தமிழ்நாட்டில் ஆண்ட கட்சி, ஆளும் கட்சி, மற்ற கட்சிகள் என்று எதற்குமே பொதுப் போக்குவரத்துப் பற்றிய அக்கறை சிறிதும் கிடையாது என்பதை நமக்கு மீண்டும் மீண்டும் நினைவுறுத்துகிறார்கள். ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள் வேறு, பொதுமக்கள் வேறு என்பதை பிரிட்டிஷ்காரர்களைப் போல இவர்களும் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். நாம் தான் ஜனநாயகம், மக்களாட்சி என்று ஏமாந்து கொண்டிருக்கிறோம்.
(பொறுப்புத் துறப்பு: என் குற்றச்சாட்டைத் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள எல்லாக் கட்சிகளுக்குமே பொதுவாகவே சொல்கிறேன். தயவுசெய்து இந்தப் பதிவில் நான் ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டும் குறை சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். திமுக அலுவலகம் இருக்கும் அண்ணா சாலையிலும் இதே போன்ற பிரச்சனையைப் பலமுறை நான் பார்த்திருக்கிறேன். முதல்முறை ஜெ.ஜெ. ஆட்சியில் இதைவிட மோசம்.)
விஷயம் இதுதான். இன்றைக்கு ராயப்பேட்டையில் இருக்கும் எனது மருத்துவரிடம் ஆலோசனைப் பெறச் செல்ல வேண்டும். அவர் இருப்பது டி.டி.கே சாலையில், இந்தியன் வங்கி தலைமையகத்திற்கு அருகில். அதிமுக தலைமையகம் இருக்கும் அவ்வை சண்முகம் சாலை வழியாகச் செல்வது வசதி.
குறுகலான இந்தச் சாலையில் போக்குவரத்து பொதுவாகவே சிரமமாக இருக்கும். தேர்தல் முடியும் வரை இந்தச் சாலையில் போவதைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக அதிமுக அலுவலகத்தில் முக்கியக் கூட்டங்கள் நடக்கும் போது இங்கு எல்லாப் பக்கமும் கட்சிக் கொடியோடு பெரிய பெரிய கார்கள் நிற்கும், அதனால் ஊர்ந்து கொண்டு செல்ல அரை மணி நேரம் ஆகும், ஆனால் போக முடியும். ஆனால் அப்படி எந்த நிகழ்ச்சியும் இன்று இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தும் ஏதோ காரணத்தினால் போலீஸ் ஒட்டுமொத்தச் சாலையையுமே அடைத்துவிட்டார்கள். நல்ல வேளை, நடப்பவர்களை அனுமதித்தார்கள்.
ஏற்கனவே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து ராயப்பேட்டை ஹை ரோடு நுழையும் வழியைச் சென்னை மெட்ரோ அடைத்துவிட்டது. அதனால் அவ்வை சண்முகம் சாலை வழியாகவே மாநகரப் பேருந்துகளும் செல்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


காவலர் தரப்பு: “என்ன விஷயம், ஏன் இந்த அடைப்பு?” என்று பணியில் இருந்த காவலர் ஒருவரை மரியாதையாகக் கேட்டேன். “எதற்கு என்று தெரியாது, எங்களுக்கு வந்த உத்தரவு. இவர்கள் (கட்சியினர்) ஏன் இங்கே கூடுகிறார்கள், வேறு பெரிய இடமாக அலுவலகத்தை மாற்றிப் போகலாமே?” என்று அவர் புலம்ப ஆரம்பித்துவிட்டார். “ஆமாம்” என்பது போலத் தலையை ஆட்டி, “அண்ணா சாலை பழைய சபையர் தியேட்டர் இடம் இருக்கிறதே…” என்று அவரிடம் காதில் விழாத மாதிரிச் சொல்லி நகர்ந்தேன். அமெரிக்காவில் NIMBY (Not In My Backyard) என்பார்களே – அதாவது “என் பாதையில் பிரச்சனை இல்லை என்றால் சரி” என்ற சாமானியன் எண்ணம் எனக்கு.
அதிமுக கட்சி உறுப்பினர் தரப்பு: கொஞ்சம் தூரம் தாண்டிப் போனவுடன் நின்றிருந்த நூற்றுக் கணக்கான கட்சியினரில் இருவரிடம் இதே கேள்வியைக் கேட்டேன். “என்ன சார் இன்று நடக்கிறது, ஏன் இவ்வளவு கூட்டம்?” என்று. அதற்கு அவர், “தலைவர் (இபிஎஸ்) வருகிறார், அதனால்தான்” என்றார்.
“அப்படியா?” என்றேன். தொடர்ந்து விடாமல் கேட்டேன், “தலைவர் தினமும் வருபவர்தானே, இன்று மட்டும் ஏன் போலீஸ் சாலையை அடைத்துவிட்டார்கள்? மருத்துவரைப் பார்க்கப் போக என்னைப் போன்றவர்களுக்குச் சிரமமாக இருக்கிறதே” என்றேன்.
அதற்கு அவர், “காவல்துறையினர் அவர்களுக்கு ஏன் வம்பு என்று வேண்டுமென்றே செய்யும் வேலை இது. இதெல்லாம் ஆளும் கட்சியினரின் தூண்டுதலால் போலீஸ் செய்யும் வேலை. வேண்டுமென்றே மக்களுக்குக் கஷ்டத்தைக் கொடுத்து எங்க பெயரைக் கெடுக்கிறாங்க” என்றார். “தாங்க்ஸ்” என்று தமிழில் நன்றி சொல்லி நகர்ந்தேன். உடனே அருகில் இருந்தவர், “மன்னிச்சுகுங்க சார். இப்போ தலைவர் கிளம்பியவுடன் சரியாகிவிடும்” என்றார். இதுவுமே தேர்தல் அருகில் வருவதால் நடக்கும் ‘மரியாதைப் பண்பு’ என்று புரிந்துகொண்டு நகர்ந்தேன்.
வேண்டுகோள்: தமிழ்நாட்டில் இருக்கும் இரு பெரும் கட்சிகளுக்கும், புதிதாக வந்துள்ள கட்சிக்கும் எனது வேண்டுகோள். தயவுசெய்து, எல்லா ஊர்களிலும் உங்கள் அலுவலகங்கள் இருக்கும் பகுதியில் வாழும் பொதுமக்களை, குறிப்பாகப் பொதுப் போக்குவரத்தில் வருபவர்களைப் பற்றிச் சிறிது யோசியுங்கள். ஏற்கனவே அன்றாட வாழ்விலும் போக்குவரத்திலும் சிரமப்படும் எங்களுக்கு எந்தவிதத்திலும் இடஞ்சல் கொடுக்காமல் உங்கள் அரசியல் பணிகளைச் செய்யுங்கள். அப்படிச் செய்தால் மக்கள் என்றைக்குமே உங்களை ஆதரிப்பார்கள். நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

