
மாபெரும் சபைதனில் – திரு த.உதயசந்திரன்
தமிழ்நாட்டு அரசில் இன்று இருக்கும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளில் தமிழ் மொழி மீதும் தமிழ்நாட்டின் வரலாறு மீதும் அதீத ஈடுபாடும், மற்றும் கணினித் தொழில்நுட்பங்களில் ஆர்வமும் இருக்கும் அதிகாரிகளில் உடனே நினைவில் வருபவர் திரு த.உதயச்சந்திரன், இ.ஆ.ப. தற்போது அவர் தமிழக முதல்வர் அவர்களின் முதன்மை செயலராக இருக்கிறார்.
சிந்தனையில் தெளிவானவர்,வேலையில் “கறார்” எனக் கேள்வி, ஆனால் பழக எளிமையானவர். பல முறை அவரிடம் தமிழ்க் கணினி விஷயமாகவும், தமிழ் இணையக் கழக யோசனைக் கூட்டங்களில் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் பேசியிருக்கிறேன். நாம் சொல்வதை உடனேப் புரிந்துக் கொண்டுவிடுவார், நமக்கு நேரம் மிச்சம்.
அவர் வாழ்வில் பார்த்து, படித்தப் பல துறை விஷயங்களை மிக அழகாகவும், எளிமையாகவும் ஆனந்த விகடனில் “மாபெரும் சபைதனில்” என்றப் பெயரில் தொடராக எழுதியதை, விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. எல்லோரும் படிக்க வேண்டிய ஓர் நூல் இது. எனது சில வெளிநாட்டுத் தமிழ் நண்பர்களுக்குப் பரிசாக இந்த நூலை நான் வாங்கியனுப்பியுள்ளேன்.
நேற்று (ஞாயிறு) காலை திரு உதயச்சந்திரன் அவர்களோடு ஒரு சந்திப்புக்கு அழைக்கப்பட்டேன்; நான் முன்பே வாங்கியிருந்த “மாபெரும் சபைதனில்” பிரதியை (மறக்காமல் இருக்க, சனிக்கிழமை இரவே, காரில் எடுத்து வைத்துவிட்டேன்) எடுத்துச் சென்று அவரிடம் ஒரு கையொப்பம் வாங்கிவிட்டேன். ஒரு புத்தகத்தின் ஆசிரியரிடம் புத்தகம் எந்தளவிற்கு நம்மை (வாசகரை) கவர்ந்தது என்றுச் சொல்லி அவரிடம் ஒரு கையொப்பம் மற்றும் புகைப்படம் (ஆவணப்படுத்தல் அவசியம் அமைச்சரே!) எடுத்துக் கொள்வது ஒரு மகிழ்ச்சியான தருணம்.

திரு உதயச்சந்திரன் அவர்களே, உங்களிடமிருந்து தமிழில் மேலும் பல நூல்கள் வர வேண்டும் என உங்களின் பல்லாயிரம் வாசகரில் ஒருவராக நானும் விரும்புகிறேன்! நன்றி.

#udhayachandran #ias #books

