“செங்கிஸ்கான்” – திரு எஸ். எல். வி. மூர்த்தி

பள்ளிப் பாடங்களில் மேலோட்டமாகப் படித்ததற்குப் பிறகு செங்கிஸ்கானை நான் அறிந்துக் கொண்டது திரு கோபு அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் டை-சென்னை 2016  (TiECON Chennai 2016) மாநாட்டில் “Genghis Khan and the Making of the Modern World by Jack Weatherford” என்கிற புத்தகத்தைப் பற்றி விவரமாகப் பேசியப் போது. அதிலிருந்து இந்த மங்கோலிய மன்னனை தெரிந்துக் கொள்ள விரும்பினேன். அதற்காக இந்த வருட சென்னை புத்தகக் காட்சியில் நான் வாங்கியது, எஸ்.எல்.வி. மூர்த்தி எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம் – செங்கிஸ்கான், அதை இந்த வாரம் படித்தேன். நல்ல சரளமான நடையில் ஒரு நாவலை போல் விரிகிறது செங்கிஸ்கானின் கதை.

நாடோடியாக இருந்த இனத்தவர்கள் (ஒரே நாட்டினர் என்றுக் கூட சொல்ல முடியாது) எப்படி ஒரு தலைவனின் கீழ் வந்தவுடன் உலகின் பெரும் பகுதியை வென்று ஆட்சிச் செய்யும் அளவிற்கு வந்தார்கள் என்றுப் படிக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது. அதற்காக அவர்கள் கொடுத்த விலை அதிகம், எடுத்த உயிர்களின் எண்ணிக்கைக் கோடிகளை தாண்டும்.

புத்தகம் செங்கிஸ்கான் பிறப்பிற்கு முன்னே தொடங்குகிறது. யெசுகே என்னும் சிறிய இனத் தலைவர், வழியில் வரும் ஒரு புது மண தம்பதிகளைப் பார்க்கிறார், மணப் பெண்ணான ஹோலன் என்ற அழகிய மங்கை மேல் ஆசைக் கொண்டு அவளை கடத்தி வந்து மணக்கிறார் – அவர்களுக்கு கி.மு.1162வில் பிறக்கும் குழந்தை தெமுஜின் – பின் நாளில் உலகேயே அதிர வைக்கப் போகும் செங்கிஸ்கான். ஒரளவிற்கு சந்தோஷமாக போகும் வாழ்கையில் பேரிடி, அவரின் தந்தை 1171இல் வஞ்சகமாக கொல்லப்படிகிறார், பின்னர் அவர்களின் இனத்தவர்களே தெமுஜினின் குடும்பத்தைப் புறக்கணிக்கிறார்கள். சாப்பாடிற்கு எலி, அனிலைப் பிடித்துத் திண்ணும் அவலம். இதற்கு நடுவில் தெமுஜினையும், அவனது அம்மாவை ஒதுக்கும் அவனின் ஒன்றுவிட்ட அண்ணன் பெக்டரை தெமுஜின் கொல்கிறான். அதிலிருந்து ஆரம்பிக்கறது அவனின் கஷ்டங்களும், வேட்டைகளும், மாறி மாறி வருகிறது அவனின் வாழ்க்கையின் பெரும் பகுதிக்கு.

இதற்கு பின்னர் தந்தையின் டாய்ச்சியுட் இனத்தவர்களே தெமுஜினை சிறைப்பிடிக்கிறார்கள், கொடுமைப் படுத்துக்கிறார்கள். அதிலிந்து தப்பித்து பின்னர் தனக்கு முன்னர் நிச்சயம் செய்த பெண்ணான “போர்ட்டே”வை மணக்கிறார். மெர்க்கிட் இனத்தவர்களால் அவள் கடத்தப்பட்டதும், தெமுஜின் அவனது மானசிக தந்தையான “ஆங் கான்” ஆதரவால், தனது சிறுவயது உயிர் நண்பனான ஜமுக்காவுடன் சேர்ந்து அவனின் படையைக் கொண்டு அவளை மீட்கிறார். ஆனால் அதற்குள் கடத்தியவர்கள் அவளுக்கு வேறு கல்யாணம் செய்துவிட்டு, அவனால் அவளுக்கு வயித்தில் ஒரு பிள்ளையும் உருவாகிறது, அந்தக் குழந்தையை தன் குழந்தையாக ஏற்கிறார் தெமுஜின். பின்னர் ஜமுக்காவுடன் சேர்ந்து அவனுக்கு பல வெற்றிகளைத் தேடிக் கொடுக்கிறார், அந்த வாய்ப்பில் போர்களைப் பற்றியும், படைகளையும் பற்றிக் கேட்டு தெரிந்துக் கொள்கிறார். ஒரு சமயத்தில் இவரது வளர்ச்சியில் பொறமைக் கொள்ளும் ஜமுக்கா, தெமுஜினை கொல்லத்துடிக்கிறார் – இருவருக்கும் பல போர்கள், இறுதியில் தெமுஜின் ஜமுக்காவை கொன்று, பின்னர் தனது மானசிக தந்தையான “ஆங் கான்”யும் தோற்கடிக்கிறார்.

மங்கோலியவில் உள்ளப் பல இனத்தையெல்லாம் ஒன்று சேர்த்து, அவர்களுக்குள் இருந்த இன வேற்றுமைகளைக் கலைந்து ஒரே படையாக்கி அதன் மன்னனாக, தன்னை செங்கிஸ்கான் என்ற பெயரைக் கொள்கிறார் – செங்கிஸ் என்றால் நேர்மையான, கான் என்றால் அரசர். அரசர் ஆனவுடன் மக்கள் நலனிற்காகப் பல சட்டங்கள், போர் விதிகள், படையமைப்பு விதிகள், ஜாதி மற்றும் ஊழல் ஒழிப்பு எனப் பல புரட்சிகளை செய்கிறார் செங்கிஸ்கான். அவரது ஆட்சியில் பல முக்கிய முடிவுகளை குரியல்ட்டே என்கிற வல்லுனர்கள்/சிற்றரசர்கள்/பெரியவர்கள் கொண்ட குழுவின் ஒப்புதலோடு தான் செய்கிறார் செங்கிஸ்கான்.

பத்தாயிரம் பேர் கொண்ட ட்யூமென்கள் குழுவின் தலைமைப் பதவி மிக மிக முக்கியமானது, இதற்கு செங்கிஸ்கான் நியமித்தவர்களில் ஒருவர் கூட அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. செங்கிஸ்கான் பாரம்பரியப் பதவிகளையும் பட்டங்களையும் உடைத்தார், இனிமேல் அவை  பிறப்பைக் கருத்தில் கொண்டு தரப்படாது, திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்தார். அதே போல ‘யாஸா’ என்கிற சட்டங்களை வகுத்தார். அதில் இருந்த 21 ஷரத்துக்கள் மட்டும் நமக்குக் கிடைத்துள்ளது. அவற்றில் சில:

  • ஒரே ஒரு கடவுள் தான்.
  • இனத் தலைவர்கள், மதத் தலைவர்கள், அரசு அதிகாரிகள், இறந்தவர்களின் உடல்களைச் சுத்திகரிப்பவர்கள், ராணுவத் தலைவர்கள் ஆகியோருக்குப் பல சலுகைகளும், சட்ட விதிவிலக்குகளும் உண்டு.
  • போரில் எதிரிகளின் சொத்துக்களை எப்போது சூறையாடலாம் என்று படைத் தளபதி ஆணையிடுவார். அதற்கு முன் யாராவது கொள்ளையில் ஈடுபட்டால் அவர்கள் அங்கேயே கொல்லப்படுவார்கள்.
  • ஏதாவது காரணங்களால் போரில் பங்கெடுக்கமுடியாத குடிமகன்கள் அரசு நிர்ணயிக்கும் காலத்துக்கு, ஊதியமில்லாமல் அரசு தரும் பொதுப்பணிகளைச் செய்ய வேண்டும்.
  • ஒவ்வொரு ஆண்மகனும், சீதனம் தந்து தான் மனைவியைப் பெற வேண்டும். ஆண் பல தாரம் செய்து கொள்ளலாம். அப்பாவின் சொத்தில் மொத்த உரிமையும் மூத்த மகனுக்கு மட்டும்.
  • அடுத்தவர் மனைவியோடு தகாத உறவு வைத்துக் கொண்டால், மரண தண்டனை.

அடுத்து வரும் பல ஆண்டுகளில் பல போர்களை தொடுத்து வெற்றிப் பெறுகிறார் செங்கிஸ்கான் – எல்லாமே அவரின் மேல் திணிக்கப் பட்ட போர்கள் என்கிறார் ஆசிரியர். அவர் கையகப்படுத்திய நாடுகளின் பட்டியல் சீனாவின் ஸியா ஸியா, சீனாவின் ஜின் அரசு, க்வாரிஸம் பேரரசு என்று நீண்டுக் கொண்டேப் போகிறது, அதோடு அவரின் தளபதி சபோட்டாய், கிழக்கு ஐரோப்பா, ஜார்ஜியா, கீவ், ஹங்கேரி ஆகிய நாடுகளைக் கைப்பற்றுகிறார். இறுதியில் வேட்டையாடும் போது குதிரையிலிருந்து கீழே விழுந்து அடிப்பட்டு, படுத்திருந்து பின்னர் 1227இல் இறக்கிறார் செங்கிஸ்கான்.

அதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு பின் செங்கிஸ்கான் நல்லவரா, அல்லது ரத்தவெறிப் பிடித்த ஓநாயா என்று ரோமாபுரியின் நீதி தேவதை ஜஸ்டிஷியா முன் நடக்கும் ஒரு வழக்கைப் போல் சித்தரித்து இருதர வாதங்களை வைக்கிறார் ஆசிரியர்.

செங்கிஸ்கான் இறந்த பிறகு அவரின் மூன்றாம் மகனான ஒகொடே, பின்னர் மகாராணிகளின் ஆட்சி, செங்கிஸ்கானின் பேரன் மாங்க், குப்ளாய் கான், என அதிகாரம் மாறி மாறி, கடைசியில் தைமுர் ஆட்சியாக நடக்கிறது [தைமுர் வம்சாவளியில் பதின்முன்றாம் தலைமுறையில் வந்தவர் தான் இந்தியாவில் மொகலாய சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய பாபர்]. இதற்கு பிறகு, தனி தனியாக பிரிந்து இறுதியில் சரிந்தது செங்கிஸ்கான் கட்டிய சாம்ராஜ்ஜியம்!

Categorized in:

Tagged in:

,