Chennai to Kumbakonam by Road travel – August 2025

கூகுள் மேப்ஸ் வழி சொல்லாமல் பலரும் பக்கத்துத் தெருவுக்குக் கூடப் போவதில்லை. சில தினங்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து என் காரை நான் ஓட்டிக் கொண்டு கும்பகோணம் சென்றிருந்தேன். கூகுள் மேப்ஸ் சொன்னதைக் கேட்டு விக்கிரவாண்டி சுங்கச்சாவடி (Vikravandi Toll Plaza) தாண்டியவுடன், இடதுபுறம் திரும்பி கண்டரக்கோட்டை, நெய்வேலி, வடலூர், சேத்தியாத்தோப்பு வழியாக (தேசிய நெடுஞ்சாலை NH 36) சென்றேன். செவ்வாய் மதியம் 2:30 மணிக்குக் கிளம்பி, மாலை 10 மணிக்குப் போய்ச் சேர்ந்தேன் – ஒரு முப்பது நிமிடக் காப்பி, பலகார இடைவேளை.

தந்தை பெரியார் நூற்றாண்டு நினைவு வளைவு, பண்ருட்டி நகராட்சி
தந்தை பெரியார் நூற்றாண்டு நினைவு வளைவு, பண்ருட்டி நகராட்சி

சென்னை புறநகர்களில் (தாம்பரம், கிளாம்பாக்கம், பெருங்களத்தூர்) அவ்வளவு போக்குவரத்து நெரிசல் இல்லை, ஆனால் NH 36இல் வடலூர் தாண்டும் வரை சாலை விரிவாக்கம் நடக்கிறது, அதனால் வளைந்து வளைந்து போகிறது. அதோடு ஏகப்பட்ட நெரிசல், மெதுவாகவே வாகனங்கள் சென்றது. குறிப்பாக வடலூர் இரயில்வே கேட் அருகே முக்கால் மணி நேரம் காத்திருந்தேன், ஓர் உள்ளூர் பேருந்து எதிரில் வந்து யாரையும் போகவிடாமல் சண்டித்தனம் செய்து, தொல்லைக் கொடுத்தது. வடலூரிலிருந்து பத்து, இருபது கிலோமீட்டருக்குப் பிறகு தேசிய நெடுஞ்சாலையில் புதிதாகப் பல இடங்களில் இருபுறமும் வேலி அமைத்து நன்றாக இருந்தது. வேகமாகப் போக முடிந்தது – அதிகாரப்பூர்வ வேகமே 100 என்று பல இடங்களில் இருந்தது. இருந்தும் இது இந்தியா என்பதால் ஜாக்கிரதையாகவே போக வேண்டும் – ஓர் இடத்தில் வலது புறம் இருக்கும் அதிவேகத் தடத்தில் ஓர் இருசக்கர வாகனம் வேகமாக எதிர்த்திசையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எமதர்மராஜாவை அழைத்தபடி வந்து கொண்டிருந்தார்.

கும்பகோணம் போனவுடன் நண்பர், ஏன் உங்களுக்கு இவ்வளவு நேரம் எனக் கேட்டு, நான் செய்த தவறு என்ன என்பதைச் சொன்னார். சென்னையிலிருந்து ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் வரும் போது, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிக்குப் பிறகு கூகுள் பேச்சைக் கேட்டுத் திரும்பாமல், அடுத்து வரும் (உளுந்தூர்பேட்டைக்கு முன்னர்) செங்குறிச்சி சுங்கச்சாவடி தாண்டியவுடன் இடது திரும்பி, விருத்தாச்சலம் வழியாக இதே NH 36யில் சேர வேண்டுமாம். அப்படிச் செய்தால் இந்த நெய்வேலி, வடலூர் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்துவிடுவோம் என்றார். இந்த வழி, அல்லது திண்டிவனம், கடலூர் (பைபாஸ்), சிதம்பரம்(பைபாஸ்) வழியாகவும் வரலாம் என்றார்.

காரில் சென்னையிலிருந்து கும்பகோணம் போவோர் கவனத்திற்கு (ஆகஸ்ட் 2025)
காரில் சென்னையிலிருந்து கும்பகோணம் போவோர் கவனத்திற்கு (ஆகஸ்ட் 2025)

கும்பகோணம் போவோர் இந்த வழிகளை நினைவில் கொள்ளவும். நன்றி.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading