நேற்றைக்கு ஒரு நண்பர் பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டிருந்தார். அவர் ஒரு வரலாற்று ஆர்வலர், பாதுகாவலர் மற்றும் எழுத்தாளர். உலகின் பல நாடுகளுக்கும் ஆராய்ச்சிப் பயணங்கள் செல்பவர். அவர் பகிரும் படங்களோடு, மீண்டும் மீண்டும் இந்தியாவைப் பற்றி வருத்தப்பட்டுச் சுட்டிக்காட்டுவது இந்த ஒரு விஷயத்தையே. அதாவது, இந்தியாவைக் காட்டிலும் மற்ற எல்லா நாடுகளிலும், ஏன் மிக மோசமான வறுமையில் இருக்கும் நாடுகளில் கூட, மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்; பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். படிக்கவே வருத்தமாக இருந்தது, ஆனால் அதுவே உண்மை.
உண்மை கசக்கும். இதை நமக்குச் சொல்ல, நம் முன்னே ஒரு கண்ணாடியைக் காட்டுபவர்களே நமது உண்மையான நண்பர்கள். அந்த வகையில் அந்த நண்பருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
சமீபத்தில் ஏழை நாடான கம்போடியா சென்றிருந்தேன். அங்கே தலைநகரம் நம் டெல்லியை விட, சென்னையை விடச் சுத்தமாக இருந்தது. சென்ற ஆண்டு பிலிப்பைன்ஸ் சென்றேன், அங்கே சுத்தமோ சுத்தம். சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா என எல்லாத் தெற்காசிய நாடுகளும் இந்தியாவை விடச் சுத்தம்; நம்மைவிட வரிசையில் ஒழுங்காகவே நிற்கிறார்கள்.
ஓர் இந்தியக் குடிமகனாக நான் வெட்கப்படுவது, தமிழ்நாட்டிலும் இன்னும் பல இந்திய மாநிலங்களிலும் மக்கள் வரிசையில் நிற்பதே இல்லை; எங்கு பார்த்தாலும் முந்திக்கொண்டு வருவதுதான். வறுமையில் இல்லாதவர்கள் பயணம் செய்யும் சென்னை மெட்ரோவில் கூட இதைப் பார்க்கலாம். இறங்குபவர்கள் இறங்க இடம் விடாமல் வழி மறித்து ஏறுகிறார்கள். சென்னை விமான நிலையம் கடைசி நிறுத்தம்; அங்கே ரயில் ஐந்து நிமிடம் நின்றுவிட்டுத்தான் திரும்பும். ஆனால், அங்கேயும் இறங்குபவர்களுக்கு வழி கொடுக்க மாட்டார்கள். பல சமயம் நான் வருத்தமே படாமல் அவர்களைத் தள்ளிவிட்டுத்தான் இறங்க வேண்டியிருக்கிறது. இங்கேயே இப்படி என்றால் மின்சார ரயில்களிலும், பேருந்துகளிலும் இன்னும் மோசம் என்பதை எளிதில் ஊகிக்கலாம். இதே போக்கைத்தான் நான் சென்ற பல பொது நிகழ்ச்சிகளிலும் பார்க்கிறேன். இதனால்தான் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் (எந்தக் கட்சியாக இருந்தாலும்) நெரிசலில் பலர் இறக்கிறார்கள்; நாமும் அதைச் சாதாரணமாகக் கடந்து போகிறோம். உலகத்தையே புரட்டிப்போட்ட பெருந்தொற்று வந்து போனாலும், நமக்கு மட்டும் சுகாதாரம் மற்றும் பொது இடங்களின் சுத்தம் மீதான அக்கறை வரவில்லை.
இந்தச் சமூக ஒழுக்கமின்மையை, “அடுத்தவர் எக்கேடு கெட்டாலும் எனக்குக் கிடைக்க வேண்டும்” என்கிற குணத்தை மதங்களைத் தாண்டி, சாதிகளைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி எல்லோரிடமும் பார்க்கிறேன். இதில் என்னையும் சேர்த்தே சொல்கிறேன்; நான் மாற முடிந்தளவு முயல்கிறேன், ஆனால் 100% மாறிவிட்டேன் என்று சொல்ல முடியாது. இந்தச் சமூக ஒழுக்கமின்மையில் வலது, இடது, ஏழை, நடுத்தர வர்க்கம், பணக்காரர்கள் என்கிற வேறுபாடுகள் கிடையாது.
ஜப்பான் போல இதையெல்லாம் ஆரம்பப் பள்ளியிலிருந்தே, வீட்டிலிருந்தே பழக வேண்டும். தமிழகத்தில் இருக்கும் பெரும் கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் தங்கள் தொண்டர்களிடம்/ரசிகர்களிடம் இவற்றைப் பழக அன்புக் கட்டளையிட்டுத் தொடர்ந்து பயிற்சிகளை அளிக்கலாம். இப்படியெல்லாம் செய்தால் ஓரளவு மாறலாம். அரசாங்கங்களால் மட்டுமே இதைச் செய்யவே முடியாது; பெருமளவில் வரிப்பணம் வீணாகும், அவ்வளவுதான்.
நான் 1990களில் பொருளாதார வளர்ச்சி வந்தால் இது மாறிவிடும், மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானால் சமூக ஒழுக்கம் தானாக வரும் என எதிர்பார்த்தேன். ஆனால், நிலைமை இன்னும் மோசமாகவே போய்க்கொண்டிருக்கிறது என்பதை வருத்தத்துடன் பார்க்கிறேன்.
எனது தலைமுறை, எங்களுக்குக் கிடைத்த நாட்டை/சுற்றுப்புறத்தை மேம்படுத்தாமல், இன்னும் சீர்குலைத்தே எங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கப் போகிறோம் என்பது மிகவும் வருத்தமான உண்மை. அடுத்த தலைமுறை புத்திசாலிகள், உலக அறிவு அதிகம் உள்ளவர்கள், சமூக அக்கறை உள்ளவர்கள் என்று அவர்களை ஊக்கப்படுத்துவதெல்லாம் வெறும் வாய்ஜாலம்; பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அயோக்கியத்தனம். இதையேதான் எங்கள் தலைமுறை இன்று செய்துகொண்டிருக்கிறது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையப் போவதில்லை.
இறுதியாக, நம் பிள்ளைகளுக்கு நாம் சொத்துக்களைச் சேர்த்து வைப்பதை விட, சுத்தமான, ஒழுக்கமான ஒரு சமூகத்தைச் சேர்த்து வைப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் உண்மையான நீதி என்று நினைக்கிறேன். அதைச் செய்வோமாக.

குறிப்பு: நான் இதில் எந்தக் கட்சியையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இதை இந்தியன், தமிழன் என்ற முறையிலேயே சொல்லியுள்ளேன். மத்தியிலும், மாநிலங்களிலும், நகராட்சிகளிலும் ஆண்ட அனைத்துக் கட்சிகளையும், நம் பள்ளிகளையும், பெற்றோராக என்னையும், வல்லுநர்களையும் சேர்த்தே சொல்கிறேன்.
Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.

