சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க நண்பரோடு இரவு உணவுக்காக தாய்(லாந்து) உணவகம் செல்ல முடிவெடுத்தோம். சென்னையில் இருக்கும் தாய் உணவகங்களில் டி.டி.கே. சாலையில் இருக்கும் “பெஞ்சராங்” தான் சிறந்தது, அவர்களின் சமையல் தாய்லாந்தில் இருப்பது போலவே சுவையாக இருக்கும் என்று கேள்விப்பட்டதால் அங்கே சென்றோம். அடையார் பார்க் கட்டிடத்திலிருந்து சுமார் நூறு மீட்டர், டி-மாண்டே காலனிக்கு முன்னரே வந்துவிடும், நான்கு கார்கள் நிறுத்துமளவு இடமிருக்கிறது, வேறு இடத்தில் நிறுத்த ஓட்டுநர் சேவையும் இருக்கிறது.

நாங்கள் போனது வேலை நாளில், இருந்தும் மாலையிலேயே அவர்களை அழைத்து, ஐவருக்கு மேஜையை முன்பதிவு செய்துவிட்டேன் – நல்ல வேளை, ஏழு மணிக்கு நாங்கள் போனபோது காலியாக இருந்தாலும், அரை மணியில் எல்லா நாற்காலிகளும் நிறைந்துவிட்டது, அதனால் முன்பதிவு செய்வது நல்லது. சிறிய வீட்டை அழகாக மாற்றியமைத்திருக்கிறார்கள், சுமார் பத்துக்குக் குறைவான மேஜைகள். நிறைய அசைவ வகைகள் தான், இருந்தும் அது சோறாகட்டும், நூடுல்ஸ் (நூலடை) ஆகட்டும், சூப் (வடிரசம்) ஆகட்டும், முன்னுணவுகளாகட்டும் நாம் கேட்டால் அதை சைவமாகவும் சமைத்துக் கொடுக்கிறார்கள். எல்லாமே நாம் சொல்லிய பிறகு தான் சமைக்கிறார்கள் போல, அதனால் நேரம் எடுத்தது, அதற்குப் பரிசாகச் சூடாகவும் சுவையாகவும் இருந்தது. எங்களைக் கவனித்த பெண் பணியாளரின் சேவையும் நன்றாக இருந்தது, ஒவ்வொரு வகையையும் எங்களுக்கு விளக்கி, எங்களுக்கு எப்படி வேண்டும் என்று கேட்டு கொண்டுவந்தார். அவருக்குப் பாராட்டுகள்.

நாங்கள் அன்று சாப்பிட்டது, பெயர்கள் நினைவில் இல்லை: காய்கறி சூப், வேகவைத்த காய்கறிகள் கலந்த சோறு, பூண்டுப் போட்ட தட்டை நூடுல்ஸ், தாமரைத் தண்டு வறுவல், மற்றும் மாம்பழக் கூழ். நூடுல்ஸ்ஸும் மாம்பழக் கூழும் அருமையாக இருந்தது. ஐவரின் சாப்பாடு, மேலும் இரண்டு வகைகள் வீட்டுக்குப் பொட்டலம் கட்டி வாங்கி வந்தது சேர்த்து ரூபாய் 5000 ஆனது. இந்த வகை மேல் தட்டு உணவகத்திற்கு இது சரியாகப்பட்டது.

Thai Veg Soup, Fried Rice, Garlic Flat Noodles, Lotus Stem and Mango Puree

Thai Veg Soup, Fried Rice, Garlic Flat Noodles, Lotus Stem and Mango Puree

நீங்களும் குடும்பத்தோடு தாய் உணவு சாப்பிட “பெஞ்சராங்” செல்லலாம். நன்றி.

Tagged in: