தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஓர் திரைப்படம் காதல் கோட்டை (1996). அஜீத்துக்கும், தேவயானிக்கும், இயக்குனர் அகத்தியனுக்கும் மிகப் பெரிய வெற்றியைத் தேடிக்கொடுத்தப் படமிது. இன்று சன் நியூஸ் பார்த்ததில் தெரிந்தது, படம் வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டதென்று.

இந்தப் படத்தில் நாயகனும், நாயகியும் பார்க்காமலேயே படமுழுக்க காதலிப்பார்கள், தபால் வழிக் காதல். நம்ப முடியாத இந்த நிகழ்வை, நம்பும்படி தந்திருப்பது தான் படத்தின் வெற்றிக்கு காரணம்.அதோடு அஜீத், தேவயானி, ஹீரா அவர்களின் நல்ல நடிப்பும் சேர்ந்து நம்மை கவர்ந்துவிடுகிறது. இன்றும் படத்தில் வந்தப் பலக் காட்சிகள் எனக்கு நினைவில் இருக்கிறது. பெட்டிக்கடை நடத்தும் மணிவண்ணன் மற்றும் இரவில் குளித்து, இஸ்திரி செய்த துணிகளைப் உடுத்தி, மேக்கப் எல்லாம் போட்டுக் கொண்டு தூங்கப் போகும் பாண்டு கதாபாத்திரமாகட்டும் எல்லாம் பசுமையாக நினைவில் வருகிறது.

பொதுவாக ஆங்கிலப் படங்களில் அல்லது வேறு நாட்டுப் படங்களில் இருந்து தழுவியக் கதைகள் தான் தமிழ் சினிமாவில் வருகிறது என்கிற குற்றச்சாற்றுக்கு மாறாக காதல் கோட்டைக் கதையைத் தழுவி, பின்னர் வந்த வேறு மொழிப் படங்கள்:

  1. ஆங்கில, வங்காளி, ஜாபனீஸ் படம் தி ஜாபனீஸ் வைஃப் (The Japanese Wife 2010) வந்தது. அபர்ணா சென்னின் இந்தப் படமும் ஒரு தரமானப் படம், பார்க்கவும். யூட்யூப்பில் இலவசமாக கிடைக்கிறது.
  2. ஹாலிவுட் படம் யு-ஹாவ் காட் மெயில் (You’ve Got Mail 1998). டாம் ஹாங்க்ஸ் நடித்திருந்த இந்தப் படம் சுமார் தான். காதல் கோட்டை அளவு விறுவிறுப்பு கிடையாது, நடுப்படத்திலேயே ஒருவருக்கு இன்னொருவர் யார் என்று தெரிந்துவிடும், அது எதிர்பார்ப்பைக் குறைத்துவிடும்.

காதல் கோட்டைப் பாடத்தைப் பார்க்காதவர்கள் அமேசான் ப்ரைமில் பார்க்கலாம்.

Categorized in: