ஐபிஎம் லூயிஸ் கெர்ஸ்ட்னர்
ஐபிஎம் லூயிஸ் கெர்ஸ்ட்னர்

🪦டிசம்பர் 27, 2025 அன்று லூயிஸ் கெர்ஸ்ட்னர் (Louis V. Gerstner Jr.) காலமானார் என்கிற செய்தியைப் படித்ததும் நான் ஒரு நிமிடம் கலங்கிவிட்டேன். அந்த மனிதரை நான் நேரில் பார்த்ததில்லை; ஏன், அவர் பேசிய காணொலிகளைக் (Videos) கூடப் கேட்டதில்லை. இருந்தும் அந்தச் செய்தி என்னை இருபது ஆண்டுகளுக்கு முன்னால் கூட்டிச் சென்றது.

📘நான் எனது துளிர்தொழிலில் (Startup) ஒரு தலைமை நிர்வாக அதிகாரியாகச் (CEO) செயல்படக் கற்றுக்கொண்டிருந்தபோது, தலைமைத்துவத்தைப் (Leadership) பற்றிய என்னுடைய புரிதலைச் செதுக்கிய புத்தகம் அது. 2002ஆம் ஆண்டில் ‘Who Says Elephants Can’t Dance’ என்கிற அந்த நூலை முதன்முதலாகப் படித்தேன்.

அந்தச் சமயத்தில் எனக்குத் தொழில்நுட்பத்தின் (Technology) மேல் இருந்த அளவு ஆர்வம், என் நிறுவனத்தின் மனிதவளத்தைக் குழுக்களாக நிர்வகிப்பதில் இருக்கவில்லை. நான் ஒரு நிறுவனராக இல்லாமல் பொறியாளராகவே சிந்தித்த ஆரம்ப ஆண்டுகள் அவை. மேலாண்மை (Management) என்பது ஏதோ ஒரு கட்டாயத்திற்காகச் செய்ய வேண்டிய வேலையாகவே எனக்குத் தோன்றிய காலம் அது.

🏢ஒரு காலத்தில் கணினி உலகின் முடிசூடா மன்னனாக இருந்த நிறுவனம் ஐபிஎம் (IBM). ஆனால் 1990களில் மைக்ரோசாப்ட், சன், ஜப்பான் ஹிட்டாச்சி, ஜப்பான் புஜிட்சு போன்ற நிறுவனங்கள் ஐபிஎம்-மின் அரியணையைத் தாக்கத் தொடங்கியிருந்தன. அந்த ஆபத்தான நிலையில், 1993ஆம் ஆண்டில் கணினித் துறைக்குச் சற்றும் தொடர்பில்லாத பின்னணியிலிருந்து வந்த லூயி(ஸ்), ஐபிஎம் நிறுவனத்தின் தலைவரானார். அப்போது நான் கல்லூரியில் இருந்தேன். இந்தச் செய்தியைப் படித்தவுடன், “இது என்ன முட்டாள்தனமாக இருக்கிறதே! தொழில்நுட்பங்கள் அசுர வேகத்தில் மாறிவருகின்றன; அந்த ஓட்டத்தில் ஐபிஎம் பொறியாளர்களைப் போட்டியிட விடாமல் நிறுவனத்தின் அதிகாரவர்க்கம் தடுக்கிறது; இந்தப்போட்டிக்கு ஈடுகொடுக்க வேண்டுமானால் ஐபிஎம் ஒரு பொறியாளரையே தனது தலைவராகத் தேர்வு செய்திருக்க வேண்டும்” என்று நினைத்துக்கொண்டேன். மைக்ரோசாப்ட் பில் கேட்ஸ் மற்றும் இன்டெல்லின் (Intel) நிறுவனர் ஆண்டி குரோவ் போன்ற பொறியாளர்களைப் பார்த்து ஈர்க்கப்பட்டு வளர்ந்தவன் என்பதால் எனக்கு இந்த எண்ணம்.

இப்படி இருக்கையில், பத்தே ஆண்டுகளில் ஐபிஎம்-மைத் தலைகீழாக மாற்றி, அதை மீண்டும் பந்தயத்தில் ஓடச் செய்திருந்தார் லூயிஸ். இது அவரின் நூலைப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை எனக்குத் தூண்டியது. புத்தகத்தில் அவர் வெற்று முழக்கங்களைச் சொல்லி வாசகர்களை ஏமாற்றவில்லை. ஒரு நிறுவனத்தின் உண்மையான குணம் என்ன, சரியான முடிவுகளை எப்படி எடுக்க வேண்டும், அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் என்பதை ஒவ்வொரு பக்கத்திலும் புரியவைத்தார்.

🪪அந்த நூலில் வரும் ஒரு சம்பவம் என் மனதில் ஆழமாக இன்றுவரை நிலைத்துவிட்டது. லூயிஸ் ஐபிஎம் தலைவராகப் பொறுப்பேற்ற புதிதில், நியூயார்க் அருகில் இருக்கும் தலைமையகத்திற்குச் செல்கிறார். அவருக்கு இன்னும் நிறுவனத்தின் அடையாள அட்டை (ID Card) வழங்கப்படவில்லை. அந்தப் பெரிய கட்டிடத்தின் நுழைவாயிலில் இருந்த காவலர் அவரை உள்ளே விடவில்லை. தான் புதிதாக வந்திருக்கும் CEO என்று அவர் சொல்லியும் அனுமதிக்கப்படவில்லை. இந்தச் சம்பவத்தை அவர் எப்படிப் பார்த்தார் தெரியுமா? அதைத் தன்னுடைய கௌரவப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாமல், ஐபிஎம்-மில் இருக்கும் அதிகாரத்துவ (Bureaucracy) முறை எந்த அளவுக்கு மோசமாக வேரூன்றி இருக்கிறது என்பதற்கான ஓர் அறிகுறியாகவே இதைப் பார்த்தார்.

அடுத்த பத்து ஆண்டுகளில் அவர் ஐபிஎம்-மை ஒரு புது நிறுவனமாகவே மாற்றிவிட்டிருந்தார். அதற்குக் காரணம் அவருடைய பேச்சுத் திறமை மட்டும் இல்லை; அவருடைய தெளிவான செயல்கள்தான். ஒரு நிறுவனத்தின் கலாச்சாரம் என்பது வெறும் பேச்சால் வராது; நிறுவனத்தின் பொறுப்பில் இருப்போர் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும், செயல்களிலும்தான் இருக்கிறது என்பதை அவர் நிரூபித்திருந்தார். அவற்றை அந்த நூலில் விவரித்திருந்தார்.

ஒரு நிறுவனராக (Founder), அந்த நூலிலிருந்து நான் கற்றுக்கொண்ட முக்கியமான விஷயம் – லூயிஸ் தலைமைத்துவத்தைச் சினிமாத்தனமாகச் செய்யவில்லை. ஒரு சரிந்த நிறுவனத்தை நிமிர்த்துவது சாதாரணமான வேலையில்லை என்பதில் அவர் தெளிவாக இருந்திருக்கிறார். முக்கியமான முடிவுகளை மற்றவர்களிடம் தள்ளிவிடாமல், தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களே எடுக்க வேண்டும் என்பதைச் செய்துகாட்டியிருந்தார். இதே விஷயங்களைத்தான் என்னுடைய ‘The Founder Catalyst’ ஆங்கில நூலிலும் நான் குறிப்பிட்டிருக்கிறேன். இவை நிறுவனர்களுக்கு எக்காலத்திலும் தேவையான பாடம்.

🐘இன்றைக்குத் தலைமைத்துவத்தைப் பற்றி வரும் வாட்ஸ்-ஆப் துணுக்குகளைக் காட்டிலும், ‘Who Says Elephants Can’t Dance’ நூல் அதன் நேர்மைக்காகவும், நடைமுறைப் பயன்பாட்டிற்காகவும் இன்றும் தனித்து நிற்கிறது. பொறியாளராக இருந்து ஒரு தலைவராக (Leader) மாறத் துடிக்கும் பலருக்கு நான் பரிந்துரைக்கும் நூல்கள் பட்டியலில் இது என்றும் இருக்கும்.

💃லூயிஸ் கெர்ஸ்ட்னர் இந்த உலகத்திற்கு எப்படி நடனம் ஆட வேண்டும் என்று கற்றுத்தர நினைக்கவில்லை. மாறாக, அவர் தலைமை தாங்கிய ஐபிஎம் நிறுவனத்திற்குத் தெளிவான தலைவனும் தைரியமும் இருந்தால், களைத்துப்போயிருந்த அந்தப் பிரம்மாண்டமான நிறுவனமும் எழுந்து ஆட முடியும் என்பதைச் செய்துகாட்டினார். இன்று அதன் தலைவராக இருக்கும் இந்திய வம்சாவழியினரான அர்விந்த் கிருஷ்ணா இவற்றை நினைவில் கொண்டுள்ளார் என நம்பலாம்.

🙏இப்படியாக எனது சிந்தனைகளைச் செதுக்கிய லூயிஸ் கெர்ஸ்ட்னருக்கு எனது மனமார்ந்த நன்றி. அவரின் ஆன்மா சாந்தியடைய என்னுடைய பிரார்த்தனைகள்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading