கடந்த மூன்று மாதமாக எனது இரண்டாவது கட்டுரைத் தொடரை மெட்ராஸ் பேப்பரில் எழுதிவருகிறேன். முதலாவது தொடரான “நுட்பம்” செல்பேசி, கணினி பயன்பாட்டில் நான் கற்ற படிப்பினைகளைப் பற்றியது. அவற்றை எல்லோரும் அவர்களின் தினப்படி செயல்களைச் சுலபமாகச் செய்ய உதவும் வகையில் தொகுத்து எழுதினேன். அதை எழுதும் போது தமிழில் நுட்பங்களைக் குறிக்கும் வார்த்தைகளைத் தேடவும், எளிமையாக நுட்பவியலை எழுதவும் முதல் முறை என்பதால் எனக்குக் கடினமாக இருந்தது. எதைப் பற்றி எழுதுவது என்பதை யோசிக்கக் கொஞ்சம் மெனக்கெட்டாலும் தகவல்களுக்குப் பஞ்சமே இருக்கவில்லை. கவர்ச்சியான தலைப்புகளைச் சூட்டும் சூட்சுமத்தை ஆசிரியர் திரு பா.ரா. பார்த்துக் கொண்டார்.
இதிலிருந்து இரண்டாவது தொடரான “செயலிகளின் கதைகள்” வேறுபடுகிறது. உலகம் முழுக்க பிரபலமாக இருக்கும் செயலிகளின் உருவாக்கக் கதையை, அதை உருவாக்கிய நிறுவனர்களின் கதை, அதிலிருக்கும் தொழில்நுட்பத்தை பற்றிய தொடர் இது. நிறுவனர்கள் நடந்து வந்த பாதையின் கதை. இதில் கற்பனையைச் சேர்க்காமல், தவறு இல்லாமல் எழுத வேண்டும். இந்தத் தொடரில் பேஸ்புக், கூகுள் பற்றி எழுதப் போவதில்லை – ஆனால் வாட்ஸ்அப்பின் தோற்றம் இருக்கிறது, சோமாட்டோவை உருவாக்கிய நண்பர்களின் கதை இருக்கிறது.
அமெரிக்க நிறுவனங்களின் செயலிகளைத் தாண்டி, மற்ற நாடுகளிலிருந்து வந்த செயலிகளைப் பற்றி கூகுளில் தேடும் போது எனக்குத் தேவையான தகவல்கள் குறைவாகவே கிடைத்தன. அதுவும் ஐரோப்பா, சீனா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் இருக்கும் நிறுவனர்களின் விவரங்கள், அவர்களின் பெயர்களைத் தாண்டி பெரியதாக விக்கிப்பீடியாவிலும் இருப்பதில்லை. ‘சாட்-ஜிபிடி’யையும் ‘கிளாட்’ ஏ.ஐ.யையும் கேட்டால் அதுவாகவே கற்பனையாக இல்லாத நிறுவனர்களின் பெயர்களை, இணைய முகவரிகளைக் கொடுக்கிறது – இவை மயங்கிக் கொடுக்கும் விவரங்கள் உண்மைக்கு அருகிலேயே இருப்பதால் அவற்றைச் சரி பார்ப்பதற்கே பல மணி நேரம் ஆகிவிடுகிறது. உதாரணமாகச் சீன செயலியைப் பற்றிக் கேட்டால் எல்லாமே சீன பெயர்களாகவும் அங்கே பயன்படுத்தப்படும் மென்பொருட்களின் பெயர்களையும் கொடுக்கிறது. அவற்றைப் படிக்கும் போது சந்தேகமே வருவதில்லை, ஆனால் தேடிப் பார்த்தால் அப்படி எதுவுமே இருப்பதில்லை, உறுதியாகச் சொல்கிறாயா எனக் கிடுக்கு போட்டால், மன்னிக்கவும் என்று சொல்லிவிட்டு புதிதாக வேறு உளறல்களைச் சொல்கிறது.
இதுவரை இந்த வரிசையில் ‘டிக் டாக்’கின் நிறுவனரின் விவரங்கள் கொஞ்சமாகவே கிடைத்தது. ஒன்றுமே கிடைக்காமல் படுத்தியது ‘சப்வே சர்ஃபர்ஸ்’ மற்றும் அடுத்த வாரம் வரப் போகும் கட்டுரையின் பொருளான தைவான் நாட்டுச் செயலியும், அதன் நிறுவனர்களின் கதைகளும் தான். ஸ்பாட்டிஃபையைப் பற்றியும் சுவாரஸ்யமான தகவல்கள் பொது இணையத்தில் குறைவாகவே இருந்தது. இந்தக் குறையை ஈடுகட்ட வேறு வழிகளைக் கையாள தொடங்கியுள்ளேன். ஒவ்வொரு செயலிக்கும் கூகுளைத் தாண்டி வேறு இடத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விவரங்கள் கிடைக்கிறது, அவற்றை ஒட்டி, சரிபார்க்க நேரம் எடுக்கிறது, தவறாகச் சொல்லி மாட்டிக் கொள்வோமோ என்று பயமாகவும் இருக்கிறது. இந்தத் தளங்கள் நமக்குத் தெரிந்தவை தான் (கற்பனை செய்ய வேண்டாம், எல்லாம் சட்டப்பூர்வமானவை தான்), பொதுவாக அவற்றில் போய் நமக்குப் பார்க்கத் தோன்றாது.
இந்த முறைகளை நான் இப்போதுதான் கற்றுக்கொண்டு வருகிறேன், வரலாறு எழுத்தாளர்களுக்கும், பத்திரிகைத் துறையினருக்கும் இவை ஏற்கனவே தெரிந்தவையாக இருக்கும் என நினைக்கிறேன். வரும் மாதங்களில் இன்னும் பல முறைகளைக் கண்டு கொள்ள வேண்டியிருக்கும். அப்படி நடந்தால் இவற்றைப் பற்றியே எழுத வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. பார்க்கலாம், முதலில் தொடரை நல்லபடி எழுதி முடிக்க வேண்டும் என்று எனது இஷ்ட தெய்வத்தை வேண்டித் தொடர்கிறேன்.

Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.

