சில தினங்களுக்கு முன் முகநூலில் நண்பர் ஒருவர், நாம் பார்த்து ரசித்த பழைய படங்களைப் பற்றிப் பதிவு செய்யுமாறு கேட்டிருந்தார், அதில் எனக்குத் தோன்றிய ஒரு படம் ஜப்பானில் கல்யாணராமன் (1984). மீண்டும் அந்தப் படத்தை இன்று பார்த்தேன்.

இந்தப்படத்தில் கதை கத்திரிக்கா என்று பெரிதாக எதுவும் கிடையாது, ஜப்பானை சுற்றி காட்டுவது தான் படத்தின் நோக்கம். அந்தக் காலத்தில் வெளிநாட்டைப் பார்க்காத நமக்கு இது ஒன்றே போதும். என் பள்ளி காலத்தில் நான் (இந்தியாவைத் தவிர) வெளிநாட்டை இவ்வளவு விரிவாகப் பார்த்தது இந்தப் படத்தில் தான், அதுவும் அந்த உலகக் கண்காட்சி பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. நினைத்தாலே இனிக்கும் (1979) வந்த போது நான் சிறிய குழந்தை, யாரும் கூட்டி செல்லவில்லை. எனக்கு வெளிநாடுகள், குறிப்பாக ஜப்பான் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இதைப் பார்த்த பிறகு தான் வந்தது – இந்தப் படம் வந்து இருபது ஆண்டுகள் (2003) கழித்துத் தான் ஜப்பான் போகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அடம் பிடித்துக் கதையைத் தேடுவேன் என்றால் – வில்லன் அடியாட்களை அனுப்பி நாயகனை அடிக்க முயற்சிப்பது, அதில் எல்லா முறையும் நாயகன் வெற்றி பெறுவது, நாயகன் (கமலஹாசன்) நாயகியை (ராதா) காதலிப்பது, காதல் பாடல்கள் பாடுவது, ஆவியாக வரும் ‘கமல்’ சின்னப்பையனோட சேர்ந்து செய்யும் சேட்டைகள் மற்றும் கவுண்டமணி கோவை சரளாவின் நகைச்சுவை துணுக்குகள் தான் கதை. அன்றைய நாளில் ரசிக்கும் படி இருக்கும். சத்யராஜ், பெரிதாக இந்தப் படத்தில் வாய்ப்பெல்லாம் கிடையாது. நாயகி ராதா அழகாக வந்து போகிறார்

இந்தப் படம் முழுவதுமாக YouTubeஇல் இலவசமாக இருக்கிறது. பார்க்கலாம்.

ஜப்பானில் கல்யாணராமன் (1984)

Tagged in:

,