இந்த ஆண்டுச் சென்னைப் புத்தகக் காட்சியில் வாங்கிய புத்தகம் – திரு கோ. நம்மாழ்வார் அவர்கள் எழுதிய “நோயினைக் கொண்டாடுவோம்“. இந்தப் புத்தகம், சற்றே வித்தியாசமானது, இருப்பத்திநாலே பக்கங்கள், வெறும் இருபது ரூபாய் தான், அதுவும் குக்கூ என்ற அமைப்பிற்கு நன்கொடையாகத் தான் கேட்கிறார்கள்.

திரு கோ. நம்மாழ்வார் தமிழ்நாட்டில் பிரபலமானவர், இயற்கை விவசாயி, ஆர்வலர் மற்றும் எழுத்தாளர். அவரின் இந்தப் புத்தகம் பல கருத்துக்களைச் சொல்லிச்செல்கிறது, அவற்றில் பல தெரிந்த நல்ல விஷயங்கள் தான், சில தகவல்கள் எனக்கு எதிர்மறையாகத் தோன்றுகிறது. சொல்லியுள்ள எதற்கும் அவர் இந்தப் புத்தகத்தில் ஆதாரம் எதுவும் தரவில்லை, அவரின் மற்ற புத்தகங்களில் அவை இருக்கலாம்.

புத்தகத்தில் இருந்து சில குறிப்புகள் சுருக்கமாகக் கீழே:

  • “கருவும் உருவும் இரண்டு என்பார் அறிவிலார்” – திருமந்திரம்
  • நோய் வேறு சிகிச்சை வேறு அல்ல. இரண்டும் ஒன்றே!
  • உடல் நலமாக இருக்கும் போதும் நோய் வாய்ப்படும் போதும் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு முறையே ‘இயற்கை மருத்துவம்‘.
  • அகிம்சை என்பது இதன் அடிப்படைக் கொள்கை.
  • அளவறிந்து உண்ண வேண்டும். ‘பசித்த பின் புசி’ என்று ஔவை சொன்னார்.
  • புலால் உண்ணாமை உடல் – மன நலத்திற்கு முதற்படி.
  • நோயுற்ற போது மூன்று நாட்கள் தூய காற்று, தூய தண்ணீருடன் மூன்று நாள் உண்ணாமை மேற்கொள்ளுங்கள், உடல் பழைய நிலைக்குத் திரும்பும்.
  • அகிம்சையே மருந்து, மருந்தே இம்சை!
  • கடவுள் காப்பற்றுவார், டாக்டர் கைவிடுவார்!
  • நோயிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளுவது நோய் உற்றவரின் பொறுப்பும் கடமையும் ஆகும். இந்தப் பொறுப்பை டாக்டருக்கு மாற்றும் போது சுகாதாரம் கெடுகிறது.
  • வருமுன் தடுப்பது மட்டுமே சரியானதாகும்.
  • உடல் வேதனை குறைந்தால் சரியான மருந்து, இப்படி அறிவதே அல்லோபதி. உடனடி வேதனை குறைகிறது, ஆனால் நோய்க்கான வேர்க்காரணம் நீடிக்கிறது.
  • நோயினால் ஏற்படும் தீமைகளை நீக்குவதற்கு நஞ்சுகளை மருந்தாகக் கொடுக்கிறார்கள். இப்படி நஞ்சுகளை நோயாளிகளுக்கு ஊட்டுவதற்கு லைசென்சு வாங்கி இருப்பவர்தான் டாக்டர்.
  • நன்னெறியைக் கைக்கொள்ளவேண்டும். சுயநலத்தை விட்டொழிக்க வேண்டும்.
  • உடல் தன்னைக் குணப்படுத்திக் கொள்கிறது. நோயில் உடலால் செரிக்க முடியாத பொருள் ஒன்று உள்ளது. அந்நியப் பொருளை வெளியேற்றுகிறது. ஆதலால் நோய் என்று சொல்லப்படுவதே சிகிச்சை தான்.
  • தவறான எண்ணம் – உணவு செரித்து சக்தியாக மாறவில்லை. உணவை செறிக்க உடல்தான் சக்தியைச் செலவிடுகிறது.ஏழை பசியால் சாகிறான் என்றால், பணக்காரன் ஏன் சாகவேண்டும்?
  • உடலுக்கு ஒவ்வா உணவை நீக்கி, ஏற்ற உணவை, நேரமறிந்து உண்டு நலம் பேணல் வேண்டும்.
  • உணவைக்குடி! நீரை உண். பசித்து உண்ண வேண்டும், மசித்து உண்ண வேண்டும், ரசித்து உண்ண வேண்டும், கூடிய வரையில் சமைக்காதவற்றை உண்ண வேண்டும்.
  • தோற்றத்தை வைத்து தன்மையை முடிவு செய்வது – விஞ்ஞானம். அறிந்து, உணர்ந்ததை ஏற்றுக் கொள்வது – அறிவியல். நம் முன்னோர்கள், புதிய பொருட்களைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகளாக இல்லை, இயற்கையின் ரகசியங்களை உணர்ந்த அறிவியலாளர்களாக இருந்தனர்.

Tagged in:

,