ஒவ்வொரு முறை திருப்பதிக்குச் சென்று ஸ்ரீ பத்மாவதி தாயாரையும்,  திருமலையில் இருக்கும் ஸ்ரீ ஏழுமலையானையும் சேவித்துவிட்டு வருவது ஒரு தெய்வீகமான அனுபவம். அப்படியான ஒரு பாக்கியம் இந்த வாரம் (1 மார்ச் 2020) கிடைத்தது.

ஸ்ரீ பத்மாவதி தாயார் திருக்கோயில், திருப்பதி

ஸ்ரீ பத்மாவதி தாயார் திருக்கோயில், திருப்பதி

பல்லாயிரம் பக்தர்களோடு கூட்டத்தில் கூட்டமாக,   சில மணி நேரங்கள் நின்று, “கோவிந்தா, கோவிந்தா” என்று கோஷமிட்டுக் கொண்டே,  முன்னேறி, கோபுரத்தைக் கடந்து, கொடிமரத்தைக் கடந்து, உள் பிரகாரத்தில் சென்று,  எதிரிலிருக்கும் கருட பகவானைச் சேவித்து, அங்கிருந்தே திருவேங்கடமுடையானை வணங்கிக்கொண்டு,  மனதிற்குள் மந்திரங்களையும், நமது நன்றிகளையும், வேண்டுதல்களையும் சொல்லிக்கொண்டே அருகில் சென்று, அவன் திருவுருவத்தை முழுவதாக மனதில்  வாங்கிக் கொள்ளும் முன், “ஜருகண்டி, ஜருகண்டி” என்ற சத்தத்தோடு நம்மை தள்ளி விடுவதை உணர்ந்து, திரும்பி, பின்னால் பார்த்துக்கொண்டே வெளிவந்து,  “ஜெய விஜய” வாயில் அருகே திரும்பும் முன் ஒரு முறை திருவேங்கடமுடையானை தரிசித்து வெளிவருவது ஒரு பாக்கியம்.

அதற்குப்பின் எதிரில், மடப்பள்ளியில் இருக்கும் ஏழுமலையானின் தாயாரைச் சேவித்து,  மறக்காமல் உண்டியலில் நம் காசுகளையும், நண்பர்கள் கொடுத்திருந்தப் பணத்தைப் போட்டு விட்டு, மீண்டும் ஒருமுறை மனதில் பிரார்த்தித்து, சிறிய கோபுரத்தைத் தாண்டி வெளியே வந்து, க்யூவில் சுட சுடக் கொடுக்கும் வெண்பொங்கலோ,  சக்கரைப்பொங்கலோ, தொத்தியானமோ (தயிர் சாதம்), சின்ன லட்டோ பிரசாதமாகக் கிடைப்பதை சாப்பிட்டுக் கொண்டே வெளிவரும் மன நிறைவு, அமைதி திருப்பதியில் மட்டுமே கிடைக்கக்கூடிய வரம்.

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

Venkatarangan in front of the Tirumala Tirupati Musical Fountain

Venkatarangan in front of the Tirumala Tirupati Musical Fountain

ஸ்ரீ ஏழுமலையானை சேவித்துவிட்டு வந்தால், இன்றைய (1 மார்ச் 2020) தினம் “ஸ்ரீ அனந்தாழ்வார் திருநட்சத்திர” கொண்டாட்டம் என்று தெரிந்துக் கொண்டோம்.  அதற்காக ஸ்ரீ அனந்தாழ்வார் தோட்டத்தில் அவரின் சன்னதியில் விசேஷ பூஜைகளும், விழாவும் நடந்துக் கொண்டிருக்கிறது, “வாருங்கள்” என்று என் சகலை அழைத்துச் சென்றார். அங்கே திருப்பதி பெரிய ஜீயர் ஸ்வாமிகள், திருப்பதி சின்ன ஜீயர் ஸ்வாமிகளையும் சேவித்தது கூடுதல் பாக்கியம்.

Sri Ananthalwar Thota (Garden) - ஸ்ரீ அனந்தாழ்வார் தோட்டம்

Sri Ananthalwar Thota (Garden) – ஸ்ரீ அனந்தாழ்வார் தோட்டம்

"ஸ்ரீ அனந்தாழ்வார் திருநட்சத்திர" கொண்டாட்டம் - 1 மார்ச் 2020

“ஸ்ரீ அனந்தாழ்வார் திருநட்சத்திர” கொண்டாட்டம் – 1 மார்ச் 2020

அந்த விழாவில் திரு வெங்கடகிருஷ்ணன் ஸ்வாமிகள் அவரின் கீதாசார்யன் 497 (Gitacharyan February 2020) பிரசுரத்தை வெளியிட்டு பேசியதில் நான் தெரிந்துக் கொண்டது: திருப்பதி ஜீயர் மடங்களின் தோற்றத்தைப் பற்றி – திருப்பதி பெரிய ஜீயர் மடம் தோன்றியது  23-1-1120இல், திருப்பதி சிறிய ஜீயர் மடம் தோன்றியது 1420யிலிருந்து 1430வரை ஒரு வருடத்தில். அதாவது திருப்பதி பெரிய ஜீயர் மடம் தோன்றி 900 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. (Download the PDF of the Gitacharyan February 2020 issue):

//தெழிகுரல் அருவித் தீருவேங்கடத்தானுக்கு ஒழிவில் காலம் எல்லாம் உடனாகி மன்னி வழுவிலா அடிமை செய்வதற்காக ஸ்ரீராமாநுஜர் திருமலையில் ஒருமடத்தை ஏற்படுத்தினார் என்று வரலாறுகள் தெரிவிக்கின்றன. அதுவே தற்போது பெரிய ஜீயா் மடம் என்று வழங்கப் பெற்று வருகின்றது. இந்த மடம் தோற்றுவிக்கப் பெற்று, இப்போது 900 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

திருமலை ஒழுகு எனும் நூலில் இம்மடம் ஸ்தாபிக்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. ஸ்ரீராமானுஜருடைய நேர்ச் சீடரான அனந்தாழ்வான் அருளிய ‘ஸ்ரீவேங்கடாசல இதிஹாஸமாலா” என்ற வடமொழி நூலிலும் இம்மடம் ஸ்தாபிக்கப்பட்டது குறித்த செய்திகள் விரிவாகக் கூறப் பெற்றுள்ளன. ஸ்தாபிக்கப்பட்ட நாளும் மிகத் தெளிவாகவே அந்நூலில் குறிப்பிடப் பெற்றுள்ளது. கலி 4220ம் வருடம், சாலிவாஹன சகாப்தம் 1041ம் ஆண்டு, விகாரி வருடம், தை மாதம், சுக்ல பக்ஷம் , வெள்ளிக் கிழமை அன்று இம்மடம் ஏற்படுத்தப்பட்டதாக அந்நூல் தெரிவிக்கின்றது. இந்த விவரங்களைக் கொண்டு பார்க்கும்போது, சரியாக 23-1-1120 அன்று திருமலையில் மடம் ஸ்தாபிக்கப்பட்டிருக்க வேண்டும்.

பிற்காலத்தில் மணவாளமாமுனிகள் திருமலைக்கு எழுந்தருளியபோது சிலகாலம் தாமே பெரிய ஜீயராக எழுந்தருளியிருந்து, கைங்கர்யங்கள் ஒரு நிமிடமும் விட்டுப்போகாமல் செய்யப்பட வேண்டும் என்பதற்காக சிறிய ஜீயர் மடத்தை ஏற்படுத்தினார் . இது கி.பி. 1420-30ல் நடந்திருக்க வேண்டும் . பெரிய ஜீயர் ஸ்வாமி ஒருவர் பரமபதித்து விட்டால் அடுத்த கணமே சிறிய ஜீயர் பெரிய ஜீயராக ஆகி, உடனே அவர் சிறிய ஜீயர் ஸ்வாமி ஒருவரை நியமிப்பது என்ற ஏற்பாடு இன்றளவும் இடையறாது நடைபெற்று வருகிறது. இவ்வாறாக, எம்பெருமானார் , மணவாள மாமுனிகள் இருவருமே பட்டத்தீல் எழுந்தருளியிருந்த ஒரே மடம் என்ற பெருமை திருமலை பெரிய ஜீயர் மடத்திற்கு மட்டுமே உண்டு. //

(Above was from 2020 February issue of Gitacharyan by Sri Venkatakrishnan Swamy mentioning the establishment of Tirupati Tirumala Periya Jeeyar Swamy Mutt to be on the 23-1-1120 and Tirupati Chinna Jeeyar Swamy Mutt to be from 1420-30.)

Tirumala Tirupati Swami Pushkarini

Tirumala Tirupati Swami Pushkarini

Tirupati Tirumala Sri Varahaswamy Temple - ஸ்ரீ வராஹ ஸ்வாமி திருக்கோயில்

Tirupati Tirumala Sri Varahaswamy Temple – ஸ்ரீ வராஹ ஸ்வாமி திருக்கோயில்

My earlier posts on Tirupati: 2013, Bashyakara Sannidhi in Tirumala in 2014Tirumala Tirupati Museum in 2019, Temples in Tirupati City, and, An Evening in Tirumala Tirupati 2019.

 

Categorized in:

Tagged in:

,