இன்று நான் “தமிழ்  இணையம் – வளர்ச்சியும் வரலாறும்” என்ற தலைப்பில் ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்திய கருத்தரங்கத்தில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிரில் அமைந்துள்ள தொன்மைச்சிறப்பு வாய்ந்த ஒய்.எம்.சி.ஏ.கட்டடத்தில் அதன் எசுபிளனேடு கிளையின் இலக்கியப்பிரிவாகிய ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்திய இக் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் அறிஞர்கள்/புலவர்களையும் தமிழ் தகவல் தொழில்ஙட்ப வல்லுனர்களையும் இணைக்கும் ஒரு முயற்சியாக இதை நான் நினைக்கிறேன்.

உத்தமம் செயற்குழு உறுப்பினரும் ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தின் துணைத் தலைவருமாகிய மறைமலை இலக்குவனார் வரவேற்புரை வழங்கினார்.அவர் தமது வரவேற்புரையில் உத்தமம் அமைப்பைப் பற்றி ஓர் அறிமுகம் வழங்கியதுடன் கணிப்பொறி வல்லுநர்களுடன் தமிழ் அறிஞர்களும் இலக்கியப்படைப்பாளிகளும் இணைந்து செயலாற்ற வேண்டியதன் தேவையையும் வந்துள்ள விருந்தினர் பற்றிய் அறிமுகத்தையும் வழங்கினார்.

தலைமையுரை வழங்கிய சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறைத்தலைவர் முனைவர் ந.தெய்வசுந்தரம் தமது தலைமையுரையில் தமிழ்க்கணினியுலகம் கண்டுள்ள வளர்ச்சியையும் இன்னும் இங்கே நிறைவேறவேண்டியுள்ள பணிகள் கடல் போல் பரந்துகிடப்பதையும் எடுத்துக் கூறினார்.

“தமிழ் இணையம் - வளர்ச்சியும் வரலாறும்” என்றத் தலைப்பு

“தமிழ் இணையம் – வளர்ச்சியும் வரலாறும்” என்றத் தலைப்பு

ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்திய கருத்தரங்கத்தில் “தி.ந.ச.வெங்கட ரங்கன்” பேசியது

ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் நடத்திய கருத்தரங்கத்தில் “தி.ந.ச.வெங்கட ரங்கன்” பேசியது

உத்தமத்தின் பொருளாளர் தில்லைக்குமரன் அவர்கள் தமது உரையில் தமிழர்கள் இன உணர்வும் மொழி உணர்வும் கொண்டு ஆற்றவேண்டிய சூழலையும் தமிழ் இணையம் இவ்வகையில் ஆற்றிவரும் பணியையும் தமிழுலகம் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் மிகப் பெரும் மாற்றங்களை உருவாக்கலாம் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்து  பேசிய நான் (தி.ந.ச.வெங்கடரங்கன்) அச்சுருவின் தோற்றமும் வளர்ச்சியும், ஒருங்குறி என்றால் என்ன, உலகமொழிகள் அதில் பங்கு கொள்வது எவ்வாறு, தமிழ் ஒருங்குறியில் பெற்றுள்ள இடம்/விதம், ஏனைய மொழிகள்-குறிப்பாகச் சீனமும் சப்பானியமும்-ஒருங்குறியில் பெற்றுள்ள இடங்களுக்கும் தமிழ் பெற்றுள்ள இடங்களுக்குமான வேற்றுமை, விசைப் பலகை என்பது யாது, குவெர்ட்டி (QWERTY) என்றழைக்கப்படும் ஆங்கிலமொழிவிசைப்பலகையின் அமைப்புக்கும் தமிழ்மொழி விசைப்பலகைக்கும் வாய்ந்த வேற்றுமைகள் எவை, இன்னும் நாம் அடையவேண்டிய இலக்குகள் யாவை, கணினியை முழுமையும் தமிழ் ஆளும்வகையில் இன்னும் என்னென்ன செய்யவேண்டியுள்ளது, மின் – அரசாங்கம், விளம்பரம், கணினி விளையாட்டு ஆகியவற்றின் மூலம் பெறப்படும் நன்மைகள், மொழிபெயர்ப்பில் கணினியைப் பயன்படுத்தும் வகையில் செய்யவேண்டிய முயற்சிகள், பேச்சு-எழுத்து, எழுத்து-பேச்சு மடைமாற்றம் செய்யப்பயன்படும் மென்பொருளின் தேவை மற்றும் வருடி OCR), பிழைதிருத்தும் மென்பொருள் ஆகியவற்றில் நாம் அடையவேண்டிய இலக்கு ஆகியவை குறித்து எளிமையாக (என்று எண்ணுகிறேன்) பேசினேன். இதன் ஒளிப் பதிவைக் கீழே பார்க்கலாம்

உத்தமம் அமைப்பின் தோற்றம், வளர்ச்சி, இதுவரை நடத்தியுள்ள மாநாடுகள், உறுப்பினராகச் சேர விரும்புவோர் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் ஆகியவற்றை உத்தமத்தின் செயலர்-இயக்குனர் கவியரசன் பேசினார்.

Tagged in: