எனது ஓபன்-ஏ.ஐ. கணக்கில் இன்று அவர்களின் “சோரா” (Sora) செயலிக்கு அனுமதி கிடைத்தது. நாம் கொடுக்கும் உள்ளீடுகளை அடிப்படையாக வைத்து, சாட்-ஜி.பி.டி. பதில்கள் அல்லது படங்களை உருவாக்குவது போல, வீடியோக்களை உருவாக்கும் முயற்சியே சோரா.
எனக்கு அனுமதி கிடைத்தவுடன் சோதனை முயற்சியாகச் சில உள்ளீடுகளைக் கொடுத்துப் பார்த்தேன். தமிழில் இப்படிச் சொன்னேன் “இந்திய நாட்டுத் தந்தையும் அவரின் ஐந்து வயது மகனும் கடைத் தெருவில் நடந்து வருகிறார்கள், கையில் இருக்கும் பையில் நிறையக் கறிகாய்கள் இருக்கிறது, அதிலிருந்து ஒரு மங்காய் கீழே விழுகிறது.”. சில நிமிடங்கள் கழித்து விடையாக வந்தது நான் சென்னத்திற்குத் தொடர்பே இல்லாத ஒரு காணொளி.
சோராவுக்கு தமிழ் மொழி புரியவில்லை. சரியென்று, அதேயே சாட்-ஜி.பி.டி.க்கு கொடுத்து நீ இதை ஆங்கிலத்திற்கு மாற்றி, கூடவே சோராவுக்கு புரியும் வகையில் எழுது என்றும் சொன்னேன். இப்போது வந்த விடை, பெருமளவுக்கு நான் கேட்ட மாதிரி இருந்தது. கூடையிலிருந்து மாங்காய் கீழே விழவில்லை, மற்றபடி பரவாயில்லை. நான் எழுதிய உள்ளீட்டையும், அதற்குச் சோரா உருவாக்கிய காணொளியையும் கீழே பார்க்கலாம். தற்போது வெறும் ஒளிப்படம் தான் வரும், ஒலி வராது.

‘சோரா’ பயன்படுத்த எளிதாகத் தோன்றினாலும், இதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் யாரும் இதைக் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். இதற்குத் தேவையான கணிமை வளத்தின் செலவு பலநூறு கோடி அமெரிக்க டாலருக்கு மேலாக இருக்கும்.
வரும் மாதங்களில் இந்தத் தொழில்நுட்பம் இன்னும் பல மடங்கு வளர்ந்து இந்தக் குறைகள் கலைந்து, எல்லோரும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் வந்துவிடும். கூடிய விரைவில் வீட்டில் அமர்ந்தபடியே, சில மணி நேரத்தில் ஒரு திரைப்படத்திற்கான கதை எழுதி, இசை அமைத்து, படத்தையும் உருவாக்கிவிடலாம்.. இதற்குச் செலவு ஒரு சில காந்தி படமிட்டத் தாள்கள் மட்டுமே ஆகும். அப்போதும் பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்கள் சுமாராகத் தான் இருக்கும்.
குறிப்பு:
- ஓபன்-ஏ.ஐ. முன்னரே இந்த மாதிரியான சில சீன தளங்கள் வந்துவிட்டது, ஆனால் அவற்றின் திறனும், வேகமும் குறைவாகவே இருந்தது.
- கூகுள் நிறுவனமும் சில வாரங்களுக்கும் முன்னர் இதே போன்ற திறன் கொண்ட அவர்களின் ‘வீயோ 2’வை (VEO 2) அறிமுகம் செய்திருந்தார்கள், ஆனால் ‘வீயோ 2’ இந்தியாவிற்கு இன்னும் வெளிவரவில்லை.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

