
We need to welcome immigrants coming to Tamil Nadu
“கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் கட்டுமான வேலை செய்ய, தச்சு வேலை செய்ய, தொழிற்சாலைகளில் கடினமான வேலைகளைச் செய்யத் தமிழ்நாட்டில் இருந்து வேலையாட்கள் கிடைப்பதில்லை, வர மாட்டேன் என்கிறார்கள், அப்படியே வந்தாலும் கடினமான வேலைகளைச் செய்யத் தயங்கி வேலையை விட்டு விடுகிறார்கள்”, இதுபோன்ற புகார்கள் பல தொழில் நிறுவனங்களிடமிருந்து நாம் கேட்கிறோம். இன்று சென்னை போன்ற பெருநகரங்களில் நம் வீட்டை சுத்தம் செய்யவோ, சமைக்கவோ, சிறிய குழாய் பிரச்சனையைச் சரி செய்யவோ, தச்சு வேலை செய்யவோ (உள்ளூர் / தமிழ்) ஆட்கள் கிடைக்க மாட்டேன் என்கிறார்கள் என்பது உண்மை. எனக்குத் தெரிந்து பல வீடுகளில் சமைக்க, வீட்டு வேலைச் செய்ய வட இந்தியாவிலிருந்து இந்தி பேசும் ஆட்களை தான் வேலைக்கு அமர்த்தி உள்ளார்கள். இது போலத் தான் பல தொழிற்சாலைகளிலும் நடக்கிறது என்று கேள்விப்படுகிறேன்.
இதற்குப் பல காரணங்கள் கூறுகிறார்கள், “அரசு கொடுக்கும் இலவசத்தால் தமிழர்கள் சோம்பேறி ஆகி விட்டார்கள், அவர்கள் எல்லாம் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் போய் நிழலில் உட்கார்ந்து காசு வாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என்று பல. இதெல்லாம் முக்கியமான காரணங்களாக எனக்குத் தோன்றவில்லை, பெருவாரியானத் தமிழர்கள் இன்றைக்கு (நன்றாக) படித்துவிட்டு மேல்நிலையில் உள்ள வேலைகளுக்குச் செல்கிறார்கள், அவை உள்ளூரில் இருக்கலாம் அல்லது வெளி நாடாக இருக்கலாம், அந்த மாதிரி நல்ல வேலை கிடைக்கும் வரை இளைஞர்களைக் காப்பாற்ற அவர்கள் பெற்றோரிடம் பொருளாதார வசதி தற்போது இருக்கிறது. தமிழ்நாட்டுத் தமிழர்கள் அடிப்படை வாழ்க்கை தரத்தில் முன்னேறிவிட்டதால் தான் சிறு கூலி வேலைக்கு வர மாட்டேன் என்கிறார்கள் என்பதுதான் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. இது தான் காரணம் என்றால், ஒரு விதத்தில் நல்ல முன்னேற்றம் தான்.
அது இலங்கை ஆகட்டும், ஆந்திரா ஆகட்டும், மும்பை ஆகட்டும் தமிழர்களுக்கு வந்தால் அது ரத்தம், அதே மற்றவர்களுக்கு (தமிழ்நாட்டில்) வந்தால் அது தக்காளி சட்னியா?
எந்தக் காரணமாக இருந்தாலும் வட இந்தியர்கள் முன்பைவிட இப்போது தமிழகத்தில் அதிகமாக வந்து வேலை செய்கிறார்கள் என்பது நிதர்சனம். பல்வேறு இடங்களில் இருந்து வரும் மக்கள் ஒரே இடத்தில் வாழும் போது பிரச்சினைகள் நிச்சயம் வரும். தமிழகத்தில் இருக்கும் வேலைவாய்ப்புகள் வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களுக்குத் தேவை, நமக்கும் அவர்களின் உழைப்பு தேவை, இந்த உண்மையை உணர்ந்து, விட்டுக் கொடுத்து, பேசி, கூடியிருந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் சில இடங்களில் சில அரசியல்வாதிகளும் சேர்ந்து வந்தவர்களை எதிர்க்க வேண்டும் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள், வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் இந்த வேற்றுமைகள் காலூன்ற வாய்ப்பில்லை என நிச்சயம் நான் நம்புகிறேன், இருந்தாலும் இது ஒரு ஆபத்தான தொடக்கம், ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டியது மிக அவசியம் – அரசையும் எல்லாக் கட்சித் தலைவர்களையும் நாம் கேட்டுக் கொள்ள வேண்டியது இதுதான்.
இந்த முக்கியமான பிரச்சனையைப் பற்றி, இன்று வந்துள்ள தமிழ் இந்து நாளிதழ் கட்டுரையில் நீதிபதி திரு கே சந்துரு அவர்கள் தெளிவாக எழுதி உள்ளார், அவருக்கு நன்றி!
// 1970களில் மும்பையில் சிவசேனை தலைமையில் தமிழகத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டபோது தமிழர்களை ‘வந்தேறிகள்’ என்று சொல்லிதான் தாக்கினார்கள். இன்றைக்கு அதே கோஷத்தைத் தமிழர்கள் முன்னெடுப்பதால் அதன் அர்த்தம் வேறாகிவிடாது.//
வேற்றுமை பார்க்க தொடங்கினால் அது என்றைக்குமே நல்லதாகப் போகாது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது தான் உண்மையான தமிழர்களுக்கு / மனிதர்களுக்கு ஏற்ற செய்கை.


4 Comments
R.Karthik
“Pin” குறிப்பு ரொம்பவும் குத்தலாக (Pin prick) இருக்கிறது.
venkatarangan
சத்தியம் செய்கின்றேன் அது வேடிக்கைதான்.
நிச்சயம் சொல்கின்றேன் அது வேடிக்கைதான்.
உண்மையாய் உரைக்கின்றேன் அது வேடிக்கைதான்.
R.Karthik
என்ன ஒரு அதிசயம் …..
இந்த மாதிரி தலைப்புகள் எல்லாம் நீங்கள் எழுத மாட்டீர்களே ??
வாழ்க வாழ்க !! மேலும் எதிர்பார்க்கிறோம்
venkatarangan
நன்றி.
உண்மைதான் இந்த மாதிரி தலைப்புகளை நான் தவிர்த்து விடுவேன். காரணம் யாரையாவது பகைத்துக் கொள்வோமா என்கிற தயக்கம், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள்.
ஆனால் நீதிபதி அவர்களின் இந்த அருமையான கட்டுரையை படித்துவிட்டு அதை ஆதரித்து எழுதாமல் இருக்க முடியவில்லை.
இதைப் பற்றி எழுதி விட்டதால் எல்லாவற்றையும் பற்றி எழுத வேண்டும் என நீங்கள் என்னை கட்டாயப் படுத்த முடியாது. அதற்கு நான் சினிமா நடிகர் இல்லை.
பின்குறிப்பு: இது என் வலைப்பக்கம் – நானே ஆசிரியர் – நானே முதன்மை வாசகர் :-) :-)