சில ஆண்டுகளுக்கு முன்னர் மேடை ஏற்றப்பட்ட குடும்ப நகைச்சுவை நாடகம் “வாட்ஸ் ஆப் வாசு” (WhatsApp Vasu). காத்தாடி திரு ராமமூர்த்தி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த நாடகத்தை இன்று பார்த்து ரசித்தேன். மற்றவர்களும் பார்க்கப் பரிந்துரைச் செய்கிறேன்.
கதை என்னவென்று பார்த்தால். க்ராபிக்ஸ் துறையில் வேலை செய்யும் நாயகன் (வாசு) கடுமையான பணிச்சுமையில் இருக்கிறான். இதோடு இவன் காதலிக்கும் பெண்ணும் நீ வீட்டில் உடனடியாகச் சம்மதம் வாங்கி என்னைத் திருமணம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறாள். இதில் எல்லாவற்றிலும் தப்பிக்க ஔவையார் மாதிரி வயதானவராக ஆகிவிடுவது மேல் என எண்ணுகிறான். உடனே, ஏதோ ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருபத்தைந்து வயது வாலிபன், அறுபது வயது தாத்தாவாகிவிடுகிறான். பிறகு நடக்கும் குழப்பம் எப்படித் தீர்கிறது என்பது தான் கதை.
மொத்தமாக வெறும் ஏழு பேர்களை மட்டுமே கொண்டு சிறப்பாகக் கதையை நடத்துகிறார் இயக்குநர் S.L.Naanu. கதை ஒரே கோட்டில் செல்வது நன்றாக இருந்தாலும், நடுவில் கொஞ்சம் தொய்வடைகிறது.
இந்தக் காலத்து இளைஞர்களின் செல்பேசி மோகத்தைச் சொல்லும் ஆரம்பம் நன்றாகவே இருந்தது. அதற்குப் பிறகு கதை வேறு எங்கோ போய் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கு வருகிறது. வாசுவாக வந்தவரும், நாயகியும் அருமையாகச் செய்துள்ளார்கள். காத்தாடி அவர்களின் இயல்பான நடிப்பு அபாரம்.
கம்பெனி முதலாளி என்றால் எப்போதுமே கடுமையாக இருப்பார் என்பதை மாற்றி, இதில் வரும் “நம்பி சார்” நல்லவராகக் காட்டப்படுவது யதார்த்தம்.
அதிகம் யோசிக்காமல் பொழுதுபோகப் பார்க்க நல்ல நாடகம்: “வாட்ஸ் ஆப் வாசு“.

Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.

