போன வாரம் எனது நண்பர் வீட்டுக் கல்யாணத்திற்காக காரைக்குடி பள்ளத்தூர் சென்றிருந்தேன். ஒன்றரை நாட்கள் நடந்த திருமண விழாக்களில், பல வேளை சுவையான செட்டிநாடு உணவுகளை உண்டு களித்தேன். காலைச் சிற்றுண்டி, மதியச் சாப்பாடு, இரவு உணவு என்பதோடு இடைபலகாரம் என்பதும் (விவரம் கீழே) இருந்தது. நான் போன வீட்டில் எல்லாமே சைவம், அதனால் மட்டன் குழம்பு கூட கிழங்கை அல்லது காலனைக் கொண்டு செய்திருந்தார்கள். எல்லாமே சுவையாக இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் செட்டிநாடு கல்யாண விருந்துகளுக்குப் போகாமல் இருந்துவிடாதீர்கள்.
இடைப்பலகாரம், என்ன அழகான தமிழ்ச் சொல்1!
இது மாலை நேரத் தேநீரோடு விருந்தினருக்குக் கொடுக்கப்படும் நொறுக்குத்தீனிகள் (High Tea) என்பதை காரைக்குடி செட்டிநாடு கல்யாணத்தில் போன வாரம் கேட்டேன். அன்றைக்குக் கொடுக்கப்பட்ட இடைப் பலகாரம் : செட்டிநாடு ஆடி கூழ் (ஹல்வா போன்ற இனிப்பு வகை) மற்றும் பச்சை தேன்குழல் முறுக்கு இட்லி மிளகாய்ப் பொடியுடன்.
முதல் முறையாகப் போன வாரம் இந்த வார்த்தையைக் கேட்டவுடன் சில மணி நேரம் பார்ப்பவரிடம் எல்லாம் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தேன்.




🌄காலைச் சிற்றுண்டி: இட்லியும் சைவ மட்டன் குழம்பும், வடை, சட்டினி, ரவை தோசையும் சாம்பாரும், வெள்ளை பணியாரமும் மிளகாய் துவையலும்.
🍽️மதியச் சாப்பாடு.
🌚இரவு உணவு: தோசை, இட்லி, சாம்பார், இடியாப்பம், கொத்து ரொட்டி, வடை, ரஸமலாய், செட்டிநாடு இனிப்பு சீயம், வெல்லக் கொழுக்கட்டை.
😋அடுத்த நாள் காலைச் சிற்றுண்டி: இட்லி, வடை, சட்டினி, வெள்ளை பணியாரமும் மிளகாய் துவையலும், கருப்பட்டி இனிப்பு.

குறிப்பு:
1. பலகாரம் என்பது தமிழ் வார்த்தை தான் என்று உறுதி செய்த திரு இராம கி அவர்களுக்கு என் நன்றி. அவரின் விளக்கத்தில் இருந்து சிறு பகுதி: “கரு-த்தல்= செய்-தல் = பண்ணு-தல். கரு-த்தல் பொருளில் காரு-தல் என்ற வினையும் உண்டு. கருமன், கருமம் (செய்தொழில், செயப்பட்ட பொருள்), கரணம் போன்றவை தமிழெனில், காரன் (=பண்ணியவன்), காரம் (=பண்டம்), காரியம் (பண்ணியது), காரணம் (பண்ணுதலின் ஊற்று) போன்றவையும் தமிழ் தான். பலபண்டம் = பலகாரம்.”
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.
