கதையின் முதல் பக்கத்திலேயே நாயகன் “வருண்” நட்சத்திர ஓட்டலின் ரூஃப் கார்டன் சுவரின் மேல் போதையில் நிற்கிறான், கீழே விழுந்தால் மரணம் நிச்சயம். இதற்கு முன்னிருப் பக்கத்தில் பனாமா லீக் வெளியான விதம் (பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் பதவி விலக காரணமாக இருந்த அதே லீக்ஸ் தான்). இப்படி தான் ஆரம்பிக்கிறது  “வெட்டாட்டம்”.

சில நாட்களுக்கு முன், நண்பர் ஷான் கருப்புசாமியின் “வெட்டாட்டம்” நாவலைப் படித்தேன். அபாரம். இது அவரின் முதல் நாவல் என்று நம்பவே முடியவில்லை, கதை சொல்வதில், அதை எடுத்துச் செல்லும் விதத்தில், பாத்திரப்படைப்பில் – எல்லாவற்றிலும் அப்படி ஓர் நேர்தி. பாராட்டுகள். கதைக்காக அலையும் கோடம்பாக்கம், உடனே இந்த நாவலின் சினிமா உரிமையை வாங்கிவிட்டால் மேர்சலைவிட பெரிய வெற்றி, சச்சரவு இல்லாமலேயே கிடைப்பது உறுதி.

நாவலின் கதையென்ன?. ஒரு முன்னால் சினிமா நடிகரும், தற்போது சர்வ வல்லமை படைத்த மாநில முதலமைச்சராக இருப்பவர் (மாநிலம் தமிழ்நாடு என்று நீங்கள் நினைத்தால் ஆசிரியர் பொறுப்பல்ல), ஊழல் வழக்கால், அனுபவம் இல்லாத தன் மகனை அந்த பதவியில் நியமிக்கிறார். விருப்பம் இல்லாமல் பதவிக்கு வரும் மகன், எதுவுமே செய்யாமல் இருக்கலாம் என்று பார்த்தால், நிகழ்வுகள் அவனை நல்லது செய்ய வைக்கிறது. தந்தையையே மிஞ்சும் அளவிற்கு அவன் எப்படி வளர்க்கிறான் என்பது தான் கதை. இதற்கு நடுவில் சர்வதேச ஊழல், ஹவாலா பணமாற்றம், கணினி தில்லுமுல்லு என நாடுகள் தாண்டி செல்கிறது கதை.

இடையே ஒரு மெல்லிய காதலும் இருக்கிறது. ஒரு பெரிய துப்பறிவாளன் கதையைக் கூட எளிதாக எழுதிவிடலாம், ஆனால் காதலை ரம்மியமாக சொல்லும் ஒரு பக்கத்தை எழுதுவது மிக கடினம் – அப்படியான, மொதலுக்கு பின் வரும் ஒரு மெல்லிய காதலையும் சொல்லியிருக்கிறார் ஷான். அதற்கு அவருக்கு தனியாக ஒரு பாராட்டு. அந்த காதல் சில பத்திகளே வருகிறது ஏமாற்றம் தான்.

ஒரு நாளில் பல முறை ட்வீட்டரில் பேஸ்புக்கில் எழுதுபவர் ஷான், அதனால் புத்தகத்தில் நறுக்கான ட்வீட்களும் இருக்கிறது. உதாரணமாக, நகரின் வெள்ள நிவாரணத்திற்கு வேலை செய்யாத முதல்வர் என்று, எதிர்கட்சி தலைவி இப்படி நக்கல் அடிக்கிறார் “மாளிகையை விட்டு இறங்காத இளவரசர்”. அதற்கு அவரின் பதில் ட்வீட் “இளவரசன் இப்போதுதான் மூன்று நாட்களுக்குப் பிறகு வீட்டிற்குப் போகிறேன். அது இளவரசிக்குப் புரிந்தால் சரி”.

நாவலின் பல சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்த, நடந்ததாக சொல்லப்படும் விசயங்களுக்கு மிக பக்கத்தில் வருகிறது. பல இடங்களில் அவை நாவலுக்கு வலு சேர்த்தாலும், சென்னை பெருவெள்ளத்தை அப்படியே ஒட்டி வரும் பாகம், கொஞ்சம் கற்பனை தொய்வு தான். அதை தவிர்த்திருக்கலாம் ஆசிரியர்.

ஒவ்வொரு அத்தியாத்திற்கும் தமிழ் எண்கள், எனக்கு அவை புரியவில்லையென்றாலும் வித்தியாசமாக தான் இருந்தது. அதற்கு அடுத்து, தாயக்கரம் விளையாட்டைப் பற்றி ஒரு பத்தி. நாவலை முடிக்கும் முன், தாயக்கரம் தெரியாத என் போன்ற நகரவாசிகள் அந்த விளையாட்டை தெரிந்துக் கொண்டுவிடலாம்.

நாவலின் கடைசி பக்கங்களில் நாம் நாற்காலியின் ஓரத்திற்கே வந்துவிடுகிறோம், கதையின் சுவாரஸ்யத்தால். வாழ்த்துக்கள் ஷான்.

Categorized in:

Tagged in:

,