
Life and Historical Beliefs of Baratavar by Joe D Cruz
இவர் எழுதிய புத்தங்களான “ஆழி சூழ் உலகு” மற்றும் “கொற்கை” பற்றிப் படிக்கும் போதெல்லாம், இவரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ள சிரமப்பட்டுள்ளேன். அது எப்படி ஒரு தமிழ் எழுத்தாளருக்கு இந்தப் பெயர் என்று நான் நினைத்ததுண்டு. இதே கேள்வியை (அவரின் பெயர் காரணம்) முன்வைத்தே “பரதவர் வாழ்க்கையும் தொன்மங்களும்” என்ற தலைப்பில் இன்று தி.நகர் தக்கர் பாபாவில் நடந்த தனது உரையில் பேச தொடங்கினார் திரு.ஜோ டி க்ரூஸ் (Joe D’Cruz). எனக்குப் பிடித்த ‘மரியான்‘ தமிழ்த் திரைப்படத்துக்கு இவர் வசனம் எழுதியுள்ளார் என்பதால் கூடுதல் ஆர்வம் எனக்கு.

பரதவர் – என்ன ஒரு அழகான சொல், இதன் பொருளை சரியாக இன்று தான் தெரிந்துக்கொண்டேன், தமிழ் அகராதி சொல்கிறது “பரதவர்” என்றால் ‘நெய்தல் நில மக்கள்’, ‘வியாபாரம் செய்யும் சமுகம்’ என்றும். “எங்கள் முரட்டு பரதவர்” என்று இந்தச் சொல்லை பல முறை இன்று டி க்ரூஸ் ஆக்ரோஷமாக சொல்லக் கேட்டேன், நன்றாக இருந்தது. அவர் பேசியதில், என்னுடைய குறிப்பில் நான் எழுதியதில் இருந்து கீழே:
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் “வில்லவ ராயர்” என்ற குறுநில மன்னரின் மகள் தான் குமரி (இன்று கன்னியாகுமரி என்று பெயர் வர காரணம்), அவளுக்கு திருமணம் நடக்கப் போகிறது, ஊரே தயாராக இருக்கிறது, அவளின் அழகான கழுத்திற்கு ஏற்ற சிறப்பான முத்து மாலையும் செய்தாகிவிட்டது, அப்போது மன்னருக்கு ஓர் அதிர்ச்சி செய்தி வருகிறது, கடல் பல நூறு அடி உள்வாங்கிவிட்டது என்று. சிறு வயதில் தந்தை சொல்ல ராயருக்கு தெரியும் இது கடல்கோள்கள் (சுனாமி) என்று, இது ஊரையே அழித்துவிடும், எதுவும் செய்யமுடியாதென்று, பயத்தில் திகைத்த ராயரைப் பார்த்து மகள் குமரி சொல்கிறாள், அப்பா கவலை கொள்ளேல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று; எப்படியம்மா என்கிறார் ராயர்; எப்படி என்று கேட்கக்கூடாது, நான் என்ன செய்தாலும் தடுக்கக்கூடாது என்கிற உத்திரவாதத்தை வாங்கிக் கொண்டு கடற்கரையை நோக்கி செல்கிறாள் குமரி. உள்வாங்கிய கடல் மலைபோல பொங்கி பாய்ந்து வருகிறது, குமரி பயப்படவில்லை, சென்று கொண்டே இருக்கிறாள், தண்ணிரில் தன் காலை வைக்கிறாள்; பாய்ந்து வரும் கடல் அவளின் ஸ்பரிசத்தை உணர்கிறது, உடனே அந்த இடத்திலேயே நின்று விடுகிறது. தன் உயிரை நீர்த்து, ஊரயே காப்பாற்றிய குமரி அன்றிலிருந்து இன்றுவரை பரதவர்களின் தெய்வமாக இருந்துக் காப்பாற்றுகிறாள்.
பிறகு 500 ஆண்டுகளுக்கு முன் முத்து வணிகத்தை இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு செய்துவந்த அரேபியர்கள் (இஸ்லாமிய சகோதரர்கள்), இந்தப் பகுதியைப் பிடித்துவிட வேண்டும் என்று போர் தொடுக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நம் பக்கம் மடிகிறார்கள். மிச்சமுள்ள ஊர் பெரியவர்களுக்கு ஒரு செய்தி வருகிறது, அரேபியர்கள் திருச்செந்தூர் கோயிலை இடித்து, அந்த இடத்தில் கோட்டை ஒன்றைக் கட்ட போகிறார்கள் என்று. அரேபியர்களை எதிர்க்க வெடி மருந்து வேண்டும், அவற்றை அப்போது வைத்திருந்த போர்ச்சுகீசியர்கள் இவர்களுக்கு உதவ முன்வருகிறார்கள். உதவியும் செய்து, அரேபியர்களை விரட்டியும் விடுகிறார்கள். பதிலுக்கு பரதவர்களிடம் நீங்கள் எங்களுக்கு கைமாறாக ஒன்று செய்ய வேண்டும், நீங்கள் எல்லாம் எங்கள் மதத்திற்கு மாற வேண்டும், மாறுவீர்கள் என்று குமரி ஆத்தாவின் மேல் சத்தியம் செய்ய வேண்டும். என்ன ஆச்சரியம், என்ன பக்குவம் அப்போதைய எங்கள் ஊர் பெரியவர்களுக்கு பாருங்கள், சரியென்று சொல்லி மாறுகிறார்கள். அவர்களின் வழி தொன்றல் தான் நான், அதனால் தான் எனக்கு ‘ஜோ டி க்ரூஸ்’ என்று இங்கேயுள்ள யாராலும் சரியாகச் சொல்லமுடியாத போர்ச்சுகீச பெயர்.
