கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில் - திரு மாலன்
Book Review,  தமிழ்

Kangaluku Appaal Idayathirku Arugil by Thiru Maalan

கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில்

தேர்வும், தொகுப்பும்:  திரு மாலன்

அயலகத் தமிழ் எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

தமிழ்நாட்டிற்கு வெளியில் வாழும் தமிழ் வாசகர்களுக்கு,   தமிழ்நாட்டு  எழுத்தாளர்கள்  அறிமுகமானவர்கள், அவர்களின் படைப்புகள்  பலவற்றையும் படித்து இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது,  ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் வாசகர்களுக்கு  வெளிநாட்டுத் தமிழ் எழுத்தாளர்களைத்  தெரிந்திருப்பதில்லை அவர்களின் படைப்புகளை வெகுசிலரே இங்கே  படித்துள்ளார்கள்.  இந்தக் குறையைச் சரி செய்யும் திசையில் “சாகித்திய அகாடமி” 2015ஆம் ஆண்டு புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் சிறப்பான படைப்புகளிலிருந்து தொகுத்து ஒரு புத்தகமாகத் தமிழ் வாசகர்களுக்காகக் கொடுத்துள்ளார்கள்.

கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில் என்ற இந்தப் புத்தகத்தை எழுத்தாளர், பத்திரிகையாளர், என் நண்பர் திரு மாலன் அவர்கள்  தொகுத்துள்ளார். புத்தகத்தின் பதினாங்கு வெளிநாட்டுத் தமிழர்களின் 14 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளது.  ஒவ்வொன்றும் ஒரு விதம்,  ஒவ்வொன்றும் எழுதப்பட்டுள்ளது அவர்கள் புலம்பெயர்ந்த நாட்டில் இருக்கும் சூழலைப் பொறுத்து,  அவர்கள் இழந்துவிட்ட வாழ்வை நினைத்து, அது எழுத்தாளரின் மேல் செய்த தாக்கத்தை வெளிப்படும் விதமாக  இருக்கிறது.  ஒவ்வொரு கதையும் வாசிப்பவர்களின் உள்ளத்தில் ஒரு உணர்வைத் தூண்டுவது நிச்சயம் –  புலம்பெயர்ந்த தமிழர்களின் குறிப்பாக இலங்கையிலிருந்து அகதிகளாகச் சென்ற தமிழர்கள் படும் துன்பங்கள், சோகங்கள் பலப்பல, அதனால் அவர்கள் எழுதும் கதையில் அந்த உணர்ச்சி தூக்கலாக இருப்பது  இயல்பு –  இருந்தும் ஒவ்வொரு கதையையும் நாம் படிக்க ஆரம்பித்தவுடன் நிறுத்த முடியவில்லை, எழுத்தாளர்கள் அவர்களைச் சுற்றியுள்ள சூழலை அவ்வளவு அழகாகத் துல்லியமாக நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்கள்.

 இந்தப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதைகளைப் படித்துவிட்டு நமக்கு அந்த ஒவ்வொரு எழுத்தாளர்களின் மற்ற படைப்புகளை இணையத்திலோ புத்தகத்திலோ தேடித்தேடிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத்  தூண்டுகிறது. திரு மாலன் அவர்கள் புத்தகத்தில் தனது முன்னுரையில் இந்தக் கதைகளைப் பற்றி அழகாகச் சொல்லியுள்ளார் அதிலிருந்து சில வாக்கியங்களைக் கீழே கொடுத்துவிட்டு, கதைகளுக்குச் செல்வோம்.

// தமிழர்களின் இடப்பெயர்வுக்கு பல காரணங்கள் இருக்கின்றன.

“கடல்  கொண்ட தென்னாடு” பற்றிய பழந்தமிழ் இலக்கிய பதிவுகள் சான்றளிக்கின்றன…

ஐந்திணை ஒழுக்கம் கொண்ட தமிழர்கள் ஒரு திணையிலிருந்து இருந்து வேறு திணைக்குச் சென்றபோது இயற்றிய இலக்கியங்கள் சங்க கால பாணர்களின் பாடல்களும் பின்னால் வந்தவர்  குறவஞ்சிகளும் எடுத்துக்காட்டாகின்றன…

காலம் எதுவாயினும், காரணம் எதுவாயினும்,  தமிழர்கள்,  இடம்பெயர்ந்து செல்ல நேரிட்ட  போதெல்லாம் தமிழையும், இலக்கிய மனதையும் தங்களுடன் எடுத்துச் சென்றனர்…

தமிழிலக்கியத்தின் தனியொரு துறையாகக் கருதும் அளவிற்கு தாயகம் கடந்த தமிழ் எழுத்துக்கள், தனித்துவமான சில பரிமாணங்களோடு இன்று விளங்குகின்றன. அந்தப் பொதுப் பண்புகள்தான் என்ன?

