குமுதம் எடிட்டர் திரு எஸ்.ஏ.பி. அண்ணாமலை

நேற்றைய மாலை (3 ஜூலை 2025), மயிலாப்பூர் அர்கே கான்வென்ஷன் (Arkay Convention Center, Mylapore, Chennai) மையத்தில் நடந்த “மதுரத்வனி” நிகழ்ச்சி, ஓர் உணர்வுப்பூர்வமான பயணமாக இருந்தது. ‘அழியாத ரேகைகள்’ என்ற தொடரின் மூன்றாவது நிகழ்வில், குமுதம் பத்திரிகையின் நிறுவனர் மற்றும் முதன்மை ஆசிரியர் திரு எஸ்.ஏ.பி. அண்ணாமலை அவர்களின் வாழ்க்கையும் பணி சாதனைகளும், எழுத்தாளர் திரு மாலன் அவர்களால் உரையாக உருக்கமான முறையில் வழங்கப்பட்டன.

திரு  எஸ்.ஏ.பி. அவர்களின் பெரியம்மாவின் கணவர் 20வது நூற்றாண்டின் ஆரம்பங்களிலேயே ஜூபிடர் என்கிற விமானச் சேவை நிறுவனத்தை நடத்திருந்தார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது அகதிகளை ஏற்றிவரப் பண்டிட் திரு நேரு அவர்களிடம் தனது எட்டு விமானங்களை இலவசமாக வழங்கியவர் அவர். அதே போல முதல் காஷ்மீர் போரின் போது இந்திய இராணுவத்தை ஏற்றிச் செல்ல வழங்கினாராம். திரு  எஸ்.ஏ.பி. ஒருமுறை பேருந்தில் போகும் போது முதியவர் ஒருவர் ஏறும் முன்னர் பேருந்து கிளம்ப, அவர் விழப் பின்னர் அவரையும் ஏற்றிக் கொண்டு சென்றது பேருந்து. மற்ற பயணிகளுக்கும் நடத்துநருக்கும் இந்த விசயத்தில் சண்டை வர, காவல் நிலையம் சென்றது பேருந்து. முதலில் எல்லோரும் நடத்துநரைக் குற்றம் சொல்ல, நேரமாக ஆக அவரவரின் வேலைகள் நினைவுக்கு வர, முதியவரைச் சாடத் தொடங்கினார்களாம். இந்தச் சம்பவத்தைப் பார்த்த “எடிட்டர்” எஸ்.ஏ.பி.க்கு அது மனதில் நிற்க, பின்னர் “மனிதன்” என்கிற ஒரு தொடராகக் குமுதத்தில் வந்ததாம்.

திரு  எஸ்.ஏ.பி. அவர்கள் ஒரு வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றிருந்தாலும், அதை விட்டுவிட்டு, வாசிப்பு மற்றும் எழுத்தை வாழ்க்கையாக எடுத்துக்கொண்டவர். தனது மூன்றாவது வயதிலேயே தனது தந்தையை இழந்தவர், ஆனால் வசதிக்குக் குறைவில்லை. பெரிய பணக்காரக் குடும்பம் அவரது. அப்படி இருக்கையில் ஒரு முறை வங்கியில் அவரின் உதவியாளரிடம் அவரின் முதலாளியை உழைக்காதவர் என்ற தோணியில் மேலாளர் சொல்ல, அதை எஸ்.ஏ.பி. அறிய அதுவே ஓர் உந்துதலாக மாறி, அவரை ‘குமுதம்’ என்ற புதிய இதழை உருவாக்கத் தூண்டியது. 23 வயதில் ஆரம்பித்த இந்தப் பயணம், தொடக்கத்தில் பல தடைகளைச் சந்தித்தாலும், அவர் பயன்படுத்திய புத்திசாலித்தனமான வழிகள் (பெரியப்பா அழகப்ப செட்டியாரைக் கௌரவ ஆசிரியராக நியமித்தது போன்றவை) பத்திரிகையை வெற்றிக்குக் கொண்டு சென்றது.

முக்கியமாக, “வாசகர்களின் ரசனையை அறிந்து, அதற்கேற்பவே குமுதம் எழுதப்பட்டது” என்ற மாலன் அவர்களின் விரிவான விளக்கம், எஸ்.ஏ.பி.யின் படைப்புகளின் அடிப்படை நோக்கத்தைத் தெளிவாக்கியது. அவரது பத்திரிகை நிர்வாகம், வாசகர்களின் மனதைப் படிக்கத் தெரிந்ததின் உதாரணமாகும்.

அவரது ஆசிரியர் குழுக் கூட்டங்கள் கூட தனிப்பட்டது. “உங்களுடைய யோசனைகள் என்ன?” எனக் கேட்பதற்குப் பதிலாக, “நான் அந்த வாரம் படித்ததிலிருந்து…” என்ற வழியில் ஆரம்பித்து, உரையாடலை இயல்பாக உருவாக்குவதில் அவரின் மென்மையான திறன் தெரிந்தது.

பொதுமக்களுடன் கலந்து, மரியாதையுடன் பழகி, ‘ஏய்’ ‘டேய்’ என்ற வார்த்தைகளையே அவரிடம் வேலைச் செய்பவர்களிடம் தவிர்த்தவர் எடிட்டர். தனது ‘அரசு பதில்கள்’ பகுதியில் தனிப்பட்ட முறையில் எழுதிய அவர், எளிமை, ஈடுபாடு, மரியாதை ஆகிய மூன்றையும் ஒருசேரக் கொண்டிருந்தார்.

பல வருடங்களுக்கு (1947இல் குமுதம் தொடங்கப்பட்டது) முன்னர் தொடங்கப்பட்ட ஒரு தமிழ் பத்திரிகையின் ஊடாக வணிகம், வாசகர்களின் விருப்பம், ஆசிரியரின் பொறுப்பு என்று பலவற்றை நாம் அறிந்து கொள்ள முடிந்தது. அதோடு பணிச் சூழலை அமைப்பது மற்றும் உதவி ஆசிரியர்களிடம், எழுத்தாளர்களிடம் அவர் நடந்து கொண்டவிதம் என்ற பாடங்களும் நமக்கு இந்த உரையிலிருந்து கிடைத்தது. இந்நிகழ்ச்சி, இன்றைய துளிர்த்தொழில்களுக்கும், தொழில் முனைவோருக்கும் நிறையச் சிந்திக்க வைக்கும்.

Talk by Mr Maalan about Kumudam magazine's editor in chief S.A.P. Annamalai
Talk by Mr Maalan about Kumudam magazine’s editor-in-chief S.A.P. Annamalai
குமுதம் இதழ் 1-6-1948 | Kumudam Magazine | Image Courtesy: Roja Muthiah Research Library
குமுதம் இதழ் 1-6-1948 | Kumudam Magazine | Courtesy: Roja Muthiah Research Library

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading