Shraddha Theatres, a theatre group in Chennai is known for their innovation with the scripts they choose and their execution – introducing something different in each of their theatre plays. This time, they have taken the inconspicuous Kitchen(s) in our households and told the family drama and sentiment that happens around it. Their new play Nam Samayalaraiyil (நம் சமையலறையில்) that was staged today is an anthology of four stories (நான்கு குறு நாடகங்கள்), each of them has Kitchen and Cooking as the background. 

மீனாட்சி

மீனாட்சி

தமிழில் வந்த சமையல் புத்தகங்களில் எஸ். மீனாட்சி அம்மாள் அவர்களின் “சமைத்துப் பார்” அரை நூறாண்டுகளுக்கு மேலாக மிகப் பிரபலம். அதைத் தொடர்ந்து, என் தந்தை – லிப்கோவின் “சமைப்பது எப்படி” என்ற, என் அத்தை எழுதிய சைவ சமையல் புத்தகம் ஒன்றை 1971இல் வெளியிட்டார், அப்படிப் பல புது (தனி) குடும்பங்களுக்கு சமையலைச் சொல்லிக் கொடுத்ததில், அவர் அவர்களின் தாயார்களை (தந்தைமார்களை) விட இந்தப் புத்தகங்களுக்கு பெரும் பங்குண்டு. அதில் முன்னோடியான எஸ். மீனாட்சி அம்மாள் அவர்களை வைத்து ஒரு கற்பனை கதை தான் – “மீனாட்சி“. அமெரிக்காவில் சேர்ந்துவாழும் ஒரு இளம் ஜோடி – அவன், அவளின் சமையலைக் கிண்டல் செய்கிறான், கோபம் கொண்ட அவள், அவன் சொல்லும் பருப்பு உசிலிக் கறி செய்துக்காட்டுவேன் என்று பந்தயம் கட்டுகிறாள். கையில் “சமைத்துப் பார்” புத்தகத்தை எடுத்துச் சமையல் செய்யப் போகும் அவளுக்கு, மானசீகமாக மீனாட்சி அம்மாளே வந்து உதவுகிறார்கள். நடு நடுவே மீனாட்சி அம்மாள் அவர்களின் அந்த காலத்தின் நினைவுகள், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, நல்ல சமையலின் சூட்சமங்களை (கைப்பக்குவம், பகவான் துணை அவனின் வேலைகள்) நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்கள் – இன்றைய உடனடி இணையத் தலைமுறையினருக்கு இது வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும்.

சுட சுட

சுட சுட

தமிழ் (இந்திய) குடும்பங்களில் கணவனையிழந்த (வயதான) மனைவிகள், பிள்ளைகள், பேரன் பேத்திகளோடு அனுசரித்து இருந்துவிடுவார்கள், ஆனால் மனைவியை இழந்து இருக்கும் (வயதான) கணவன்மார்கள் நிறைய கஷ்டப்படுவார்கள் – அவர்களுக்கு விட்டுக்கொடுத்துப் போக தெரியாது/முடியாது. இந்த யதார்த்தத்தை அழகாகவும், நச்சென்றும் சொல்லுகிறது “சுட சுட” என்ற இரண்டாவது கதை – வெறும் ஒரு கோப்பை காப்பிப்போடுவது தான் கதை. அதில் தாத்தாவாக (சமீபத்தில் மனைவியை இழந்தவராக) வரும் திரு T.D.சௌந்தராஜன் அவர்களும், சின்ன பேத்தியாக வரும் செல்வி அதிதீயும் அவர்களின் தத்துரூபமான நடிப்பில் நம்மைக் கண் கலங்க வைக்கிறார்கள். இருக்கும் வரை மனைவின் அருமை தெரியாமலே, வேலை வேலை என்றே வாழ்ந்திருந்த தாத்தாவின் திமிரை, சுயநலத்தை, காப்பியைப் போடுவதில் உதவி செய்யும் போது கேள்வி கேட்டே பேத்தி உணரச் செய்கிறாள் – இன்றைய குழந்தைகள் கேள்விகேட்கவோ, பெரியவர்கள் தவறு செய்தாலும் சுட்டுக்காட்டுவதில் தயங்காதவர்கள், தைரியமானவர்கள் – பெண்களின் உரிமைகளை அறிந்தவர்கள். அதையும் சொல்லுகிறது “சுடச் சுட”.

நித்யா

நித்யா

இன்றைக்கு இருவரும் (தலைவன், தலைவி) வேலைக்குப் போகும் குடும்பங்களில், அவர்களோடு தனியாக வாழும் கணவனின் (அல்லது மனைவியின்) பெற்றோர்களுக்குச் சிரமம் தான் – முக்கியமாக ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்வதில் – அவர் அவரின் தாய் தந்தை என்றால் விட்டுக் கொடுக்கும் நாம், கணவனின் (மனைவியின்) தாயோ (தந்தையோ) என்றால் சற்று வேற்றுமையில் பார்க்கிறோம், அவர்களின் செயல்களைத் தவறாக எடுத்துக்கொள்கிறோம். அப்படியான ஒரு குடும்பத் தலைவி (நல்லவள் தான்), அவளின் மாமனாரை தவறாகப் புரிந்துக்கொள்ளும் ஒரு கதை தான் “நித்யா”. பல வீடுகளில் காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கு கிளப்பியனுப்பும் அந்த ஒரு மணி நேரம், ஒரே கலாட்டா தான், சண்டை தான் – அதை நுணுக்கமாகக் காட்டியுள்ளார் இயக்குனர் திரு.P.முத்துக்குமரன்.

The Haunted Kitchen

The Haunted Kitchen

இன்றைக்கும் பல வீடுகளில் ஆண்கள் சமையலறைக்கே வருவதில்லை, கேட்டால் என் அப்பா வந்ததில்லை, நானும் வர மாட்டேன், சமையல் மனைவியின் வேலை, என அப்பாவும், மகனுமாகக் கதைப் பேசுபவர்கள் இருக்கிறார்கள். வேளாவேளைக்கு வக்கணையாகச் சாப்பாட்டிற்கு இது வேண்டும் அது வேண்டும் எனப் பட்டியலிடும் ஒரு பெருசு தான் இந்த நாலாவது கதையான “The Haunted Kitchen”இன் முக்கியப் பாத்திரம். அவரின் தவறை அவருக்கே தெரியாமல் சரி செய்கிறாள் அவரின் மருமகள், மறைந்த மாமியாரின் ஆவியின் துணையொடு.

Tagged in: