தமிழில் புகழ்பெற்ற எழுத்தாளரான திரு அசோகமித்திரன் அவர்களின் புத்தகங்களை இதுவரை படிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய ”ஆகாயத் தாமரை” தான் நான் முதலாவதாகப் படிக்கும் அவரின் புத்தகம்.

சென்னை அண்ணா சாலையில் இருக்கும் ஜெமினி மேம்பாலக் கட்டட வேலை ஜருராக நடந்து கொண்டிருந்தது என கதையில் வருவதால் கதையின் காலம் 1970கள் என்று நாம் அறிந்துக் கொள்ளலாம். அந்த காலத்தில் அருகேயிருந்த ஜெமினி ஸ்டுடியோவில்  பல காலம் பணியாற்றியதால் என்னவோ அசிரியர் அந்த இடங்களை நம் கண் முன்னே சினிமா படம் போலக் கொண்டுவந்து விடுகிறார்.

புத்தகத்தின் நூற்றியறுபது பக்கங்களில் நம்மை மறந்து நாம் கதையின் நாயகனான நடுத்தர குடும்பத்து படித்த இளைஞன் ரகுநாதனகவே மாறிவிடுகிறோம். அடம்பர கிளப்பில் ரகுநாதன் போகும் காட்சியில் அவனின் பயம் கலந்த தாழ்வு மனப்பான்மை, மாலதியுடன் பேசும் காட்சியில் அவனது ஏக்கம், ராஜப்பாவின் திருவான்மியூர் பங்களாவைப் பார்த்து பிரமிப்பு, வேலையிழந்த கம்பெனியின் டிபுடி மானேஜிங் டைரக்டரே அவனை தன் அறைக்கு அழைத்து   உபசரிக்கும் காட்சியில் அச்சரியம் என எல்லாமே நமக்கு நடப்பது போல உணரமுடிகிறது.

நாவலில் ரகுநாதனின் கதையை மட்டுமின்றி அந்தக் காலத்து சென்னையின் பல பகுதிகளை நம்மால் பார்க்க முடிகிறது – அண்ணா சாலை, அங்கே இருக்கும் நடைப்பாதை கடைகள், பாரிமுனை, அடையார் பாலம், நேதாஜி சாலை அங்கே இருக்கும் ஜோசியக்காரன், மாம்பலம் ரயில் நிலையம் அங்கே இருக்கும் ரிக்‌ஷாக்காரன், திருவான்மியூர், ஆர்மேனியன் தெருவிலிருக்கும் தடபுடல் சாப்பாடு ஹோட்டல், ஜிம்கானா கிளப் என ஒரு சுற்று சென்னையை உட்கார்ந்த இடத்தில் இருந்தே சுற்றி பார்த்துவிடுகிறோம்.

இதற்கு நடுவில் நம் வரலாற்று அறிவுக்கு தீனிப்போடுவதுப் போல சென்னை தீவுத்திடல் அருகே இருக்கும் மன்ரோ (Sir Thomas Munro) சிலையில் குதிரை மீது ஏற இன்றியமையாததான கால் பிடித்தட்டு (ஸ்டிராப்) இல்லை என்பதையும் சொல்ல தவறவில்லை ஆசிரியர் (இதைப் பற்றி மேலும் பல வரலாற்று உண்மைகளை ஸ்ரீராம் இங்கே எழுதியுள்ளார்).  சென்னை உயர்நீதி மன்றத்தையும் அதன் அன்றைய செயல்பாட்டையும் (இன்றும் அதே அழகு தான் என்பது வேறு விசயம்) ஓரிரு பக்கங்களில் சொல்லி சிந்திக்க வைக்கிறார் அசோகமித்திரன். இவை மட்டும் இல்லாமல் நடிப்பே வராத ஆனால் கட்சியில் செல்வாக்கிருக்கும் நடிகன் என அன்றைய தமிழக அரசியலையும், தியாகராய நகர் பஸ் ஸ்டாண்டு அருகே திடீரேன்று ஒரு பிள்ளையார் விக்கிரகம் தென்பட்டதையும் (அந்த இடத்தில் இருந்த இடுகாடு இடத்தை குறைத்து அங்கே போலீஸ் காலனி கட்ட அரசாங்கமே செய்த வேலை இது என என் பள்ளிக்காலத்தில் அந்த காலனியில் வசித்த என் நண்பனின்  போலீஸில் வேலைச் செய்த தந்தை கூறக் கேட்டு இருக்கிறேன்) எனப் பல விசயங்களை நடுநடுவே நாம் அறிந்துக் கொள்ளலாம்.

வசதிப் படைத்தவர்களிடம் மனநிம்மதி இருப்பதில்லை, ஏழைகளிடம் உதவும் மனப்பன்மை இருப்பதையும், அலுவலகங்களில் போட்டி பொறாமை அதிகம் இருப்பதையும் ஒரு சமுதாய அக்கறையுடன் நாவலில் சொல்கிறார் ஆசிரியர். கடைசி அத்தியாயம் வரை சீறாக செல்லும் நாவல் கடைசியில் ஆகாய விமானத்தின் வேகத்தில் சென்று நல்லபடியாக முடிகிறது.

திரு அசோகமித்திரனின் ஆகாயத் தாமரை [Agaya Thamarai] -

திரு அசோகமித்திரனின் ஆகாயத் தாமரை [Agaya Thamarai]

புத்தகத்தை கையில் எடுத்ததில் இருந்து முடிக்கும் வரை, கீழே வைக்கவே முடியவில்லை, அவ்வளவு சுவாரஸ்யம்.

Categorized in:

Tagged in:

,