இப்பொழுது அதிகரித்து வரும் தொலைப்பேசி வழி கொள்ளையின் உதாரணம் எனக்கு இன்று வந்த இந்த அழைப்பு, ஒலிப் பதிவைக் கேட்கவும். எல்லோரின் கவனத்திற்காகப் பகிர்கிறேன், இதைப் படித்து யாராவது ஒருவர் ஏமாறாமல் தடுத்தாலும் நன்றே.
இந்த வகைத் திருட்டுகளை Hacking என்று அழைத்து கவுரப்படுத்தக் கூடாது, அதற்கு ஆழ்ந்த தொழில்நுட்ப அறிவு வேண்டும், இப்படித் தொலைப்பேசியில் அழைத்து ‘டிஜிட்டல் அரஸ்ட்’ செய்கிறோம் என்று செய்பவர்கள் முகமூடி திருடர்களை விட மோசமானவர்கள் – மாநிலங்களின் எல்லை கடந்து, நாடு கடந்தும் பாதுகாப்பாக ஏ.சி. அறையிலிருந்து கொண்டு செய்கிறார்கள் (மியான்மார், லாவோஸ் காடுகளில் அடிமைகளால் செய்யப்படுவது இதில் ஒரு குழுவினர் மட்டுமே). பாரதப் பிரதமர் தனது சமீபத்திய மனதின் குரலில் இதைப் பற்றி எச்சரித்துள்ளார்.
இந்த ஒலிப்பதிவைக் கேட்டால், முதலில் ஆங்கிலத்தில், அடுத்து தமிழில் சொல்கிறார், பிறகு ஆங்கிலத்தில், மீண்டும் தமிழில் பேசுகிறார். நம் ஊரில் வங்கி/செல்பேசி/விமான நிறுவனங்களின் அழைப்புகள் கூட தமிழில் அதிகம் வராத நிலையில், திருடர்கள் தமிழைச் சரளமாகப் புழங்குகிறார்கள் – அவர்களுக்குத் தெரியும் எப்படிப் பேசினால் மக்களுக்கு விசயம் சரியாகச் சென்றடையும் என்று. இதில் வரும் குரல் நிச்சயம் ஓர் இயந்திரக் குரல் தான், வரிகளும் ஆங்கிலத்திலிருந்து செயற்கை நுண்ணறிவால் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது தெளிவு.
அதில் பேசியுள்ள வரி, “சைபர் க்ரைம் டிபார்ட்மெண்டின் முக்கிய அறிவிப்பு, உங்களின் தனிப்பட்ட நற்சான்றிதழ் தொடர்ந்து இருண்ட வலையில் பயன்படுத்தப்படுகிறது”. இந்த தமிழ் வரிகளில் எனக்குப் பல ஐயங்கள். அது என்ன “நற்சான்றிதழ்”? அப்படி எனக்கு நற்சான்றிதழ் கொடுத்தது யார் :-). இருண்ட வலையில் (Dark Web) பயன்படுத்த எதற்கு நற்சான்றிதழ், யாரென்றே தெரியாமல் முகமூடியோடு உலா வரத்தானே இந்த இருண்ட வலையே இருக்கிறது?. சரி, அந்தத் தமிழ்க் குரல் ஏன் மலையாளிகள் தமிழ் உச்சரிப்பு போல இருக்கிறது, ஒரு தமிழ்ப் பெண் குரல் மாதிரி கிடைக்கவில்லையா?.
மேற்படி வரியை நான் வேடிக்கை செய்தாலும், இது விளையாட்டு விசயமில்லை. கவனமாக இருக்க வேண்டும். இந்த வகை அழைப்புகள் வந்தால் எதுவும் பேச வேண்டாம், உடனே துண்டித்து விடவும். மீண்டும் வந்தால் “National Cyber Crime Reporting Portal” தளத்தில் [cybercrime . gov . in என்கிற இணைய முகவரியை இடைவெளிகளை விட்டுவிட்டுத் தட்டச்சு செய்யவும்], உடனடியாகப் புகார் அளிக்கவும், உங்கள் செல்பேசியில் இருக்கும் வலை உலாவியில் இருந்தே எந்தச் செயலிகளையும் பதிவிறக்கம் செய்யாமல் இந்தப் புகாரை ஒரே நிமிடத்தில் இலவசமாகக் கொடுத்துவிடலாம். நாம் எல்லோரும் இப்படி அளிக்கும் புகார்களை ஒட்டு மொத்தமாக இயந்திரக் கற்றல் மூலம் ஆராய்ந்து இந்தத் திருட்டு கூட்டங்களின் ஆணிவேர்களைப் பிடிக்க நம் நாட்டுக் காவல் துறைக்கு உதவியாக இருக்கும்.
நாம் எதிர்பாராத நேரத்தில், நம் கவனம் இல்லாத, சோகமாக, கோபமாக இருக்கும் நேரத்தில் இந்த மாதிரி அழைப்புகள் வந்து யாரை வேண்டுமானாலும் (என்னைப் போன்ற பொறியாளர்களையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்) தடுக்கிவிழச் செய்யும் – எப்படி தீ விபத்துகள் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று அடிக்கடி ஒத்திகைப் பார்க்கிறார்களோ அது போல இந்தக் கொள்ளை அழைப்புகளையும் அடிக்கடி தொலைக்காட்சியில் யூ-ட்யுப்பில் பகிர்ந்து அனைவரும் கேட்டுப் பழகிக் கொண்டால் திருடர்கள் அழைப்பை நாம் உடனடியாகக் கண்டு கொள்ளலாம்.
பின் குறிப்பு: இந்த சைபர் க்ரைம் குற்றங்கள் என்ன, எத்தனை வகை, எப்படிச் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள, மெட்ராஸ் பேப்பரில் முனைவர் திரு கே.எஸ்.குப்புசாமி “கத்தியின்றி ரத்தமின்றி” தொடராகவே எழுதியுள்ளார், படித்துத் தெரிந்து கொள்ளலாம். நன்றி.
#digitalarrestscam #digitalarrestfraud #darkwebscam #nationalcybercrime #digitalawareness
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

