நீண்ட நாட்களாக இவ்வளவு சிரிக்கவில்லை. காரணம் முக்கியமாக எதுவுமில்லை. நேற்று பண்டிகை என்பதால் வீட்டில் நிறைய வேலை. இரவில் ஓய்வாக இருக்க, எதையும் பார்க்க மனசு இல்லை. என் வீட்டு நூலகத்தில் கண்ணில் பட்ட ஆஸ்டெரிக்ஸ் நகைச்சுவை படக்கதை நூலை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். அடுத்த அரைமணி நேரம் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தேன். என் மனைவி என்னைப் பார்த்து, “நீங்கள் ஒரு மாதிரி என்று தெரியும், இவ்வளவு சீக்கிரம் முற்றிப் போகும் என்று நினைக்கவில்லை!” என்றாள்.
புதுக் கதையில்லை. நான் படித்தது ஆஸ்டரிக்ஸ் அண்ட் த பிக் ஃபைட் (Asterix and the Big Fight 1966). ஜூலியஸ் சீசரின் காலத்தில் நடக்கும் ரோமானியப் படைகளின் குளறுபடிகளும், கவுலிஷ் வீரர்களின் அதிர்ஷ்டமும், புத்திசாலித்தனமும் தான். இந்தக் கதையில் மந்திரங்களைக் கற்றுத் தேர்ந்த அறிஞர் கேடாஃபிக்ஸ் (Getafix) மீது பாறாங்கல் விழுந்து நினைவுத் தப்பிவிட, மந்திர மருந்து இல்லாமல் கவுலிஷ் கிராமத் தலைவரும் அவரின் பங்காளி கிராமத் தலைவரும் சண்டையிடும் சூழ்நிலையில் என்ன நடக்கிறது என்பது தான். மந்திர மருந்தை எப்படியாவது கலக்கிவிட வேண்டும் என்று பலரும் செய்யும் முயற்சி படு வேடிக்கை. அதைப் படித்து விழுந்து விழுந்து சிரித்தேன்.
இதே மாதிரி, நான் அடிக்கடி படிக்க விரும்பும் இன்னொரு படக்கதை ஆர்ச்சி காமிக்ஸ். ஆர்ச்சியின் கதைகள் எப்போதும் சிரிப்பை வரவழைக்கும். ரிவர்டேல் நகரில் நடக்கும் ஆர்ச்சியின் காதல் குழப்பங்கள், ஜக்ஹெடின் உணவு ஆர்வம் எனக்குப் பிடித்தவை. ஆஸ்டரிக்ஸ்ஸைப் போல ஆர்ச்சியும் ஓர் எளிமையான கற்பனை உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும், அங்கே சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.

Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.
