சமீபத்தில் காலமான “பத்ம ஸ்ரீ” திரு ந. முத்துசாமி நவீன தமிழ் நாடகங்களின் தந்தை எனக் கூறலாம். அவரின் “கூத்துப்பட்டறை” என்ற நாடக கலை அமைப்பு மிகப் பிரபலம். நடிகர் “விஜய் சேதுபதி” போல, இங்கே இருந்து வந்தவர்கள் பலர் தமிழ் சினிமாவில் பிரபலமாகியுள்ளனர்.

இதுவரை ஐயா ந. முத்துசாமி அவரின் நாடகங்களை நான் பார்த்ததில்லை. அந்த குறை இன்று தீர்ந்தது. 1968யில் ‘நடை’ என்ற இதழில் வெளிவந்த அவரின் முதல் நாடகமான “காலம் காலமாக”, அவரின் மாணவர்களால், இன்று ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடப்பது தெரிந்து, போய் பார்த்தேன். அபாரம்!

கூத்துப்பட்டறை – திரு ந. முத்துசாமி அவர்களின் காலம் காலமாக

நாடகத்தின் கதை என்பது தற்கால வாழ்க்கை, சமூகத்தைப் பற்றிய ஒரு விதமான நையாண்டி. ஒரு மருத்துவமனை, அங்கே ஒரு நோயாளியை மோசமான நிலையில் இருவர் தூக்கிக் கொண்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவன் பணக்காரன் போல, இன்னொருவன் உள்ளூர் அரசியல்வாதிப் போல இருக்கிறான். இருவரும் இவர்களுக்கு முன் இங்கே வந்து போனவர்களை முட்டாள்கள் என்று ஏளனம் செய்கிறார்கள். இவர்களுக்கு பின் இன்னொரு நோயாளியும் பரிதாபமான நிலையில் வருகிறான். ஏற்கனவே அங்கே வேறு இருவர் ஓரமாக உட்கார்ந்து இருக்கிறார்கள். நோயாளிகள் மருத்துவரை உடனே அழைக்கும்படி கெஞ்சுகிறார்கள், ஆனால் பணக்காரன் சமாதானப்படுத்தப் பணத்தைத் தூக்கி தூக்கி எறிகிறான். நாட்கள் நகர்கிறது, முதல் நோயாளி இறந்தே விடுகிறான், அவனை அழைத்துவந்தவர்கள் சோகமாக வெளியேறுகிறார்கள். பின்னர் இரண்டாம் நோயாளியைப் பார்த்துக் கொள்ள மற்ற இருவரும் அருகே வருகிறார்கள், முதல் இருவர்கள் போல, இவர்களும் காப்பாற்றுகிறோம் என்று வாக்குறுதி அளிக்கிறார்கள். நாடகம் முடிகிறது.

மறைந்த திரு ந. முத்துசாமி அவர்களின் “காலம் காலமாக” நாடகத்தில் ஒரு காட்சி

“காலம் காலமாக” – படுக்கையில் பரிதாபமான நிலையில் நோயாளி

இவர்கள் யார், இது எந்த இடம் என்று நாம் நம் கற்பனையில் எப்படி வேண்டுமானாலும் புரிந்துக்கொள்ளலாம். ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது, இது அங்கே இருந்த கதாபாத்திரங்களைப் பற்றிய கதையோ, அந்த இடம் ஒரு சாதாரண மருத்துவமனையோ இல்லையென்று நன்கு புரிகிறது – ஆசிரியர் வேறு ஏதோ சமூக பிரச்சனையைத் தான் இப்படியான ஒருவித உவகையாகச் சொல்லியுள்ளார்.

அவர் நாட்டின் நிலையை நோயாளியாகவும், உடன் இருப்பவர்களை ஒவ்வொரு தேர்தலில் வெற்றிப் பெற்று வரும் அரசியல் தலைவர்களாகவும் குறிக்கிறார் என்று எனக்குப்பட்டது . இன்னொரு பொருளும் தோன்றியது – அது முதலில் வந்த இருவரும் ஒரு தலைமுறையினர்கள் என்றும், அடுத்து வந்தவர்கள் அடுத்த தலைமுறையினர்கள் என்றும், ஒவ்வொருவரும் தனக்கு முன்வந்த தலைமுறையினரை முட்டாள்களாகவும், அடுத்துவருபவர்களை ஒன்றும் தெரியாத சிறுவர்கள் என்று மட்டம் செய்வதாகத் தோன்றியது.

சொல்ல வந்த கருத்திலிருந்த கூர்மை ஆச்சரியப்பட வைத்தது. வசனத்திலும் அப்படியொரு நேர்த்தி. நடித்தவர்கள் அனைவரும் இளைஞர்கள், அசத்திவிட்டார்கள். நாடகம் முடிந்து எழுந்திருக்கும் போது, எனக்கே உடம்பு சரியாக இல்லாதது போல உணர்ந்தேன், அந்த அளவிற்கு நோயாளியாக வந்த இருவரும் தங்கள்  நடிப்பைச் சிறப்பாகச் செய்திருந்தார்கள்.

நாடகம் அடுத்த இரண்டுநாட்களும் (வெள்ளி 22 February 2019, சனி 23 February 2019) மாலை 6 மணிக்கு மீண்டும் நடக்கிறது. மறக்காமல் பாருங்கள், ஆதரவு கொடுங்கள். அனுமதி இலவசம்.  பெரிய இடம், வாகனங்கள் நிறுத்த எந்த சிரமும் இருக்காது.

Categorized in:

Tagged in:

,