உணவகங்கள் போய் சாப்பிட்டு வந்ததோடு நிற்காமல், சாப்பிட உணவு வகைகளைப் படமெடுத்துப் பகிர்ந்து வயிற்றெரிச்சலை மன்னிக்கவும் வயிற்றுப் பசியைக் கிளப்புகிறேன் என்று நண்பர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் என்னிடம் கூறுகிறார்கள். அவர்களின் பெயர்களைச் சொல்லுவது நாகரிகம் இல்லை என்பதால் விட்டுவிடுவோம். இருந்தாலும் அவர்களைச் சமாதானம் செய்யும் நோக்கிலேயே இந்தப் பதிவை எழுதுகிறேன். இதில் உணவு பரிமாறும் முன்னர் இருந்த காலி தட்டும், வெளிப்புற உட்புறப் படங்களை மட்டுமே பகிர்ந்துள்ளேன் என்பதைக் கவனிக்கவும்.
சென்ற வாரம், மலேசிய நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவருக்காக சென்னை நண்பர் ஒருவர் மாலை விருந்தளித்தார். நானும் சேர்ந்து, நால்வராய் புகழ்பெற்ற தக்ஷின் (Dakshin) உணவகத்துக்குச் சென்றோம். இடம் கிடைப்பதற்காக முன்பே பதிவு செய்திருந்தோம், அதனால் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த தக்ஷின் இதற்கு முன்னாள் சென்னை போட் கிளப் பகுதியில் இருந்த கிரவுன் பிளாசா ஹோட்டலுக்குள் இருந்த அதே உணவகம். அதற்கு முன்னர் அந்த ஹோட்டலுக்கு “அடையார் கேட்” மற்றும் “பார்க் ஷெரட்டன்” என்ற பெயர்கள் இருந்தன. அங்கே இப்போது குடியிருப்பு வளாகம் கட்டப்படுவதால் ஹோட்டல் இடிக்கப்பட்டுவிட்டது. தக்ஷின் (Dakshin) உணவகத்தை மட்டும் உரிமையாளர்கள் அருகிலேயே, சில கட்டிடங்கள் தாண்டி, ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் புதிதாகத் தொடங்கியுள்ளார்கள்.
புதிய இடத்திலும், முன்பிருந்த உட்புற வடிவமைப்பு, தட்டுகள், குவலைகள், உணவு வகைகள், பணியாளர்கள் என்று எல்லாவற்றையும் அப்படியே கொண்டு வந்திருக்கிறார்கள். முக்கியமாக, உணவின் தரமும் சுவையும் அதேபோல் உள்ளது. விலையும் அதேபோல… அதிகமாகவே உள்ளது!
நால்வரும் இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டு, குறைந்த அளவு நல்ல உணவை உண்டு மகிழ்ச்சியாக வெளியேறினோம்.
விலைக் கட்டுபடியாகுமென்றால், ஒரு முறை சென்று அனுபவிக்கலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

