இரண்டாண்டுகளாக எதிர்பார்த்து, ஒரு கட்டத்தில் வரவே வராது என மறந்துவிட்ட ஆவணத் திரைப்படம், இப்போது வந்திருக்கும் “நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல்”.

தென் இந்தியச் சினிமா, குறிப்பாகத் தமிழ்த் திரைப்படத் துறை கதாநாயகர்களைச் சுற்றியே சுழலும் உலகம். இந்த ஆண் ஆதிக்கச் சுழலில், வெகு சில கதாநாயகிகளே தங்களின் இடத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள், அந்த வகையில் ‘லேடி சுப்பர் ஸ்டார்’ என்கிற பட்டம் திருமதி நயன்தாரா அவர்களுக்கு மிகப் பொருத்தமானது. கோலமாவு கோகிலா (2018) போன்றொரு படம் வேறு ஒரு நாயகியால் வணிக ரீதியாக வெற்றி பெறச் செய்திருக்கவே முடியாது. அப்படியான ஒருவரும் பிரபல இயக்குநரும் பல ஆண்டுகளாகக் காதலித்து மணக்கிறார்கள் என்றார் அந்தத் திருமணத்தைப் பார்க்க ஆர்வம் அதிகமாகவே இருக்கும். அதைச் சரியாகப் பயன்படுத்தி நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து திரைப்படமாக எடுக்கிறார்கள் என்றவுடன் அதுவே அப்போது பேசு பொருளாக இருந்தது.

ஆனால் பல்வேறு காரணங்களால் வெளிவரத் தாமதமாகி இரண்டு வாரங்களுக்கு முன்னர் வந்த போது நடிகர் திரு தனுஷோடு அவர்களுக்கு நடக்கும் காப்புரிமை வழக்கு புதிதாக நாட்டத்தை உருவாக்கிவிட்டிருந்தது. இப்போது வந்திருக்கும் படத்தைப் பார்த்தவுடன் தெரிந்தது இந்தச் சர்ச்சை இல்லாமல் இருந்திருந்தால் இதைப் பலரும் பார்த்திருக்கவே மாட்டார்கள் என்று. ஏன் இப்படிச் சொல்கிறேன்? ஆடம்பரத் திருமணம் பார்க்கவே பிரமிப்பாகவிருக்கும், சினிமா பிரபலங்கள் பலரும் வந்திருப்பார்கள் அவர்களைப் பார்க்கலாம் என்று எதிர்பார்த்தால் இது நயன்தாரா அவர்களின் தணிக்கைச் செய்யப்பட்ட சுயச்சரிதையாகவே இருந்தது. முதலில் திருமணத்தை மட்டுமே காட்டும் படமாக இது யோசிக்கப்பட்டு, தாமதமானதால் பொதுவாக மாற்றப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

கேரளாவில் ஒரு சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்து திரைப்படத்துறையில் வெற்றியுள்ள நயன் அவர்களின் உழைப்பு, கடந்துவந்த சிரமங்கள் பிரமிக்க வைக்கிறது. ஒரு திறமையான நடிகையாக மட்டுமே தெரிந்திருந்த அவரைப் பற்றிய எனது பார்வை பல படிகள் உயர்ந்திருக்கிறது, அந்த வகையில் படக்குழு சாதித்திருக்கிறார்கள், வாழ்த்துகள்.

இந்த ஆவணப்படம் அவரின் வாழ்க்கை வரலாறு என்கிற வகையில் அவர் நடித்த முக்கியப் படங்களைச் சுற்றி நடந்தவற்றைக் கொஞ்சமாவது அலசியிருக்க வேண்டும் என்று எனக்குப்பட்டது. அவரின் படங்களை அலசினால்: ராஜா ராணி (2013), தனி ஒருவன் (2015), நானும் ரவுடி தான் (2015) என்று பல பல படங்களில் நயன் சிறப்பாகச் செய்திருப்பார். அதே சமயம் பின்னர் வந்த படங்களான விஸ்வாசம் (2019), அறம் (2017), மூக்குத்தி அம்மன் (2020) போன்ற படங்களில் அவரின் நடிப்பு செயற்கையாக எனக்குத் தோன்றியது உண்மை.

வெளிவந்திருக்கும் நெட்பிளிக்ஸ் ஆவணப்படத்தில் நயன்-விக்னேஷ் திருமணக்காட்சிகள் கடைசி சில நிமிடங்கள் மட்டுமே வருகிறது, அது ஏமாற்றமே. தம்பதிகள் ஏன் ஒருவரோடு ஒருவர் ஈர்க்கப்பட்டார்கள் என்பதும் இலேசாகவே பேசப்படுகிறது – இருவரையும் அருகில் இருந்து பார்த்த இயக்குநர் திரு நெல்சன் விவரித்தது நன்றாக இருந்தது. இவரைப் போலவே நயன் அவர்களோடு பழகியவர்கள், அவரின் நண்பர்கள், விக்கி அவரின் நண்பர்கள் என்று பலரைப் பேச வைத்து, நமக்குத் தெரியாத தகவல்களும் திருமணம் இன்னும் கூடுதல் நேரம் வந்திருந்தால் இந்தப் படம் இன்னும் சுவையாக இருந்திருக்கும்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading