நானும் மனைவியும் நேற்று மாலை ஓர் உறவினர் இல்லத்திற்கு வடபழனி பகுதிக்குப் போயிருந்தோம். அங்கிருந்து கிளம்பும்போது இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது. சாலிகிராமம் அருணாசலம் சாலையில் வந்து கொண்டிருந்தோம். டின்னருக்கு எங்கே நிறுத்தலாம் என குப்தா பவன், நித்ய அமிர்தம் என்று ஒன்றுக்குப் பின் ஒன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது கண்ணில் புது விபி வோல்டு பட்டது.
ஏற்கனவே வேளச்சேரி விபி வோல்டிற்கு (VB World, Velachery) இரண்டு முறை போயிருந்தேன். அந்த அனுபவங்கள் பிடித்திருந்ததால் அதிகமாக யோசிக்காமல் காரை உள்ளே நிறுத்தினேன். எங்களைப் பார்த்த காவலாளி சற்று தயங்கியபடி கார் சாவியை வாங்கினார். எதுவும் புரியாமல் நாங்கள் உள்ளே போனோம்.
முக மலர்ச்சியுடன் வரவேற்ற மேலாளர், இன்னும் இந்த புதிய உணவகம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படவில்லை என்று சொன்னார். வரும் ஞாயிறு மாலை தான் திறப்பு நிகழ்ச்சி. இன்றும் நாளையும் சோதனை ஓட்டம். நீங்கள் எங்கள் விருந்தாளி, சோதனை ஓட்டத்தின் போது கட்டணமில்லா சேவை என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார். நாங்கள் தயங்கினோம். ஆனால் அவர் விடவில்லை. தாராளமாக வாருங்கள் என்று அழைத்து அமர வைத்தார்.
நம்மூரில் இலவசம் என்றால் கூட்டம் அலைமோதும். இங்கே அப்படி எதுவும் இல்லை. எல்லோருக்கும் இலவசமா, ஏற்கனவே அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு மட்டுமா, அல்லது இரவு நேரம் என்பதால் எங்களை அனுமதித்தார்களா என்பது தெரியவில்லை.
சோதனை சேவை என்பதால் குறைந்த வகை, தேர்ந்தெடுக்கப்பட்ட உணவுகள் மட்டுமே இருந்தன. நாங்கள் உண்டது, முதலில் தக்காளி சூப். அதன் பிறகு காளான் வறுவல், மோமோஸ். அடுத்து ஆந்திரா காரத் தோசை, லச்சா பராத்தா மற்றும் கீரை பன்னீர் கறி. முடிவில் காபி. இதைத் தவிர ஹக்கா நூடுல்ஸ், சீஸ் பாஸ்தா, மைசூர் பாக் ஆகியவையும் இருந்தன.







வேளச்சேரி விபி வோல்டை விட இடம் சற்றே சிறியது. ஆனால் உள் வடிவமைப்பு மற்றும் அலங்காரம் அதே பாணியில் இருந்தது. அங்கே இருந்த பணியாளர்கள் எல்லோருமே எங்களை நன்றாகக் கவனித்தார்கள். அனைவருக்கும் நன்றி. வழங்கப்பட்ட உணவுகள் அனைத்தும் சுவையாக இருந்தது. வறுவலில் மட்டும் எண்ணெய் சற்றே அதிகமாக இருந்தாலும் சுவையில் குறை இல்லை. மொத்தமாக அனுபவம் நன்றாகவே இருந்தது.
அடுத்த முறை இந்தப் பக்கம் வரும் போது நிச்சயம் இங்கே வருவோம். நீங்களும் போய் வாருங்கள். நிச்சயம் பிடிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. நான் இலவசமாக அனுபவித்த சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம். இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

