இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு தெரியவில்லை என்றாலும் நேற்று மற்ற நாடுகளில் பல முன்னணி நிறுவனங்களின் இணையத் தளங்களும் செயலிகளும் செயலிழந்தது. பாதிக்கப்பட்ட தளங்களில் வாட்ஸ்ஆப், ஸ்நாப்சாட், நியூ-யார்க்-டைம்ஸ் மற்றும் பல அடக்கம். இதற்குக் காரணமாக அமைந்தது அமேசான் நிறுவனத்தின் ஏ.டபிள்யூ.எஸ். (AWS) சேவையின் பாதிப்பு, குறிப்பாக அவர்களின் அமெரிக்கக் கிழக்கு ஒன்று என்ற பெயரில் இயங்கும் கணினி தரவு மையங்களில் ஏற்பட்ட கோளாறுகள். குறிப்பு: கடைசி பத்தியில் ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கிறது அதனால் முழுவதுமாகப் படிக்கவும்.
அமேசானின் மேகக் கணிமை சேவையின் பெயர் தான் ஏ.டபிள்யூ.எஸ். இனி இதை அமேசான் என்றே இங்கே எழுதியுள்ளேன். குறு நிறுவனங்கள் தொடங்கி, பெரும் நிறுவனங்களும் தாங்களாகப் பல்லாயிரம் கணினிகளை, சேமிப்புக் கிடங்குகளை, இணைய இணைப்புகளை வாங்கி, நிறுவிப் பராமரிக்காமல் அவற்றை அமேசான் இடமிருந்து வாடகைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு முதலீட்டுச் செலவுகள் குறைகிறது. தேவைக்கு ஏற்ப ஒரு சில நொடிகளில் கணிமை வளங்களைக் கூட்டவோ குறைக்கவோ முடிகிறது. உதாரணமாக ஒரு பல்கலைக்கழகத்தின் இணையத்தளம் என்று வைத்துக் கொள்வோம்: இணைய வழி பரீட்சைகள் என்று நடக்கிறதோ அந்தத் தினங்களில், மேலும் ஒவ்வொரு பருவக் கட்டணங்களைக் கட்ட வேண்டிய நாட்களில் மாணவர்களின் வருகை மிக அதிகமாக இருக்கும். அந்தத் தினங்களுக்கு மட்டும் கூடுதலாக அமேசானிடம் இருந்து கணினிகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். மற்ற நாட்களில் குறைவாக வைத்துக் கொள்ளலாம்.
இந்த ஒரு காரணத்தோடு நில்லாமல் இன்னொன்றும் இருக்கிறது. இன்றைக்குப் பின்னணியிலிருந்து ஒரு இணையத்தளத்தை இயக்கும் வழங்கிகளை (சர்வர்களை) கெட்டவர்களிடம் இருந்து பாதுகாப்பது எளிதான காரியமில்லை. அதற்கு மிகத் தேர்ந்த பொறியாளர்கள் தேவை, அதிக எண்ணிக்கையிலும் தேவை. இவர்களைப் பெரு நிறுவனங்களைத் தாண்டி மற்றவர்களால் வேலைக்கு வைக்க முடியாது, இதற்குச் சம்பளம் ஒரு முக்கிய காரணம்.
இவை இரண்டோடு இன்றைக்கு ஒரு செயலி, உலகத்தின் எல்லா மூலையிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டுமென்றால் உலகின் பல பகுதிகளில் வழங்கிகள் தேவை. உலகத்தில் இருக்கும் பல நூறு நாடுகளிலும் இந்த சர்வர்களை வைத்துப் பராமரிப்பது பெரும் நிறுவனங்களால் மட்டுமே முடியும்.
இன்றைக்கு அமேசானைத் தாண்டி இத்தகைய மேகக் கணிமை சேவைகளை மைக்ரோசாப்ட், கூகுள், மற்றும் சீனாவின் அலிபாபா நிறுவனங்கள் மட்டுமே வழங்குகிறார்கள். இந்த நால்வர் மற்றும் மெட்டா (பேஸ்புக்) ஆகிய ஐவர் கட்டுப்பாட்டில் தான் இன்றைக்கு மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமான இணையச் சேவைகளின் பின்னணிகள் இயங்குகிறது. இதில் மெட்டா நிறுவனம் அவர்களின் செயலிகளுக்கு மட்டுமே அவர்களின் தரவு மையங்களைப் பயன்படுத்துகிறார்கள். சென்ற வாரம் இத்தகைய ஒரு மேகக் கணிமை தரவு மையத்தைத் தான் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் பதினைந்து பில்லியம் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் திறக்கப் போவதாகக் கூகுள் அறிவித்திருக்கிறது.
ஓரளவு எண்ணிக்கையில் பயனர்களைப் பெற்றிருக்கும் செயலிகள் கூட ஒரே இடத்தில் இருக்கும் தரவு மையங்களில் தங்களின் எல்லாச் சேவைகளுக்கும் பயன்படுத்த மாட்டார்கள். அமேசானைப் பயன்படுத்துவோர்கள் கூட அவர்களுக்குத் தேவையான சர்வர்களை சில அமெரிக்காவின் கிழக்கு, சிலவற்றை அமெரிக்காவின் மேற்கு, சிலவற்றை ஐரோப்பாவில், சிங்கப்பூரில் எனப் பல இடங்களில் இருந்து பெறுவார்கள். நேற்றைய நிகழ்வு இந்த ஏற்பாடுகளைத் தாண்டி நடந்திருக்கிறது. அதோடு இது ஏதோ அமேசானில் மட்டும் நடப்பதில்லை. இது போன்ற பாதிப்புகள் மைக்ரோசாப்ட்டின் அசூர் மற்றும் கூகுள் கிளவுட் மேகக் கணிமை தரவு மையங்களிலும் முன்னர் ஓரிரு முறைகள் வந்திருக்கிறது. இதற்காகத் தான் கணினி அறிஞர்கள் பல தரவு மையங்களைப் பயன்படுத்துவதோடு, இரண்டு மூன்று நிறுவனங்களிடம் இருந்தும் சேவைகளைப் பெற வேண்டும் எனச் சொல்கிறார்கள். நேற்றைய நிகழ்வில் பாதிக்கப்பட்ட செயலிகளின் தொழில்நுட்ப அதிகாரிகள் இதைக் கவனிக்கவில்லை போல.
பொதுவாக ஒரு நிறுவனத்தின் சேவையில் குறைபாடு வந்தால் நிறுவனத்தைக் குறை சொல்வார்கள், பொதுவெளியில் திட்டுவார்கள், நிறுவனத்தின் பெயர் கெடும், சந்தை மதிப்பு குறையும். ஆச்சரியமாக நேற்றைய பாதிப்புக்கு அமேசானின் பொறியாளர்கள் காரணமாக இருந்தாலும், எல்லோரும் செயலி தயாரிப்பாளர்களை நீங்கள் ஏன் மாற்று நிறுவனங்களிடம் இருந்தும் கணினிகளை எடுத்துக் கொள்ளவில்லை என்று கேட்கிறார்கள். அதைவிட ஆச்சரியம், அமேசானின் சந்தை மதிப்பு நேற்று ஒரு நாளில் 1.6% உயர்ந்துள்ளது. இதற்குக் காரணமாகச் சொல்லப்படுவது, இந்தப் பாதிப்பைப் பற்றி வரும் செய்திகளில் எந்தந்த நிறுவனங்கள் அமேசானின் மேகக் கணினிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல்களும் வருகிறது. இதிலிருந்து அமேசானின் ஏ.டபிள்யூ.எஸ். சேவையின் பயன்பாடு உலகளவில் இருக்கும் அளவைப் பார்த்து அமேசானின் தாக்கத்தைப் புரிந்து கொள்கிறார்கள். அதனால் நிறுவனத்திற்கு வருங்காலத்தில் தொடர்ந்து வருவாய் வரும் என்று கணிக்கிறார்கள். இந்தக் காரணங்களினால் அமேசானின் சந்தை மதிப்பு நேற்று ஒரே நாளில் உயர்ந்துள்ளது. பங்குச் சந்தையைப் புரிந்து கொள்வது எளிதில்லை, அதன் போக்கே தனி!
இதுபோன்ற பாதிப்புகள் நடக்கும் போது நமது அன்றாட வாழ்வில் இணையத்தின் தாக்கம் எத்தகைய பெரும் பங்கை வகிக்கிறது என்றும் இந்தச் சேவைகளின் பெரும் நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதையும் காட்டுகிறது.
#awsoutage #tamilpost #TechExplained #tamiltechnews
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


நீங்கள் ஏன் மாற்று நிறுவனங்களிடம் இருந்தும் கணினிகளை எடுத்துக் கொள்ளவில்லை என்று கேட்கிறார்கள். – reason amazon could have offered lesser price or subsidised cost if they host on their cloud envirornment compare to competitor. Other reason even with Amazon other location could have cost more for scalability that could even a reason single location. stock not dropped could be downtime lesser or not major cost oriented apps or could be the list of customers affected would turned the dip on that companies stock.