இன்றுக்கூட ஆழ் கடலில் சுறாமீனின் தலையில் அடித்து எங்கள் குமரி ஆத்தாமேல் சத்தியம், என்னால் உனக்கு தீங்கு வராது, நீயும் என்னை எதுவும் செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள் எங்கள் ஊர் மீனவர்கள், அவர்கள் எல்லாம் கத்தோலிக்க விசுவாசிகள் தான், இருந்தாலும் குமரி அவர்களுக்கு தாய், தாய் வழி வழிபாடு முக்கியம் அதனால் தான். இதில் முரண்பாடு எதுவும் இல்லை, ஏன் என்றால் இந்த மண்ணில் இருக்கிறது ஹிந்துத்துவம். ஹிந்துத்துவதில் பல கடவுள்கள், அவற்றில் குமரியும் ஒன்று, நம் மூன்னோர்களும் ஒரு தெய்வம். வேற்று மத இந்தியார்கள் கூட தார்காவிற்குள் சென்றால் கையெடுத்து கும்பிடுவார்கள், அது தான் அரவணைத்து செல்லும் பக்குவம். ”நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க..” என்று கோயிலுக்கு போய் உரக்கப் பாட வேண்டும் என்று எனக்கு ஆசை. ஹிந்துத்துவம் என்பது மெச்சூரிட்டி. அது ஒரு பக்குவம். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம். நம் இந்தியாவில் உள்ள ஆன்மீகம், இந்தியர்களிடம் உள்ள கலாச்சாரம் ஆகியவற்றால் நாம் (ஆன்மீகத்தில்) இமயத்தின் உச்சியில் இருக்கிறோம்.
மன்னார் வலைக்குடா முத்து வணிக்கத்திற்கு பெயர் போனயிடம், அவை அங்கே இருக்க காரணம் பவழப்பாறைகள் (Corel reefs). அவற்றை எப்படி அந்தக்காலத்தில் பாண்டியர்கள் பாதுகாத்தார்கள்?. அருகே வாழ்ந்த மீனவர்கள் உதவியுடன் தான். பாண்டியர்கள் எங்கேங்கே பவழப்பாறைகள் இருந்தது என்று பதிவுச்செய்து வைத்தே பாதுக்காத்தார்கள்.
மாமன் சாமி, மச்சான் சாமி, விலங்கு சாமி என்று இங்கே பல சாமிக்கள் உண்டு. மச்சான் சாமி என்றால் திருச்செந்தூர் முருகன். எப்படி அவர் மச்சான்?. எங்கள் வீட்டு பெண்ணை மனந்ததால் முருகன் எங்களுக்கு மச்சான். அதற்கு உதாரணம் எங்கள் வழக்கத்திலுள்ள தாலாட்டுப் பாடல் “பரத்தி மகள் தேவானை குலவிளக்கா இங்கிருக்க.. குறத்தி மகள் வள்ளி பின்னால் போவானேன் குறவனாய்..”.
Every pearl diver who dives deep into sea bed to get pearls is a decision maker. He has about 2 to 3 minutes of time (oxygen), he needs 1 minute to go down, 1.5 minute to come up, within the remaining 30 seconds, he has to make a decision which rock he will try. You got to quickly make a decision, can’t say I am lost in situation என்று.
வாழ்கையில் வெற்றி நிலைக்கு வந்தால், வெற்றி உன்னை இழுத்து கொண்டு போகும். அது முக்கியமில்லை, அப்போது நீ உணர்வோடு அந்த வெற்றியை ரசிக்கும் நிலையில் இருக்கிறாயா (அல்லது உணர்ச்சியில்லாத இயந்திரமாக மாறிவிட்டாயா) என்பது தான் முக்கியம்.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழ் பாரம்பரியம் அறக்கட்டளைக்கு நன்றி. மேலே உள்ளவற்றில் சில தொடர்களை சரியாக பார்த்தெழுத வசதியாக இருந்த Venkatasubramanian Ramamurthy அவர்களின் பதிவிற்கு நன்றி.
Video of the talk is in YouTube here.


5 Comments
michaelfernandogmailMike
Thanks for the effort. I dont read Tamil. If you could, can you also translate it into English, please? Thanks
venkatarangan
Will try to find time and do it.
khaja Khan. S.A
I think. It is பாண்டியர்கள் Instead of பாண்டவர்கள்
venkatarangan
நன்றி. திருத்திவிட்டேன். Good catch, my typo.
veerutnc
Instructive. Interesting