இதெல்லாம் ஒரு போஸ்டா? வெங்கட்ரங்கன் கடைக்கு போனா என்ன, போகவில்லை என்றால் என்ன, என்று சொல்லமாட்டேன் என்றால் மேலே படிக்கவும்.

🏬கடந்த நாற்பத்து சொச்சம் வருடங்களாக நான் சென்னை மாம்பலம் (தி.நகர்) வாசி. வாரத்தில் பல நாட்கள் பனகல் பூங்காவைத் தாண்டித் தான் போவேன். இருந்தும் அங்கே இருக்கும் சென்னை சில்க்ஸ், போத்திஸ், ஆர்.எம்.கே.விக்கு ஒரு முறைக் கூடப் போனதாக நினைவில்லை. சில முறை சரவணா ஸ்டோர்ஸ் பிரமாண்டமாய்க்கு போய் துண்டு (கட்) துணிகள் வாங்கியிருக்கிறேன். திருநெல்வேலிப் போன போது அங்கே போத்திஸ்ஸின் மிகப் பெரியக் கடைக்குப் போய் இருக்கிறேன். தி. நகர் கடைக்குப் போகாத பாவத்தைப் போக்கும் பாக்கியம் இன்று வாய்த்தது.

👦🏾என் பையன் கல்லூரிக்குப் போட்டுப் போக சில சட்டையும், டி-ஷர்ட்டும் வாங்க வேண்டியிருந்தது. பொதுவாக இவற்றை வாங்க என் வாடிக்கையானக் கடை மைலாப்பூர் ரெக்ஸ்-பேஷன் தான். இன்று ஏதோ தோன்ற, தி. நகர் போத்திஸ்க்கு போனேன். அவர்களின் வாகன நிறுத்தகம், துரைசாமி சுரங்கப்பாதை அருகே இருக்கிறது, அங்கே காரை நிறுத்திவிட்டு கடைக்குப் போய் வந்தேன். ஆடி மாதம், ஆடி கழிவு விலை என்றாலும் மதிய நேரம் என்பதால், நான் போன போது கூட்டம் இல்லை.

நாலாவது மாடிக்கு போய் பார்த்தேன், தேர்ந்தெடுக்க நிறைய மாதிரிகள் இருந்தது. விலை குறைவுமில்லை, அதிகமும் இல்லை. ஒவ்வொரு பகுதியில் இருந்த பணியாட்கள், சிரித்த முழு முகத்தோடு (மாஸ்க் என்றால் என்ன?) வரவேற்று, நான் கேட்டவற்றைப் பொறுமையாகக் காட்டினார்கள். என் அனுபவத்தில் சரவணா ஸ்டோர்ஸ்ஸில் உங்களைக் கண்டுக் கொள்வதே பெரிய விஷயம், சில நேரங்களில் தான் அக்கறையாகப் பொருட்களைக் காட்டுவார்கள், மற்றபடி அங்கே சுய சேவை தான். ஆனால் போத்திஸ் பரவாயில்லை என்று தோன்றியது – என் அதிஷ்டமா என்று தெரியாது.

👕டி-ஷர்ட் பகுதியில் இருந்த பணியாளரிடம் என் பையனுக்கு என்று சொல்லி அவர் சுட்டிக்காட்டிய தட்டுகளில் இருந்தவற்றைப் பொறுமையாகப் பார்த்துக் கொண்டு பேச்சுக் கொடுத்தேன். இந்தக் காலத்தில் பொண்டாட்டிக்குக் கூட வாங்கிடலாம், ஆனால் பையனுக்குத் தேர்வு செய்வது சவாலாக இருக்கிறது என்றேன், அவரும் ஆமாம் சார், பசங்க இப்போதெல்லாம் போனும் கையுமா தானே இருக்காங்க, அப்படியே வாங்க வந்தாலும், அந்த டிசைன், இந்த நிறம் என்றுப் பலவற்றைப் பார்த்து பார்த்துத் தான் வாங்குகிறார்கள் என்று பேசிக் கொண்டு போனார் – என் தேர்வுக்கு சில யோசனைகளையும் சொல்லி உதவினார். வேண்டியவற்றைத் எடுத்துவிட்டு திரு ஐயப்பனுக்கு (அது தான் அவர் பெயர்) நன்றி சொல்லி அடுத்தப் பகுதிக்கு போனேன்.

ஒவ்வொரு இடத்திலும் நமக்கு வேண்டியதை நாம் தேர்வு செய்தவுடன் அங்கே இருக்கும் பணியாளரிடமே பொருட்களைக் கொடுத்துவிட்டு அடுத்த பொருளைப் பார்க்க போகலாம். ரசீது போட்டு, அவரே நம்மைத் தேடி வந்து பில்லைக் கொடுக்கிறார். எல்லாப் பில்லையும் சேர்த்து அந்த மாடியில் ஒரே இடத்தில் பணம் செலுத்திப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம். நமக்கு நேரம் மிச்சம். கீழே வந்தேன். அவர்கள் கொடுத்த நான்கு கட்டைப் பைகளைத் திருப்பிக் கொடுத்தால் ஒரு பயணப் பை (டிராவல் பாக்) என்று சொன்னார்கள். அந்தப் பயணப் பையில் துணிகளைப் போட்டால் ஊருக்கு போகும் போதே பிய்ந்துவிடும் என்பதாலும், கரோனா காலத்தில் எங்கே பயணம் என்ற எண்ணமும் வர, கட்டைப் பையே எனக்குப் போதும் என்று சொல்லி வெளியில் வந்தேன்.

🛍️வீட்டுக்கு வந்தவுடன், வாங்கிய துணிகளைப் பார்க்காமல் என் அம்மாவின் கண்ணில்பட்டது கட்டைப் பை. நல்ல காரியம் செய்தாய், காய்கறி வாங்க கட்டைப் பை தான் சிறந்தது, அதைக் கொடுத்து உதவாத பயணப் பை வாங்கிவராமல் இருந்தாயே என்று பாராட்டினார் – நோபல் பரிசை விடப் இது பெரியது என்று குடும்பஸ்தர்கள் எல்லோருக்கும் தெரியும்!

முக்கியமான கட்டைப் பை

முக்கியமான கட்டைப் பை

புடவைப் பகுதி (Saree section)

புடவைப் பகுதி (Saree section)

பெண்களுக்கான துணிவகைகள் (Ladies fashion)

பெண்களுக்கான துணிவகைகள் (Ladies fashion)

குழந்தைகளுக்கான துணிவகைகள் (Kids fashion)

குழந்தைகளுக்கான துணிவகைகள் (Kids fashion)

ஆண்களுக்கான டி-ஷர்ட்கள் (Men's T-Shirt)

ஆண்களுக்கான டி-ஷர்ட்கள் (Men’s T-Shirt)

ஆண்களுக்கான அரைகால் சட்டை (Men's Shorts)

ஆண்களுக்கான அரைகால் சட்டை (Men’s Shorts)

ஆண்களுக்கான சட்டை (Men's Shirts)

ஆண்களுக்கான சட்டை (Men’s Shirts)

ஆண்களுக்கான அலுவல் சட்டைகள் மற்றும் கால் சட்டைகள் (Men's Formal Shirts and Trousers)

ஆண்களுக்கான அலுவல் சட்டைகள் மற்றும் கால் சட்டைகள் (Men’s Formal Shirts and Trousers)

என் அம்மாவிடம் வாங்கியப் பாராட்டு!

Tagged in:

,