இது நடந்தது சுமார் 1997/98 காலப்பகுதியில். சென்னை நகரில் நடந்த ஒரு முக்கியமான மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவன நிகழ்ச்சியில் முதல் முறையாக அவர்கள் சார்பாகப் பேசினேன். அப்போது வந்திருந்த மைக்ரோசாப்ட் இண்டர்டெவ் மென்பொருளின் சோதனைப் பதிப்பு (beta) குறித்துப் பேசுவதற்காக, ஒரு பெரிய டெஸ்க்டாப் கம்ப்யூட்டரையே தூக்கிக்கொண்டு சென்றேன்.
அந்த அறையில் என்னைத் தவிர இருந்த நூற்றுக்கணக்கானவர்கள் பலரும் அந்தத் துறையில் அனுபவசாலிகள். இளைஞனான எனக்கு நடுக்கம். அப்போது என் உரையின் நடுவே திடீரென மின்சாரம் போனது. ஜெனரேட்டர் வர நேரமானது. அமைதியான அந்த அரங்கில், மெதுவாகத் தத்தித் தத்தி ரீபூட் (reboot) ஆன எனது கம்ப்யூட்டர்… அந்த நிமிடங்கள் எனக்கு ஒரு யுகம் போலத் தெரிந்தன.
அந்தத் தருணம் எனக்கு ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. ஒரு பேச்சாளராக இருப்பது என்பது வெறும் செயல்முறை விளக்கங்களைக் (demo) காட்டுவது மட்டுமல்ல; அது முறையான தயாரிப்பு, அனுபவம் மற்றும் நமக்கு முன்னே இந்தப் பாதையில் சென்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்வது என்பதைப் புரிந்துகொண்டேன்.
அதன் பிறகு கடந்த முப்பது ஆண்டுகளாகத் தொழில்நுட்பத்தைப் பற்றி உலகத்தின் பல நாடுகளில் பேசியிருக்கிறேன். இப்போதெல்லாம் தொழில்நுட்பமும் செய்யறிவும் (Artificial Intelligence) நிஜமாகவே வணிகங்களுக்கும் நிறுவனர்களுக்கும் எப்படிப் பயன்படுகின்றன என்பதைப் புரிந்துகொண்டு, அவற்றைச் செயல்படுத்தவும் பேசுகிறேன். கள எதார்த்தம் சார்ந்த உரையாடல்கள் இவை.
இன்று இணையத்தில் பல ஜாம்பவான்களின் உரைகளைக் கேட்டாலும், சக பேச்சாளர்களின் சமூகம் தரும் அனுபவமே தனி. ஒருவருக்கொருவர் கருத்துகளைப் பகிர்ந்து, விவாதித்து, சேர்ந்து கற்றுக்கொள்வதில் எனக்கு எப்போதும் அலாதிப் பிரியம்.
அதற்காகத்தான் இந்த வாரம் நடக்கவிருக்கும் PSS 2026 (Professional Speakers Association of India) வருடாந்திர மாநாட்டை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். பேசுவதைக் கலையாகப் பார்ப்பவர்களுடன் சேர்ந்து கற்கவும், சில பழைய முறைகளைத் துறக்கவும் (unlearn) இந்த நிகழ்வு உதவும்.
இந்த முறை இந்த நிகழ்வு நமது சென்னையிலேயே நடப்பது கூடுதல் மகிழ்ச்சி!
நீங்கள் அங்கே வருகிறீர்கள் என்றால், நிச்சயம் சந்திப்போம். பேச்சுக்கலை குறித்த உங்கள் ஆர்வத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால் நானும் பேசக் காத்திருக்கிறேன்!
#PSS2026 #ProfessionalSpeaking #Founders #PublicSpeaking
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