  1. மொழி கடந்த மானுடம்.
  2. இரு தளங்கள்
  3. பீறிட்டெழும் பெண்மொழி
  4. வரலாற்றிலிருந்து விடைபெறுதல்
  5. தொழில்நுட்பங்களின் கொடை …

மனித உறவுகள் குறித்து எழுதுகிற குற்ற உணர்வுகள் வேறு எங்கேயும் விட புலம்பெயர்ந்த வாழ்வில் அதிகம் கொடுமை பெறுகின்றன.    தொலைவும்,

தொலைத்த கவனமும் இதற்கு முதன்மை காரணங்கள் ஆகின்றன…

இந்தக் கதைகள் யாவும் கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில் உள்ள வாழ்க்கை பற்றிய பதிவுகள்.  பூமிப்பந்தெங்கும்  தமிழ் புனைவுலகம்   கொடிவிட்டுப்  படர்ந்திருப்பதற்கு இந்த தொகுப்பு ஒரு சாட்சி. – திரு. மாலன் //

கதைகள்:

  1. ஓணானுக்கு பிறந்தவன் – அ. முத்துலிங்கம் கிரேக்க நாட்டில் கார்களைக்  கடத்திக் கொண்டு வரும் மாஃபியாவில் வேலை செய்பவன் வாழ்வைப் பற்றி.
  2. விடுதலையாதல் – ரெ.  கார்த்திகேசு: தன்னுடைய அண்ணா அக்காக்கள் பெற்றோரைப் பிரிந்து வெளிநாட்டில்  வாழ்ந்துகொண்டு இருக்க,  தன் வயதான, உடம்பு சரியில்லாத தந்தையைப் பார்த்துக்கொள்ளும் அன்பான மகள்.
  3. செந்தமிழ் நகர் – நாகரத்தினம் கிருஷ்ணா: வெளிநாட்டில் இருப்பவர்கள் கஷ்டப்பட்டுச் சேர்த்து தாய்நாட்டில் ஒரு வீடு வாங்கும் கனவில் இருப்பார்கள்.  அப்படிப்பட்ட ஒருவரின் கதையை,  55 ஆண்டுகள்   தொடர்ந்து நடக்கும் விதமாக இந்தக் கதை செல்கிறது.  இதில் வருவது கற்பனையா, நிஜமா என்று பிரித்துப் பார்க்க முடியாமல் இருப்பது ஒரு வினோத அனுபவம்.
  4. அரசனின் வருகை – உமா வரதராஜன்: போர் என்றாலே அங்கே வாழும் மக்களுக்குத் துயரமும், இழப்பும், சோகமும் தான்.  ஆனால் வெற்றி பெற்றவர்களுக்கு அது ஒரு கொண்டாடப்பட வேண்டிய தருணம்.  அப்படி ஒரு உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்ற அரசன், அந்த நகரில் நடக்கும் விழாவிற்கு வருகை புரிகிறான்.
  5. அவன் ஒரு இனவாதி – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்:  ஒருவன் வளர்ந்து முரடனாகவோ, கொடுமைக்காரனாகவோ  இருக்கிறான் என்றால்,  அவன் சிறுவயதில்  பாதிக்கப்பட்டிருக்கலாம், பின்னாளில் இனவாதியாகக் கூட அவன் ஆகலாம்.  அப்படியான ஒருவனை,  லண்டனில் வாழும் ஒரு தமிழ் பெண், மனநல மருத்துவமனையில் எப்படிக் கையாள்கிறார் என்று செல்கிறது கதை.
  6. முட்டர்பாஸ் – பொ. கருணாகரமூர்த்தி: காதலித்து,  மணந்து, பின்பு பிரிந்துவிடும் ஒரு தம்பதிகளின் கதை,  ஜெர்மனி நாட்டில் நடக்கிறது –    அவர்களின் பிரிவு அவர்களின் இரண்டு சிறு மகள்களை எப்படி பாதிக்கிறது? பொதுவாக இதுபோன்ற கதைகள் தாய் வழியிலிருந்து சொல்லப்படும்,  இங்கேயோ தந்தையை  மையமாக வைத்துச் செல்கிறது.
  7. ஒட்டுக்  கன்றுகளின் காலம் – ஆ.சி.கந்தராஜா: ஆஸ்திரேலியாவில் வாழும்  யாழ்ப்பாண தமிழர்கள் குடும்பம்,  பல ஆண்டுகளாக அங்கே வாழ்ந்தாலும்,  இன்னும் முழுமையாக யாழ்ப்பாண வாழ்க்கையை மறக்க  முடியாமல் தவிக்கிறார்கள்.
  8. ஒரு கூத்தனின் வருகை – டாக்டர் சண்முகசிவா: மலேசியாவில்  வாழ்ந்தாலும் தமிழ்நாட்டில் கூத்து கலைஞன் ஒருவரோடு ஏற்படும்   சந்திப்பு –  அது நட்பா,  அல்லது ஏமாற்று  வேலையா?
  9. ஓர் இதயம், வறுமை கொண்டிருக்கிறது – அ. யேசுராசா: கொழும்பில் இருந்து தன் ஊருக்கு,  அங்கே இருக்கும் வறுமைக்கு,  வெறுமைக்குத்  திரும்பிவரும்  ஒரு மகனின் கதை.  இந்தக் கதையில் அதிகமாக  இலங்கை தமிழ் சொல்லாடலில்  இருப்பதால் எனக்குப் படிக்க, புரியக் கடினமாக இருந்தது. ஆசிரியர் நன்றாக அந்த வழக்கைக் கையாண்டுள்ளார், கதைக்குப் பொருத்தம், ஆனால் எனக்கு தான் பரிச்சயம் இல்லாததால் கொஞ்சம் சிரமம்!
  10. யாருக்குப் புரியும் – கீதா பென்னெட்: தன் நோய்வாய்ப்பட்ட அம்மாவை  பிரிந்து, அமெரிக்காவில் வருத்தப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மகளின் கடிதங்கள்.
  11. அலிசா – லதா:  சிங்கப்பூரில்  சுற்றுலாவாசிகள் பார்த்திராத,  காடுகள்  சூழ்ந்து  இருக்கும் ஒரு குட்டித் தீவு – புலாவ் உபின்,  அங்கே ஆடம்பரங்கள் இல்லாமல் வாழும்  ஒரு குடும்பம்.  அங்கே தனது தாத்தா பாட்டியுடன் வந்து வாழும் ஒரு சிறுமி அலிசா.
  12. கல்லட்டியல் – சந்திரவதனா: இலங்கையைவிட்டு கல்யாணமாகிப் பல ஆண்டுகளாக ஜெர்மனியில் வாழும் ஒரு குடும்பத்தலைவியின்  வாழ்வில் ஒரு நாள்.  சீக்கிரம் எழுந்து, சமைத்து குழந்தைகளை எழுப்பி, கணவனையும் கிளப்பி அலுவலகத்திற்கு அனுப்பி, தானும் தயாராகி அலுவலகம் செல்லும் ஒரு வாழ்வை இயல்பாக சொல்லியுள்ளார் ஆசிரியர்.
  13. கலைஞன் – ஆசிப் மீரான்: திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் ஒரு ஊரில் நடக்கிறது கதை. ஊர் திருவிழா என்றாலே அது அந்த ஊருக்குள் ஒரு பெரிய விசயம் தான். அதில் நடக்கும் இரவு நாடகங்கள் மிகவும் முக்கியமானவை.  நாடகத்தில் நடிக்கும்  வாய்ப்பை அந்த ஊரில் இருக்கும் பலர்  தேடி அலைவார்கள். அப்படியான ஒரு வாய்ப்பு தான் தேடாமலே கிடைத்தது அகமது லெப்பைக்கு.
  14. 5:12 P.M. – எம்.கே.குமார்:  சிங்கப்பூரில்  வீடில்லாமல்,  வெளியில் வாழ்பவர்கள் மிகக் குறைவு.   அப்படி வாழும் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தால்,  அவருக்கு இந்திரா காந்தியைத் தெரியும்  என்றால் நம்ப முடியுமா?

தமிழ் வாசகர்கள், தமிழ்நாட்டை, இந்தியாவைக் கடந்த ஒரு உலகத்தைத் தெரிந்துக் கொள்ள நிச்சயம் படிக்க வேண்டிய நூல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.