இந்த ஆண்டு (2025) எனக்கு எப்படி இருந்தது?

🧘 தினமும் சுமார் ஐயாயிரம் அடிகள் (சுமார் ஐந்து கிலோ மீட்டர்) நடந்துள்ளேன். யோகாவை வாரத்திற்கு ஒரு முறை செய்தேன். அவ்வப்பொழுது வந்த காய்ச்சல் (ஜூரம்), சளித் தொல்லைகள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தன; அதற்குக் காரணம் எங்கள் வீட்டிற்கு அடுத்து கட்டப்பட்டுவரும் வீட்டிலிருந்து வரும் தூசியும் சத்தமும்தான். உடல் எடை சில கிலோக்கள் அதிகரித்துள்ளது, அதற்கு என் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும்… பார்க்கலாம்!
🖋️ இந்த ஆண்டு இரண்டு நூல்களை எழுதி முடித்தேன். முதலாவது, The Founder Catalyst, எனது கனவு நூல். இரண்டாவது, செயலிகளின் கதை; இது மெட்ராஸ் பேப்பரில் வெளிவந்த எனது தொடர்.
📝 எனது வலைத்தளத்தில் தோராயமாக ஒரு நாளுக்கு ஒரு பதிவு என, சுமார் 320 பதிவுகள் எழுதியுள்ளேன். 2004-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 4,390 பதிவுகள். (இதற்காகவே இணையத்தில் நிறைய வாசித்தேன், பார்த்தேன் – எழுத நேரமிருந்தது, நூல்களைப் படிக்கத்தான் நேரமில்லை!)
🤖 எனக்கு மிகவும் திருப்தியளித்த ஏ.ஐ. (AI) பற்றிய சில மேடைப் பேச்சு வாய்ப்புகள் கிடைத்தன.
🎙️ இரண்டு யு-ட்யூப் ஓடைகளில் (வலையொலிகளில்) இந்த ஆண்டு நடுவிலிருந்து பேசத் தொடங்கி, இதுவரை நல்ல முறையில் போய்க்கொண்டிருக்கிறது. இரண்டுமே நண்பர்கள் குழுக்களால் உருவானவை என்பது கூடுதல் மகிழ்ச்சி.
🤳 எனது யு-ட்யூப் ஓடைகளில் மாதத்திற்கு சுமார் மூன்று குறு/முழு காணொலிகளைப் பதிவேற்றம் செய்தேன்.
✈️மூன்று வெளிநாட்டுப் பயணங்கள்; அதில் பிலிப்பைன்ஸ், கம்போடியாவிற்கு இதுவே முதல் முறை. பல ஆண்டுகளாகப் போக ஆசைப்பட்டுச் சென்றது இலங்கையின் யாழ்ப்பாணம்; மிகுந்த மகிழ்ச்சி அளித்த பயணம் அது. தமிழ்நாட்டிற்குள் நான் மேற்கொண்ட சில பயணங்களும் நல்லபடியே முடிந்தன.
📱 நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எனது (ஐபோன் 12 Pro) செல்பேசியை மாற்றி ஐபோன் 16E வாங்கினேன். அதிசயமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு புதுக் கணினியும் நான் வாங்கவில்லை (இது எனக்கே ஆச்சரியம்தான்!).
🧑💻இரண்டு தொழில்நுட்ப மாறுதல்கள்: எனது குறு நிறுவனத்தின் மேகச் சேமிப்பு (Cloud Storage)/மின்-அஞ்சல் கணக்கையும், இணையத்தளத்தையும் வேறு ஒரு நிறுவனத்திற்குத் தடையின்றி நானாகவே மாற்றினேன்.
🎞️ சுமார் 70 திரைப்படங்களைப் பார்த்து விமர்சனம் எழுதியுள்ளேன்.
👎நான் செய்யத் தவறியவை: புத்தகங்களை முழுமையாகப் படிக்க வேண்டும்; இந்த ஆண்டு மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே நூல்களை வாசித்தேன். அளவிற்கு அதிகமான நேரத்தைச் சமூக வலைத்தளங்களில், முந்தைய ஆண்டை விட அதிகமாகப் பயன்படுத்தியுள்ளேன் (அடுத்த ஆண்டு இதைக் குறைக்கவில்லை என்றால் ‘ஸ்கிரீன் டைம்’ என்னைச் சாப்பிட்டுவிடும்).
🚶அடுத்த ஆண்டு நான் செய்ய வேண்டியவை: புதிதாக மூன்று நூல்களை எழுதி முடிக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் செலவிடும் நேரத்தைக் குறைக்க வேண்டும். மாதத்திற்கு ஓரிரு நூல்களாவது முழுமையாகப் படித்து எனது கருத்தை எழுத வேண்டும். தொடர்ந்து எல்லா வாரங்களும், வாரம் இரண்டு முறையாவது யோகா செய்ய வேண்டும். வெளியில் சென்றாலும் உணவின் அளவை அல்லது இனிப்பைக் குறைப்பது அவசியம்.
🎆அனைவருக்கும் இனிய 2026 புத்தாண்டு வாழ்த்துகள்!
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


Happy New Year 2026 to you. I have been following you for years since you became a speaker in MSDN monthly meets in Chennai. Keep the good work going and it is always a pleasure reading your blogs covering a wide range of topics.