நான் பேஸ்புக்கில் சேர்ந்த காலத்திலிருந்தே (ஆகஸ்ட் 2007) எந்தக் குழுக்களில் சேர்கிறேன், யாரை நண்பர்களாக ஏற்கிறேன், எந்தப் பதிவுகளை விரும்புகிறேன் என்பதில் கவனமாக இருப்பேன். இதனால், எனது செய்திப் பட்டியலில் குப்பைத் தகவல்கள் அரிதாகவே வரும்.
சில மாதங்களுக்கு முன்னர் நான் உருவாக்கிய ஒரு பேஸ்புக் பக்கத்திற்கு (Facebook page) இன்று போன போது, அதன் செய்திப் பட்டியல் முழுவதும் பல்வேறு விதமான பதிவுகள் இருந்தன:
- இந்தி நடிகைகளின் கவர்ச்சிப் படங்கள்,
- ️மகாகும்ப மேலாவில் நடிகர்கள் குளிப்பது போன்ற ஏ.ஐ. உருவாக்கிய போலி படங்கள்,
- ️கிரிக்கெட் மற்றும் பங்குச் சந்தை பற்றிய பதிவுகள்.
⚠️இவை அனைத்தையும் விட ஒரு விஷயம் என்னை அதிர்ச்சியடைய வைத்தது. வரிசையாகப் பல படங்களில் பெண்களின் முழு முகம் மற்றும் அவர்களது வாட்ஸ்அப் எண் வெளிப்படையாகப் பகிரப்பட்டிருந்தது.
இது போன்ற பதிவுகள் ஏமாற்று நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை என்பது தெளிவாகத் தெரிந்தாலும், இவற்றை ஏன் பகிர்கிறார்கள்? இதுபோன்ற பதிவுகளைப் பார்த்து, யாராவது அந்த எண்ணைத் தொடர்பு கொண்டால், அவர்கள் ஏமாற்றப்படுவார்கள் என்பது உறுதி.
நாம் ஒரு புதிய பக்கத்தை உருவாக்கும் போது, அந்தப் பக்கத்தின் முந்தைய செயல்பாடுகள் என்று எதுவும் இருக்காது, அதனால் கணி நெறிக்கு (algorithm) நம்முடைய விருப்பங்களைப் பற்றி எதுவுமே தெரிந்திருக்காது. எனவே, அது கவர்ச்சி, சினிமா, கிரிக்கெட் போன்ற பொதுவான விஷயங்களைக் காட்டி, நம்மை ஈர்க்க முடியுமா என்று பார்க்கும். நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்து, அடுத்து வரும் பதிவுகளை மாற்றிக்கொண்டே போகும். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
இந்த மாதிரி விஷமமான பதிவுகளைத் தடுப்பது பாதுகாப்பு பேஸ்புக்கின் கணி நெறிகளுக்கு மிக எளிது. இருந்தும் ஏன் பேஸ்புக் இதுபோன்ற பதிவுகளை ஏன் முன்னிலைப்படுத்துகிறது?
நம்மைக் காக்க நாம் என்ன செய்யலாம்?
⭕ இதுபோன்ற பதிவுகளைப் பார்த்தால், அவற்றை ரிப்போர்ட் செய்யுங்கள்.
⭕ தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும்.
⭕ தனிப்பட்ட தகவல்களைப் பகிர்பவர்கள் நல்லவர்கள் இல்லை.
⭕ உங்கள் நண்பர்களுக்கும் இதுபற்றி எச்சரிக்கவும்.
⭕ ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது நம் பொறுப்பு என்பதை மறவாதீர்.
மோசடிகளுக்கு மவுசு (மோகம்) இருப்பதால்தான் இவை உருவாகின்றன என்பதை நினைவில் கொள்ளவும்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

