிற ஆசை! கீழே கிடக்கிற – பல் பொடி மடிக்கிற – காகிதத்தையாவது எடுத்துப் படிக்க வேண்டும் என்ற மோகம்! அப்படி ஒரு மோகம் அல்லவா பிறந்திருக்கிறது இன்று இந்தக் காவேரி மீது!//

அதுப் போல் இன்னொரு இடம் பாருங்கள்:

// ஆமாண்டா – கருவேப்பிலைக்கு ஏன் இந்த வாசனைன்னா, நீ புஸ்தகத்தை எடுத்துண்டு கணக்குப் போட ஆரம்பிச்சுடுவே. அவன் ஸ்வாமி கொடுத்த வாசனை  அதுன்னு பளிச்சினு சொல்லுட்டு அக்கடான்னு இருந்துடுவான். நீ ஆன்சர் கண்டு பிடிக்கிறதுக்குள்ளேயும் ஏழுதலைமுறை ஆகி, கருவேப்பிலை வாடி வதங்கி, வாசனைபோய், கருகு வாடை அடிச்சிண்டிருக்கும்.//

இன்னொரு இடம் பாருங்கள்:

//தெருவில் எங்கெங்கோ கிடக்கிற ஏழெட்டு நாய்கள் திடிரென்று நினைத்துக் கொண்டு ஒன்றுகூடி – கச்சேரியில் மிருதங்கம், பானை, டோலக்கு, கஞ்சிரா, கொன்னகொல் எல்லோரும் சேர்ந்து சண்டை போடுவார்களே – அதுபோல், ஒன்றின் மேல் ஒன்று விழுந்து கட்டுப் பட்டாசுபோல் வெடிக்கின்றன//

இப்படி ஒரு வசனம் கதைகளில் தகப்பன், மகனிடம் பேசுவது போல் வருவது அரிது:

// “லோகம் ஆரமிச்ச நாளிலிருந்து சம்பாதிக்கிறவனுக்குத் தான் மதிப்பு. அதுவும் பொம்மனாட்டிகளுக்கு எல்லாம் இருந்தாத்தான் மதிப்பு வரும். நிறைய சம்பாதிக்கணும். அழகா இருக்கனும், முரடாவும் இருக்கணும். புத்திசாலியாவும் இருக்கணும்…எல்லாமாகவும் இருக்கணும்; ஒண்ணு இருந்தால் மட்டும் போராது.”//

அது காவேரி கரையோரம் இருக்கும் ஒரு கிராமமாகட்டும், அல்லது சென்னை திருவல்லிக்கேணியாகட்டும் அந்த இடங்களுக்கே நம்மைக் கூட்டிச் செல்கிறார் தி.ஜா.

புத்தகம் ஆரம்பித்தவுடன் அதன் முடிச்சு இது தான் என்று ஒன்றை நாம் நினைக்கிறோம், கதையின் நாயகன் “அப்பு” அந்தச் சிக்கலை எப்படி கையாளப் போகிறான், அவன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக் கொள்ளப் போகிறான் என்பதை எதிர்பார்க்கிறோம். ஆனால் நாம் எதிர்பார விதமாக நாவலின் நாடியே பின்னர் மாறிவிடுகிறது. எவர்கள் எல்லை மீறுவார்கள் என்று எதிர்பார்த்தோமோ அவர்கள் அதைச் செய்யவில்லை, கதையே வேறு எங்கோ போய்விடுகிறது, அந்தத் திருப்பத்தில் தான் ஆசிரியர் நம்மை அசத்துகிறார். யோசித்துப் பார்த்தால் தலைப்பில் நமக்கு ஒரு துப்புக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.

இந்தக் கதையை எல்லோரும் அம்மாவின் பாத்திரத்திலிருந்து தான் எழுதியிருப்பார்கள், ஆனால் அப்புவை மையப்படுத்தி அம்மாவை அதில் ஒரு பாத்திரமாகப் படைத்திருப்பதே ஒரு தனிச் சிறப்பு.

இந்தக் கதையின் அழகே, ஆசிரியரின் எழுத்து, அது நம் மனக்கண்ணில் ஓட்டும் பிம்பத்தில் தான் இருக்கிறது, அதன் கருக்குலையாமல் ஒரு சினிமாவாக இதை எடுக்கவே முடியாது என்று நினைக்கிறேன்.

தமிழ் வாசகர்கள் படித்து ரசிக்க வேண்டிய நூல்.

தி.ஜானகிராமன் (1921-1983) தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில் இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

திரு மாலன் அவர்களுக்கு 1981இல் தி.ஜா அவர்கள் தனது இளமைக் காலங்களைப் பற்றிய  ஓர் கட்டுரை எழுதிக் கொடுத்துள்ளார், அது முழுவதுமாக இங்கே.

Categorized in:

Tagged in:

, ,