பிளாக் மிரர் (Black Mirror) ஒரு பிரபலமான அறிவியல் புனைவு தொலைக்காட்சி தொடர். முதன் முதலாக இந்தப் பிரிட்டன் தொடர் 2011ஆம் ஆண்டு வெளிவந்தது. வருங்காலத்தில் தொழில்நுட்பம் நம் சமுதாயத்தில் எந்த வகையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதைக் கற்பனையாகச் சொல்லும் தொடர். இதில் வரும் ஒவ்வொரு அத்தியாயமும் நம் மனதில் நிலைத்திருக்கும், அந்தளவு நம்மை அதிரவைக்கும். இதற்குக் காரணம் இவர்கள் காட்டும் சம்பங்களில் வரும் கற்பனை கலந்த அறிவியல், இவை நிஜத்திற்கு மிக அருகிலேயே இருக்கும்.

போன மாதம், பிளாக் மிரரின் ஏழாவது பருவம் (சீசன்) வெளிவந்தது. இதை நெட்பிளிக்ஸ் காணலாம். இந்தப் பருவத்தின் முதல் அத்தியாயம், மூளை புற்று நோயால் சாவின் அருகில் போன மனைவியைக் காப்பாற்றும் கணவன். அதற்காகச் சோதனை முயற்சியில் இருக்கும் தொழில்நுட்பத்தை, ஒரு துளிர் தொழில் நிறுவனம் மனையின் மண்டையில் பொருத்துகிறது. எல்லாம் நன்றாகப் போகிறது. தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து பயன்படுத்த (இல்லையென்றால் மனைவி தூங்கிக் கொண்டே இருப்பாள்) மாதந்தோறும் கட்ட வேண்டிய சந்தாவை நிறுவனம் உயர்த்திக் கொண்டே போகிறது. கணவன்-மனைவி எப்படி அதைச் சமாளித்தார்கள். இறுதியில் மனைவிக்கு என்ன ஆனது என்பதை மிக யதார்த்தமாகச் சொல்லி இருப்பார்கள்.

நான் பார்த்ததை ஏதோ கற்பனை என்று கடந்து போக முடியவில்லை. அதனால் இந்தப் பதிவு. இன்று இந்தத் தொழில்நுட்பம் சாத்தியமில்லை என்றாலும், இன்னும் ஒரு பத்து அல்லது இருபது ஆண்டுகளில் இது வரக்கூடியது. அந்த உண்மைத் தன்மை என்னை அதிரவைத்தது. எதை நோக்கி மனிதர்கள் சென்று கொண்டிருக்கிறோம்? சாவைத் தள்ளி வைக்க எந்தளவு விலையைச் சமூகமாக நாம் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று யோசிக்க வைத்தது.

சந்தாவை உயர்த்திக் கொண்டே போவது என்பதை வைத்து, அமெரிக்க சிலிக்கான் பள்ளத்தாக்கு பெருநிறுவனங்களின் (அவர்களை இயக்கும் உண்மையான முதலாளிகளின்) பேராசையை அழகாகச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

நீங்கள் இந்த அத்தியாயத்தைப் பார்த்தீர்களா? உங்கள் கருத்து என்ன?

பின் குறிப்பு:
ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னர், நிறுவனங்கள் மென்பொருட்களின் சந்தாவை உயர்த்தும் போது, பயனர்களுக்குப் புதிய நவீன வசதிகளைக் கொடுத்துவிட்டு விலையை உயர்த்துவார்கள். பெருந்தொற்றுக்குப் பிறகு, அதே வசதிகளைக் கொடுத்து அல்லது குறைத்துவிட்டு சந்தாவையும் உயர்த்துகிறார்கள். மற்ற துறைகளைப் போல இல்லை, கணினி/மென்பொருட்கள் துறை. இங்கே அதே வசதியை வழங்க, ஆண்டுக்கு ஆண்டு நிறுவனங்களின் செலவு குறைந்து கொண்டே போகும். இந்த நிறுவனங்களின் செலவு பெரும்பாலும் ஆராய்ச்சிகளில் போகும். செ.நு. இது போன்ற ஆராய்ச்சியின் பலனாக வந்தது. ஆனால் அந்தச் செலவுகளை அதைப் பயன்படுத்தாத பயனர்கள் தலையிலும் இவர்கள் கட்டுவதற்கும், இந்த பிளாக் மிரர் அத்தியாயத்திற்கும் தொடர்பு எதுவுமில்லை. நீங்கள் அப்படித் தொடர்புப்படுத்திப் பார்த்தால் ‘கம்பெனி’ பொறுப்பில்லை.

இன்றைக்குப் பல நாடுகளின் அரசுகள் எப்படி செ.நு. நுட்பங்களைத் தணிக்கை செய்வது, சோதனை செய்வது, கட்டுப்படுத்துவது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிளாக் மிரர் கதை, அதற்கு ஒரு வழியைக் காட்டுகிறது.

அடிப்படையில் செ.நு. நல்லதுமில்லை, கெட்டதுமில்லை, அதை உருவாக்கும்/இயக்கும் மனிதர்கள் அப்படியில்லை. அதனால் எந்தத் துறையில் செ.நு. பயன்படுத்தப்படுகிறதோ அந்தத் துறைக்கு ஏற்ற சட்டங்களை மதித்து இந்த நிறுவனங்கள் செயல்பட வைக்க வேண்டும். உதாரணமாக மருத்துவத் துறையில் வருகின்ற தொழில்நுட்பங்கள் எந்த ஒரு நிறுவனத்தின் முற்றுரிமையாக இருக்கக்கூடாது.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading