அந்தமான் நிக்கோபார் தீவுகள் – போர்ட் பிளேர்
சென்னையிலிருந்து அந்தமானின் தலைநகரமான போர்ட் பிளேர் சுமார் இரண்டு மணி நேரத்தில் விமானத்தில் சென்றுவிடலாம். சென்னை மற்றும் பிற இந்திய நகரங்களிலிருந்து நேரடிச் சேவைகள் நாள் தோறும் இருக்கிறது. அந்தமான் தீவுகள் மியான்மார், தாய்லாந்துக்கு அருகில் இருந்தாலும் இவை நம்மூர் தான் – அதனால் இது உள்நாட்டு விமானச் சேவை, (இந்தியக் குடிமக்களுக்கு) வெறும் ஆதார் அல்லது பாண் அட்டையும் கூகுள் பே கணக்கில் கொஞ்சம் பணமும் இருந்தால் போதும், கடவுச்சீட்டு எதுவும் தேவையில்லை. போர்ட் பிளேர் ஒரு சின்னச்சிறுநகரம், ஆனாலும் மொத்த அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இதயம் இது. போர்ட் பிளேர் நகரில் பெரும் எண்ணிக்கையில் வசிப்பது வங்காளிகளும், தமிழர்களும், அவர்களோடு அதிகமாக இந்தி பிரதேசங்களிலிருந்து இங்கே பணியில் இருக்கும் ராணுவத்தினர்களும். மக்கள் பேசுவது பெரும்பாலும் இந்தி தான். தமிழ்கள் தான் பெரும்பாலான கடைகளை நடத்துகிறார்கள் – அபெர்டீன் பஜாரில் பல கடைப் பெயர்ப்பலகைகளிலும் தமிழ் இருக்கிறது – நகரில் ஓடும் பல பேருந்துகளில் முருகன் துணையும் இருக்கிறது. திரும்பிய இடமெங்கும் சிவன், அனுமார் கோயில்கள் கண்ணில்பட்டது, கடைகளில் திருப்பதி பாலாஜி பெருமாளின், கொல்கத்தா காளியின் படங்களும் இருக்கிறது. நகரின் முக்கிய பகுதிகளில் கர்ம வீரர் காமராஜரின் சிலையும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலையும் இருக்கிறது, இது இங்கே இருக்கும் தமிழர்களின் பலத்தைக் காட்டுகிறது. இருந்தும் இங்கே இந்தியாவில் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக வடகிழக்கு மாநில மக்களையும் சேர்த்துக் கொண்டு ஒற்றுமையாக ஒரே இடத்தில் வேலை செய்கிறார்கள் – பார்க்கவே நிறைவாக இருந்தது.
எங்களுக்கு ஊரைச் சுற்றிக்காட்ட வந்த வழிகாட்டி மீண்டும் மீண்டும் சொன்னது, மொத்த அந்தமானும் மிகவும் பாதுகாப்பான இடம் என்று. இரவு நேரக் கேளிக்கைகள் என்று எதுவும் இங்கே கிடையாது, எட்டு ஒன்பது மணிக்கு ஊரே அடங்கிவிடுகிறது – முழு அந்தமான் யூனியன் பிரதேசத்திலும் இந்திய ராணுவத்தின் தாக்கம் அதிகம் உண்டு. சொல்ல மறந்துவிட்டேனே, பெரிய திரையரங்கம் ஒன்று கண்ணில்பட்டது, பல சமயம் தமிழ்ப் படங்கள் தான் இங்கே ஓடும் என்று வழிகாட்டிச் சொன்னார். எளிதாகத் தோசையும் கிடைக்கிறது, பஞ்சாபி ரொட்டியும் கிடைக்கிறது, தயிர்ச் சாதமும் கிடைக்கிறது – அசைவ உணவுப் பிரியர்களுக்குப் பல விதமான மீன்களும், வகை வகையாகக் கடல் பிராணிகளும் எளிதாகக் கிடைக்கும் என்று உள்ளூர் நண்பர் சொன்னார். போர்ட் பிளேர் சுத்தமாக இருக்கிறது, முக்கியமான என்-எச்-4 தேசியச் சாலையில் கூட போக்குவரத்து என்று எதுவும் நம்மூர் மாதிரி அதிகமாக இல்லை. அமைதியான ஊர், நட்பான மக்கள். நாங்கள் இருந்த நாட்களில் ஒரு தினம் இஸ்லாமிய நண்பர் ஒருவரின் வீட்டுக்கு இரவு விருந்துக்குச் சென்றோம். பர்மாவைப் பூர்வீகமாகக் கொண்ட அவர்கள் என் வசதிக்காக முழுச் சைவ உணவைத் தயாரித்திருந்தனர். அவர்களின் அன்பில் ஒரு மணி நேர விருந்து, மூன்று மணி நேரம் சென்றதே தெரியவேயில்லை. பேசும் போது அவர்கள் சொன்னது – அந்தமானில் ஒரே குடும்பத்தில் ஒருவர் இந்துவாகவும், ஒருவர் கிறிஸ்துவராகவும், இன்னொருவர் இஸ்லாமியராகவும் இருப்பார், இங்கே இது சகஜம் என்றார் – கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. ரகுபதி ராகவ ராஜா ராம்!









வீர் சாவர்க்கர் விமான நிலையம்
சில நாட்களுக்கு முன்னர் அந்தமான் தீவுகளின் தலைநகரமான போர்ட் பிளேர் சென்று இறங்கியவுடன் என்னைக் கவர்ந்தது, சுத்தமான ஒப்பனை அறைகளைக் கொண்ட வீர் சாவர்க்கர் விமான நிலையம். அதுவும் அங்கே வெற்றிலை/புகையிலையை மென்று துப்பும் பழக்கம் தமிழகத்தைவிட அதிகம் இருக்கும் போல. அங்கே அந்தமானில் இருக்கும் சுற்றுலா தளங்களில் இருக்கும் பொது ஒப்பனை அறைகள் பலவும் பயன்படுத்தும் நிலையில் இருந்தது. இந்த ஆண்டுக்குள் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தில், மற்ற நாடுகளிலிருந்து வரும் நேரடி விமானச் சேவைத் தொடங்கப்படலாம் என்று சொல்கிறார்கள். இப்போது வரை இந்திய நகரங்களிலிருந்து மட்டுமே இங்கே வர முடியும் – சிங்கப்பூர்/தாய்லாந்தில் இருந்து வரும் பயணிகள் தேவையில்லாமல் மேற்கில் இருக்கும் சென்னை வந்துவிட்டு, மீண்டும் கிழக்கே செல்ல வேண்டும். நேரடிச் சர்வதேச விமானச் சேவை இந்தப் பகுதி சுற்றுலா பொருளாதாரத்திற்குப் பெரும் வளர்ச்சிக்கு வழி செய்யும். நான் சென்று வந்த அந்தமான் பயணக் குறிப்புகள் இந்த பதிவிலும் அடுத்ததிலும்.




கோர்பின்ஸ் கோவ் கடற்கரை
போர்ட் பிளேர் சென்ற தினத்தில், மாலை மூன்று மணிக்கு நாங்கள் சென்றது, உள்ளூர் கடற்கரையான கோர்பின்ஸ் கோவ் கடற்கரை. அரைக் கிலோ மீட்டர் நீலம் இருக்கும் இது பொதுக் கடற்கரை. பார்க்கவே மிகவும் அழகாக இருந்தது. தலைக்கு அணியும் ஹெல்மட்டைக் கூட நேசிக்கும் மக்கள் இவர்கள் என்று, அவற்றைக் கூட வெயில் படாமல் மர நிழலில் வைத்திருந்த அழகிலிருந்து தெரிந்து கொண்டேன். கடற்கரை மணலைத் தாண்டி கொஞ்சம் நடந்தால் ஜப்பானியர்கள் இரண்டாம் உலகப் போரின் போது இங்கே ஆக்கிரமித்து இருந்த காலத்தில் கட்டிய பதுங்குக் குழிகளைக் காணலாம். நீரில் ஓடும் ஜெட் ஸ்கூட்டர், வேகப்படகுப் பயணம் என்று கடல் விளையாட்டுகளும் இங்கே உண்டு.








செல்லுலார் ஜெயில்
அந்தமான் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது, செல்லுலார் ஜெயில். இதைவிடுத்து நடிகர் திலகத்தின் அந்தமான் காதலி படமும் அதில் வரும் அந்தமானைப் பாருங்கள் அழகு பாடலும் சிவாஜியின் சிகப்பு வண்ணச் சூட்டும் என்று சொன்னால் அவர்களை நண்பர் வட்டத்திலிருந்து நீக்கிவிடுவேன்.செல்லுலார் ஜெயில் என்றவுடன் வீர் சாவர்க்கர் அவர்களும் மற்ற ஆயிரக்கணக்கான இந்தியச் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு ஆங்கிலேயர்களால் செய்யப்பட்டக் கொடுமைகள் நினைவுக்கு வந்து வாட்டும். எனக்குச் சிறைச்சாலை (1996) திரைப்படத்தில் மோகன்லால் மற்றும் பிரபு, ஆங்கில அதிகாரியின் காலணியை நக்கி சுத்தம் செய்த காட்சி மனக்கண்ணில் தோன்றியது. அதோடு எதற்காகவோ கப்பலோட்டிய தமிழன் படத்தில் வ.உ.சி. இழுத்த செக்கு காட்சியும் வந்து போனது – கூகுளில் தேடிய போது செக்கிழுத்த செம்மல் இருந்தது கோவை சிறை என்று தெரிந்தது, அந்தக் கொடுமை நடந்தது செல்லுலார் ஜெயில் இல்லை. கோர்பின்ஸ் கோவ் கடற்கரைக்குச் சென்றுவிட்டு, நாங்கள் போனது இந்தியச் சுதந்திர வரலாற்றில் முக்கிய இடமான, சிகப்பு ரத்தத்தில் எழுதப்பட்ட: செல்லுலார் ஜெயில்.
கடந்த நாற்பது ஆண்டுகளாக செல்லுலார் ஜெயில் ஓர் அருங்காட்சியகமாக, இந்தியாவின் சுதந்திர வரலாற்றையும், ஆங்கிலேயக் காலனிய ஆட்சியின் கொடூரங்களின் சாட்சியாகவும் இருக்கிறது. இந்த பெரிய சிறைச்சாலையைச் சுற்றிப் பார்க்கச் சுமார் இரண்டு மணி நேரம் வேண்டும். சீட்டு வாங்கி உள்ளே நுழைந்தவுடன் இரண்டு பக்கமும் வரலாற்றுப் படங்களும், மாதிரிகளும் இருக்கிறது. ஒவ்வொன்றையும் படிக்க படிக்க நமக்குப் பதைபதைக்கிறது – இந்தியர்கள், பிரித்தானியர்கள் அனைவரும் வந்து பார்க்க வேண்டிய இடம் இது. இதன் சிறப்பை உணர்ந்து மத்திய அரசாங்கம் இதை நல்ல முறையில் பராமரிக்கிறார்கள். இருக்கும் பல நூறு அறைகளுக்கு உள்ளேயும் நாம் போகலாம், தூக்கு மேடைகளையும், தண்டனைக் கருவிகளையும் பார்க்கலாம். இருக்கும் அறைகளில் முக்கியமானது, கடற்கரையை ஒட்டிய பகுதியின் மூன்றாம் மாடியில் கடைசியில் இருக்கும் அறை. இங்கே தான் வீர் சாவர்க்கர் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்தார். மற்ற கைதிகள் அனைவரும் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தூரமான அறைக்கு மாற்றப்பட்டார்கள், சாவர்க்கரைத் தவிர – அந்தளவு அவரின் மேல் கடுமைக்காட்டப்பட்டது. தற்போது வீர் சாவர்க்கர் இருந்த அறையில் மட்டும் கைதியின் பெயரும், புகைப்படமும் இருக்கிறது – நாங்கள் போன சமயம், மராத்தியர் ஒருவர் வந்து வணங்கி, மண்டியிட்டு இருந்த நிலையில் படம் எடுக்கச் சொல்லி, மீண்டும் வீர் சாவர்க்கர் படத்தை வணங்கிச் சென்றார். சிலிர்த்துப் போனேன்!
நமக்கு இதன் வரலாற்றைச் சொல்ல வழிகாட்டிகள் இருக்கிறார்கள், அதற்குக் கூடுதல் கட்டணம். நாங்கள் போன நாளில் இந்தி மொழியில் மட்டுமே விளக்கம் சொல்லப்பட்டது. வாரத்தில் ஓரிரு நாட்களில் ஆங்கிலத்திலும் உண்டாம். இந்தியில் சொன்னாலும் சொல்லிய விசயத்தின் தாக்கத்தால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. உள்ளே போன நாங்கள், எல்லா இடங்களையும் பார்த்து வர ஒன்றரை மணி நேரமானது, பின்னர் ஐந்து மணிக்கு எல்லோரும் வெளியனுப்பப் பட்டோம். மாலையில் மட்டும் நடக்கும் ஒலி ஒளிக் காட்சிக்குத் தனியாக நுழைவுச் சீட்டு வாங்கியிருந்ததால், ஆறு மணிக்கு முன்னர் மீண்டும் அனுமதிக்கப் பட்டோம், இந்த முறை ஒவ்வொருவரின் ஆதார் அட்டை சரிபார்க்கப்பட்டது. இந்த ஒலி ஒளிக் காட்சி சுமார் ஒரு மணி நேரம் ஓடியது. இதுவும் நாங்கள் போன நாளில் இந்தியில் மட்டுமே இருந்தது – அதுவரை படித்து, கேட்டு இருந்ததால் நன்றாகவே புரிந்தது.








வரலாறு:
1857யில் நடந்த இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர் பிரித்தானியர்கள் சுதந்திரத்திற்குப் போராடியவர்களை மேலும் கடுமையாகக் கையாளத் தொடங்கியது. அப்போதிலிருந்து திட்டமிட்டு, 1906யில் கட்டி முடிக்கப்பட்டது தான் செல்லுலார் ஜெயில். அந்தக் காலத்தில் போர்ட் பிளேர் நகரமே ஒரு தண்டனை குடியேற்றமாக இருந்தது, அதிலும் செல்லுலார் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டவர்கள் ஆங்கில அரசால் மிகவும் வெறுக்கப்பட்டவர்கள். நகரத்தின் உயர்ந்த பகுதியில் கட்டப்பட்டது இந்தச் சிறைச்சாலை. இதைச் சுற்றியும் கடல் – பல ஆயிரம் மைல்களுக்கு நீர், நீர், நீர் மட்டுமே. இங்கேயிருந்து தப்பித்தாலும் கடலைக் கடந்து வெகு தூரம் போகவே முடியாது – அப்படிப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்யப்பட்ட இடம் இது.
இதன் இறுதி வடிவத்தில் ஏழு பகுதிகள், ஒவ்வொன்றிலும் மூன்று மாடி, மொத்தம் 696 சிறைக்கூடங்கள் (அறைகள்) இங்கே கட்டப்பட்டது. ஏழு பகுதியும் சேர்த்துப் பார்த்தால் ஒரு பெரிய நட்சத்திர மீன் மாதிரி இருக்கும். ஒரு பகுதியிலிருந்து இன்னொன்றுக்கு நடுவில் இருக்கும் மத்தியப் புள்ளி போன்ற கோபுரம் வழியே மட்டுமே செல்ல முடியும். இரவில் அந்தக் கதவுகளை அடைத்துவிட்டால் வேறு வழி எதுவும் கிடையாது. ஏழு பகுதியும் ஒரே நீளம் இல்லை – அது அமைக்கப்பட்ட நிலத்தின் தன்மையைப் பொருத்து மாறுபடும். ஒவ்வொரு தளத்திலும் இருக்கும் முதல் அறை, மற்றவற்றைவிடப் பெரியது, இரண்டு கதவுகள் இருப்பது, இதில் காவல்காக்கும் இந்திய வாடன்கள் (ஜேமதார்) தங்குவார்கள்.
ஒவ்வொரு அறையிலும் ஒரு கைதி, ஆண்கள் மட்டுமே (நல்ல வேளை, பெண்களாவது இதிலிருந்து தப்பித்தார்கள்). எந்த அறையிலும் கழிப்பறை வசதிக் கிடையாது, மாலையில் அறைகளின் கதவு மூடப்பட்டவுடன் அடுத்த நாள் காலை வரை இயற்கை உபாதைகளைக் கழிக்க ஒரு சிறிய மண் சட்டி தான் கொடுக்கப்பட்டது, அதில் ஒரு முறை சிறுநீர் கழித்தாலே வழியும், அதைத் தண்ணீர் ஊற்றிக் கழுவக்கூட அனுமதியில்லை. கைதிகளுக்கு உணவும் மிகக் குறைந்த அளவே கொடுக்கப்பட்டது, மருத்துவ வசதி எதுவும் அனுமதிக்கப்படவில்லை – பெயருக்கு மட்டுமே இந்தச் சிறைச்சாலை தலைமை மருத்துவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. விதிகளை மீறினால், அல்லது கொடுக்கப்பட்ட அளவுக்குக் குறைவாகச் செக்கில் எண்ணெய் ஆட்டியிருந்தால் தண்டனைகள் கடுமையாக இருக்கும். சிறைக்கு வந்தவுடன் கையும் காலும் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்படும், பின்னர் நடத்தையைப் பொருத்து, அது எளிதாக்கப்படும். மீறி தவறுகள் செய்தால், தேங்காய் நாரில் நெய்யப்பட்ட உடைக் கொடுக்கப்படும், போர்ட் பிளேரில் இருக்கும் வெயிலில் அது உடல் முழுக்க தோலைப் புண்ணாக்கிவிடும்.
விக்கிப்பீடியா பக்கத்தில் பார்த்தால் இங்கேயிருந்த கைதிகளில் பெரும்பாலும் வங்காளம், பஞ்சாப், பீகார், உத்தரப்பிரதேசம், கேரளா, ஆந்திரா, மராத்தியம் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்று தெரிகிறது, தமிழ்நாட்டிலிருந்து யாராவது அனுப்பப்பட்டார்களா என்று தெரியவில்லை.
இந்தச் சிறைச்சாலை பயன்பாட்டில் இருந்த முதல் நாற்பது ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் சுதந்திர வீரர்கள் இங்கே அடைக்கப்பட்டர்கள், அவர்களில் எண்பது சதவீதத்தினருக்கும் மேலானவர்கள் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளால், உணவு கொடுக்கப்படாததால் அங்கேயே இறந்துவிட்டார்கள். சுமார் இருநூறு கைதிகள் தப்பிக்க முயன்று மாட்டிக் கொண்டார்கள், அவர்களில் எண்பதுக்கும் மேலானவர்கள் சில நாட்களிலேயே அங்கேயே தூக்கிலிடப்பட்டார்கள். தூக்கு மேடைக்குச் செல்லும் முன்னர், அவர்கள் பல நாட்கள் தனிமைச் சிறையில், கீழ்த் தளத்தில் இருக்கும் நான்கு அறைகளில் ஒவ்வொருவராக அடைக்கப்பட்டு, சிறைக்கு நடுவில் குளிப்பாட்டப்படுவார்கள். இறந்த பின் உடல்களுக்கு அடக்கம், எரிப்பு எதுவும் கிடையாது – அப்படியே கீழேயிருக்கும் கடலில் தள்ளிவிட வசதியாக ஒரு கதவு இருக்கிறது.
இதனாலேயே இந்தச் சிறையை இந்தியில் காலாப் பாணி – கறுப்பு நீர் என்று அழைத்தார்கள் – இங்கே கறுப்பு என்பது மரணத்தைக் குறிப்பது.


















மூவர்ணக் கொடி புள்ளி
நாங்கள் அந்தமான் போர்ட் பிளேர் சென்ற நாளில் பார்த்த இடங்களான: வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையம், கோர்பின்ஸ் கோவ் கடற்கரை, செல்லுலார் ஜெயில், இவற்றை முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அடுத்த இரண்டு நாட்கள் நாங்கள் சென்றது ஹேவ்லாக் தீவு, அதைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன். அங்கேயிருந்து போர்ட் பிளேர் திரும்பியன்று நாங்கள் போன இடம்: “ராஸ் தீவு”.
அதற்கு முன்னர் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முக்கியமான ஓர் இடத்தைப் பார்த்துவிடுவோம்: அது மூவர்ணக் கொடி புள்ளி (இந்தியில் தீரங்கா). இங்கேயிருக்கும் கொடிக் கம்பத்தில் தான் 1943ஆம் ஆண்டு 30 டிசம்பர் அன்று, அந்தமான் ஜப்பானியர் கட்டுப்பாட்டில் இருந்த போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் முதல் முதலாக இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றி, அந்தமான் தீவுகள் தான் பிரிட்டிஷ் ராஜ்ஜிய இருந்து சுதந்திரம் அடைந்த முதல் இந்தியப் பகுதி என்று அறிவித்தார். அங்கே இருந்து பார்த்தால் இரண்டு மைல் தொலைவில் காலனியக் காலத்தில் அந்தமானில் ஆங்கிலேயர்களின் தலைமையிடமாக இருந்த “ராஸ் தீவு” தெரிகிறது (படத்தில் 1943 என்கிற இலச்சினைக்குப் பின்னால் இருப்பது இந்தத் தீவு). நேதாஜியின் துணிவை வியக்காமல் இருக்க முடியவில்லை – ஜெய் ஹிந்த்!





ராஸ் தீவு
போர்ட் பிளேர் செல்லுலார் ஜெயிலுக்கு அருகில் இருக்கும் பூங்காவை ஒட்டியுள்ள சிறிய படகுத் துறையிலிருந்து ஐந்து நிமிடப் படகுச் சவாரி செய்தால் வந்துவிடுகிறது “ராஸ் தீவு”. 2018ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தீவின் பெயர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு (NSCB Dweep). நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்களின் கோட்டையாக இருந்த இடமிது, அவர்களின் முக்கிய அதிகாரிகள், நீதிபதிகள் தங்கும் வீடுகள், டென்னிஸ் மைதானம், வெதுப்பகம் (பேக்கரி), தேவாலயம் போன்ற கட்டிடங்களின் கூரைகள் எல்லாம் இடிந்து மிஞ்சியிருக்கும் பக்கவாட்டு சுவர்களை மட்டும் காணலாம்.
தீவில் நுழைந்தவுடன் திரும்பிப் பார்த்தால் மூவர்ணக் கொடி புள்ளியில் இருக்கும் கொடிக் கம்பம் தெரிகிறது.
இது சின்ன தீவு நடந்தே பார்க்கலாம், கொஞ்சம் மேடான சில நூறு அடிகள் இருக்கிறது – அதற்கு வசதியாகத் தீவில் நுழைந்தவுடனேயே பேட்டரி கோல்ஃப் வண்டியில் செல்ல வேண்டுமா என்று கேட்கிறார்கள் – அதற்கு ரூபாய் 80 கட்டணம். தீவின் கோடியில் ஒரு சிறிய கலங்கரை விளக்கமும் தனிமையில் இருக்கும் மாலுமி என்ற நினைவுச் சின்னமும் இருக்கிறது. நடுக்கடலில் இறக்கும் மாலுமிகளின் உடல்கள் கிடைப்பதில்லை, அடக்கம் செய்யப்படுவதில்லை, அவர்கள் எல்லோருக்கும் மரியாதை செய்யும் விதமாக அமைக்கப்பட்ட சின்னம் இது.
[அடுத்த பதிவில் ஹேவ்லாக் தீவு என்கிற சுவராஜ் தீவுக்குச் செல்வோம்]




















இத்துடன் போர்ட் பிளேர் சுற்றுலா முடிந்தது, அடுத்த பதிவில் ஹேவ்லாக் தீவு என்கிற சுவராஜ் தீவுக்குச் செல்வோம்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் உதவியால் அடியேனும் அந்தமான் நிகோபார் தீவுகளில் சுற்றி திரிந்த அனுபவம் பெற்றேன்.
மிக்க மகிழ்ச்சி