உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகள் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்த பில் கேட்ஸ் தொடங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஐம்பதாவது பிறந்தநாள் போன வாரம் (ஏப்ரல் 4, 2025) வந்தது.
மற்ற துறைகளைக் காட்டிலும் கணினித் துறையில் “மாற்றம் ஒன்று தான் மாறாதது”. வைரமுத்துவின் வரிகளில் ரஜினியின் கோச்சடையான் படப்பாடலில் “மாறுவது எல்லாம் உயிரோடு, மாறாதது எல்லாம் மண்ணோடு” என்று வருவது போலப் பல முறை தன்னை புதுப்பித்துக் கொண்ட நிறுவனம் மைக்ரோசாப்ட்.
மைக்ரோசாப்ட் தொடங்கிய அடுத்த ஆண்டு (1976) பிறந்த ஆப்பிள் நிறுவனம் கூட, நடுவில் சுமார் பத்தாண்டுகள் தொலைந்துபோய், பின்னர் ஸ்டிவ் ஜாப்ஸ் திரும்பி வந்து ஐபோனை அறிமுகப்படுத்தியதன் மூலம் காப்பாற்றினார். ஆனால் தனது ஐம்பது ஆண்டுகள் பயணத்தில் தொடர்ந்து முன்னணியில் மைக்ரோசாப்ட் இருக்கக் காரணம் தன்னை ஐந்து முறை முற்றிலுமாக மாற்றிக் கொண்டது. உலகளவில், ஏன் வரலாற்றிலுமே இத்தகைய புதுப்பித்தல் மிக அரிது.
1️⃣1980களில், பிரபலமாக இருந்தது மைக்ரோசாப்ட் டாஸ் (MS-DOS) இயங்குதளம். இது எழுத்துகள் அடிப்படையான எளிமையான கணினி இடைமுகம். இந்தக் காலத்தில் ஆப்பிள் நிறுவனம் சுட்டியைக் கொண்டு திரையில் தெரியும் படங்களைக் கையாளக்கூடிய வரைகலை பயனர் இடைமுகத்தை (GUI) அறிமுகம் செய்தது. புரட்சிகரமான இந்த முன்னேற்றம் மைக்ரோசாப்ட்டை இல்லாமல் செய்துவிடும் என்று தோன்றிய காலத்தில் விண்டோஸ் இயங்குதளத்தை அறிமுகம் செய்து வெற்றி பெற்றது. அப்போது முன்னணியில் இருந்த ஐ.பி.எம்.முடன் இணைந்து ஒ.எஸ்.2 என்கிற இயங்கு தளத்தை மைக்ரோசாப்ட் உருவாக்கிக் கொண்டிருந்த போதும் நிறுவனர் பில், தனியாக விண்டோஸை முன்னேற்றுவதை நிறுத்தவே இல்லை. தொழில்நுட்ப ரீதியில் பொறியாளர்களால் பாராட்டப்பட்ட ஒ.எஸ்.2, வணிக ரீதியில் தோல்வியடைந்தது. துணிச்சலாக, ஐ.பி.எம்மிடம் இருந்து மறைத்து உருவாக்கிய விண்டோஸ் 3.0 வெளிவந்து மிகப் பெரிய மென்பொருள் நிறுவனம் என்கிற இடத்தை மைக்ரோசாப்ட் அடைய வழி செய்தது.
2️⃣1990களின் மத்தியில் இணையம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியிருந்தது. இணைய உலாவியான நெட்ஸ்கேப் (Netscape) வெளிவந்து உலகையே இணைத்த போது, சுதாரித்துக் கொண்ட பில் கேட்ஸ், நிறுவனத்தின் உள்ளே போர்க்குரல் எழுப்பினார். இதன் காரணமாக உருவான மைக்ரோசாப்ட் ஐ.இ. இணைய உலாவி அடுத்த பதினைந்து ஆண்டுகள் முன்னணியில் இருந்தது. நெட்ஸ்கேப்பை அழித்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருவாயைக் காப்பாற்றியது, இணையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து பில் செய்த மிகப் பெரிய மாற்றம் அது.
3️⃣2000 ஆண்டின் தொடக்கத்தில் ஐ.இ.யின் வெற்றியின் காரணமாக ஒட்டு மொத்த இணையத்தின் வாசலாக மைக்ரோசாப்ட் இருக்கும் என்று அஞ்சிய அமெரிக்க அரசு, இந்நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் புகார் அளித்தது. இதன் காரணமாக நிறுவனத்தை இரண்டாக உடைக்க வேண்டும் என்ற தீர்ப்பும் வந்தது. இதை நிறுவனமும் பில்லும் எல்லா வழியிலும் கடுமையாக எதிர்த்து உடையாமல் பார்த்துக் கொண்டார்கள். இந்த விசாரணையின்போது பில் கேட்ஸ் வழங்கிய மழுப்பலான பதில்கள் அப்போது பேசுபொருளானது. இருபது ஆண்டுகள் கழித்து சமூக ஊடகங்களின் அத்துமீறல்களை அமெரிக்க அரசு விசாரணை செய்தபோது இதுவே முன்மாதிரியாக இருதரப்பினருக்கும் உதவியது. பல ஆண்டுகள் நடந்த இந்த விசாரணையின் காரணமாகச் சந்தை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனிக்க முடியாமல் கோட்டைவிட்டது மைக்ரோசாப்ட். இதன் காரணமாகக் கூகுள் நிறுவனம் தனது முதல் சில ஆண்டுகளில் வேகமான வளர்ந்து பின்னர் மைக்ரோசாப்ட்டுக்கு தலைவலியைக் கொடுக்க வழி செய்தது.
4️⃣வருங்காலங்களில் வரக் கூடிய தொழில்நுட்பங்களைச் சரியாகக் கணிக்கக் கூடியவர் பில் கேட்ஸ். 1995 ஆம் ஆண்டு வெளிவந்த அவருடைய “தி ரோட் அஹெட்” (The Road Ahead) நூலில் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் பல வசதிகளைச் சொல்லியிருந்தாலும் அவற்றைச் சரியான நேரங்களில் மைக்ரோசாப்ட்டால் உருவாக்க முடியவில்லை. இதற்குச் சிறந்த உதாரணம், திறன்பேசிகள். கையளவு கணினிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த பில், 1996இல் இருந்தே இவற்றுக்கான இயங்குதளத்தை உருவாக்கி இருந்தார். 2000ஆம் ஆண்டே விண்டோஸ் மோபைல் இயங்குதளத்தைக் கொண்ட செல்பேசிகள் வெளிவந்துவிட்டன – இன்றைக்கு இருக்கும் ஐபோனின் முன்னோடி இது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனாலும் சந்தையில் விண்டோஸ் மோபைல் எதிர்ப்பார்த்தளவு பிரபலமாகவில்லை. 2007ஆம் ஆண்டு வெளிவந்த ஆப்பிள் ஐபோன், பின்னர் கூகுள் கொண்டுவந்த ஆன்ட்ராய்ட் செல்பேசிகள், கணினி உலகையே திருப்பிப் போட்டன.
இதை எதிர்கொள்ள அப்போதைய தலைவர் ஸ்டீவ் பாமர் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. இந்தப் பத்தாண்டுகளில் நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு வளரவேயில்லை. நல்ல வேளை, இந்த முயற்சிகளோடு அப்போது அமேசானால் முன்னெடுக்கப்பட்ட மேகக் கணிமை துறையைச் சரியாக அடையாளம் கண்டு, அதில் முதலீடுகளைத் தொடங்கியிருந்தார் ஸ்டீவ்.
5️⃣2014ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட்டின் தலைவராக இந்திய-அமெரிக்கர் சத்ய நதேலா வந்தார். இந்தக் காலத்தில் இலட்சத்திற்கும் அதிகமானோர் வேலை செய்யும் நிறுவனமாக மாறியிருந்தது மைக்ரோசாப்ட். இதனால் உள்ளுக்குள் மந்தநிலையும், குழுக்களுக்குள் கடுமையான போட்டியும் பொறாமையும் வளர்ந்து நிறுவனத்தை அரிக்கத் தொடங்கியிருந்தது. சத்யா, தனது முதல் பேட்டியில் “இந்தத் துறை புதுமையை மட்டுமே மதிக்கும், பாரம்பரியத்தை அல்ல” என்று முழங்கினார்.
தலைவராக வந்தவுடன் நஷ்டத்தில் இருந்த பல தயாரிப்புகளை, விண்டோஸ் மோபைல் உட்பட, அடையாளம் கண்டு அவற்றை நிறுத்தினார். கூகுள் நிறுவனத்துடன் கடுமையான போட்டியில் இருந்த மைக்ரோசாப்ட் ஆபிஸ் வெற்றி பெற அவற்றின் இணையப் பதிப்புகளை முன்னேற்றினார். தாங்கள் தோல்வியடைந்த செல்பேசி இயங்குதளச் சந்தையை விட்டு, செல்பேசிகளில் வரும் செயலிகளில் கவனம் செலுத்தினார். முக்கியமாக “மைக்ரோசாப்ட் அஸூர்” என்கிற அவர்களின் மேகக் கணிமையின் வளர்ச்சிக்கு அதிகளவு முதலீடுகள் செய்தார். இவை எல்லாமாகச் சேர்ந்து பலனளித்தன. கடந்த பத்தாண்டுகளில் உலகளவில் இருக்கும் முதல் ஐந்து மதிப்புமிக்க கம்பெனிகள் வரிசையில் மைக்ரோசாப்ட் தொடர்ந்து இடம் பெறச் செய்துள்ளார் சத்ய நதேலா.
பெரும் நிறுவனங்களைக் கூர்ந்து நோக்கினால் அவர்களின் செயல்முறைகளில் நிறுவனரின் சாயலையும், நிறுவனம் தொடங்கிய நகரின், நாட்டின் தாக்கத்தையும் எளிதாக உணரலாம். மைக்ரோசாப்ட்டின் வளர்ச்சியில் நிறுவனர் பில் கேட்ஸின் குணத்தையும், ரேட்மேண்ட் நகரின் அமைதியையும் பார்க்கலாம்.
பில் கேட்ஸின் தந்தை புகழ்பெற்ற சட்டநிபுணர். பில் கேட்ஸ் சட்டம் படிக்காவிட்டாலும் அந்தத் துறையின் அடிப்படைகளை நன்கு தெரிந்துவைத்திருந்தார். அவரும் பால் ஆலனும் சேர்ந்து மைக்ரோசாப்ட்டின் முதல் தயாரிப்பான பேசிக் நிரலிமொழியை வெளியிட்டு அதற்கு விலை வைத்து விற்றார்கள். அதுவரை பொதுவாகக் கணினித் துறையில் வன்பொருள்களை விலை கொடுத்து வாங்குவார்கள், மென்பொருள்களைக் கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சிக் கூடங்களில் இருப்போர் எழுதி, இலவசமாக வெளியிடுவார்கள் –இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் திறமூலத் திட்டங்களைப் போன்ற நிலை அது. இப்படி பேசிக்கை விற்ற போது பேசிக் நிரலியின் பிரதியைப் பயன்படுத்தும் உரிமையை மட்டுமே பயனர்களுக்கு அளித்து, நிரலியின் முழுக் காப்புரிமையைத் தங்களிடம் இருக்கும்படியான ஒரு சட்ட ஒப்பந்தத்தை (Software License) தயார் செய்தார் பில். அப்போது இதற்குப் பயனர்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு வந்தது. இதற்குத் தனது தரப்பு விளக்கமாக 1976ஆம் ஆண்டு, பில் எழுதிய “திறந்த கடிதம்” இன்றும் அறிவுசார் சொத்துகள் மீதான காப்புரிமையின் குரலாக இருக்கிறது.

மிகவும் அறிவுக் கூர்மையானவர் பில் கேட்ஸ், அதனாலேயே மற்றவர்கள் பேசுவதை மதிக்கமாட்டார் என்று பலரும் அவரைப் பற்றிக் குறை சொல்லுவார்கள். அவர் தலைமைப் பதவியில் இருந்த போது அவரிடம் தங்கள் குழுவின் தயாரிப்புகளைப் பற்றிய விளக்கம் அளிக்கச் சென்றவர்கள் சிலருடன் பேசும் வாய்ப்பு இந்தக் கட்டுரையாளருக்கு உண்டு. அவர்கள் எல்லாம் சொல்வது இது: சந்திப்பு தொடங்கி சில நிமிடங்களிலேயே பேசுபவரை இடைமறித்து கேள்விகளைக் கேட்கத் தொடங்குவார் பில். ஒவ்வொரு கேள்வியும் கூர்மையாகவும், அந்தத் தயாரிப்பை நன்றாகப் புரிந்து அதன் ஆழத்திலிருந்து வரும். பதில்கள் சரியாக வரவில்லை என்றால், பில்லின் கோபத்திற்கு ஆளாக வேண்டியதுதான். அங்கே வேலை செய்தவர்களால் இதை PQPA, அதாவது ‘நுட்பமான கேள்விகள் துல்லியமான பதில்கள்’ என்று அழைக்கப்பட்டது. இந்தளவு அழுத்தமான சூழ்நிலையின் பிரதிபலிப்பாகவோ என்னவோ ஒரு சந்தையில் வெற்றி பெற்ற பின்னர், மைக்ரோசாப்ட் அங்கே அதன் செல்வாக்கின் மூலம் அகங்காரமாக நடந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தது என்று திறனாய்வாளர்கள் சொல்கிறார்கள்.
பில் கேட்ஸ் ஒரு சிறந்த வியாபாரி என்றாலும் அடிப்படையில் அவர் மென்பொருள் பொறியாளர். இதனால், இந்தத் துறை அசுர வேகத்தில் வளர்ந்து எல்லா நிறுவனங்களும் கணினிமயமாக்க முற்பட்ட ஆரம்பக் காலத்தில் இருந்தே மென்பொருள் வல்லுநர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார் பில். முக்கியமாக 1990களில், பெரும் நிறுவனங்களில் மேல் அதிகாரிகளை ஐ.பி.எம். போன்றவர்கள் கவர விளம்பரங்கள் செய்தபோது, பொறியாளர்களைக் கவரவே விரும்பினார் பில். அவர்களிடம் மைக்ரோசாப்ட்டின் தயாரிப்புகளை எடுத்துச் சென்றால், தங்களின் மேல் அதிகாரிகளை மைக்ரோசாப்ட் பொருள்களை வாங்கச் சம்மதிக்க வைப்பார்கள் என்பது இதன் பின்னர் இருந்த வியாபாரத் தந்திரம். இன்று வரை இந்தத் துறையில் பொறியாளர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள், கவரச் செய்யும் யுக்திகள் பலவும் மைக்ரோசாப்டில் இருந்து தொடங்கியவை. ஒரு முறை அப்போது தலைவராக இருந்த ஸ்டிவ் பாமர் விடுத்த “டெவலப்பர்ஸ்! டெவலப்பர்ஸ்! டெவலப்பர்ஸ்!” என்ற கூக்குரல் இன்றும் நினைவுகூரப்படுகிறது.

⛰️கலிபோர்னியா மாநிலத்தில் ஒரு சிறிய பகுதியை 1970களில் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கத் தொடங்கினார்கள். கணினித் துறையின் பல கண்டுபிடிப்புகள், பெரும் நிறுவனங்கள் அந்தப் பகுதியில் இருந்தே இன்று வரை வருகின்றன.
1975ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி, நியூ மெக்சிகோவின் அல்புகர்கியில் தொடங்கப்பட்டது மைக்ரோசாப்ட். அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவின் வடமேற்கு மாநிலமான வாஷிங்டனில் இருக்கும் பெல்வியூ என்கிற சிறிய நகருக்கு மாற்றப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து அடுத்திருக்கும் ரெட்மண்ட் நகரில் தனது தலைமையகத்தை அமைத்து அன்றிருந்து இன்று வரை அங்கேயே இயங்கி வருகிறது. விவசாயத்திற்கும், பால் பண்ணைகளுக்கும் பெயர் பெற்ற இடமிது. ஆண்டில் பல நாள்கள் மழை தூரிக் கொண்டே இருக்கும். மலைகள் சூழ்ந்த அழகான இடம் ரெட்மண்ட் நகர். இதைப் பாதுகாக்கவே நகராட்சி நிர்வாகம் எந்தக் கட்டடத்தையும் சுமார் நான்கு மாடிகளுக்கு மேல் அனுமதிப்பதில்லை. இதனாலேயே மைக்ரோசாப்ட் தலைமையகம் உயரமான கண்ணாடி கட்டிடமாக இல்லாமல் பறந்து விரிந்து மரங்கள் சூழ அழகாக இருக்கும். ஒரு வளாகத்திலிருந்து மற்றொன்றுக்குச் செல்ல இலவசச் சிறிய பேருந்துகள் உண்டு என்றால் அளவைப் புரிந்து கொள்ளலாம். தொடக்கக் காலங்களில்
வெளியில் சென்று சாப்பிட உணவகங்கள் இருக்காது. இதனால் பணியாளர்களுக்கு இலவச உணவுகளைத் தாராளமாக எந்நேரமும் வழங்கிய முன்னணி நிறுவனம் மைக்ரோசாப்ட்.
அமெரிக்காவின் பெரும் நகரங்களில் இருந்த வியாபார இரைச்சல் இங்கே அறவே கிடையாது. இதனாலேயே வெளி உலகில், போட்டியான மென்பொருள் சந்தையில் நடக்கும் பல மாறுதல்களைச் சமயங்களில் மைக்ரோசாப்ட் தவறவிட்டது என்று சொல்பவர்களும் உண்டு.
வருங்காலங்களிலும் மைக்ரோசாப்ட் முன்னணியில் இருப்பதை உறுதி செய்ய, செயற்கை நுண்ணறிவு துறையின் ஆராய்ச்சிக்குப் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்து வருகிறார் சத்யா. 2022ஆம் ஆண்டு வெளிவந்து உலகையே கலக்கிய சாட்ஜிபிடியைத் தயாரிக்க முக்கியமான காரணம் சத்யா, ஒபன்ஏஐ நிறுவனத்தில் செய்த மிகப் பெரிய முதலீடு. சென்ற ஆண்டு இந்தத் துறையில் புகழ் பெற்ற நிபுணரான முஸ்தபா சுலைமானை மைக்ரோசாப்ட்-ஏஐ என்கிற புது நிறுவனத்தின் தலைவராகக் கொண்டுவந்துள்ளார் சத்யா. அடுத்த ஐம்பது ஆண்டுகள் மைக்ரோசாப்ட் தொடர்ந்து நமக்கு புதுப்புது தயாரிப்புகளை வழங்க வாழ்த்துகிறோம்.
கொசுறுத் தகவல்: விண்டோஸ் இயங்கு தளத்திற்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த நாள்கள். எந்தப் பெயர் மனதில் நிற்கும் என்பதை அறிய சான் யுஸே விமான நிலையத்துக்கு அழைத்து இன்னொரு பெயர் விருப்பமான “இண்டர்வேஸ்” என்பதைக் குறிக்கும் வகையில் “இண்டர்வேஸ் மேனேஜர் இருக்கிறாரா?” என்று கேட்டார்களாம். எதிர்முனையில் இருந்தவருக்கு ஒன்றுமே புரியவில்லை என்பதால் அழைப்பைத் துண்டித்துவிட்டார். இதனாலேயே அதற்கடுத்த விருப்பமான “விண்டோஸ்” தேர்வு செய்யப்பட்டது. [மைக்ரோசாப்டின் இருபத்தைந்து ஆண்டுகளைக் குறிக்க வெளிவந்த மலரான Inside-Out நூலில் இருந்து]


Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


like you ghibli, it is apt resembles you
“That’s a kind observation, thank you!