சென்னையில் வேலை செய்யும் போக்குவரத்துக் காவலர்கள் பாவம்! சாதாரணமாக வண்டி ஓட்டிக் கொண்டுப்போகும் நமக்கே கோபம் வருகிறது! தினம் பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகளைப் பார்த்து வேதனைப் பட நேரும் அவர்கள் நிலை கொடுமையிலும் கொடுமை.

சென்னை மாநகர ஓட்டுநர்கள் யாரும் வாகன விதிகளை மதிப்பதாகத் தெரியவில்லை! என்ன காரணமென்றும் தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்வரை சென்னை இவ்வளவு மோசமில்லை, இதற்கு வாகன எண்ணிக்கை கூடுவது மட்டும் காரணமாக எனக்குத் தோன்றவில்லை.

யார் சொன்னார்கள்? தமிழகத்தில் பகுத்தறிவாதிகள் அதிகம் என்று? இங்கேயிருக்கும் இரண்டு சக்கர வாகன ஓட்டுநர்களைப் பார்த்தாலே இங்கே கடவுள் பக்தி அதிகம் என்றும், அவர்களுக்குத் தங்களின் கர்ம பலன்கள் மீது அசாத்திய நம்பிக்கை என்றும் – அதனால் தான் இங்கே நிறையப் பேர் தலைக்கவசம் அணிவதில்லை. குறிப்பாக மகளிர் பெரும்பாலனவர்கள் தலைக்கவசம் அணிவது இல்லவே இல்லை. தலைக்கவசம் கட்டாயம் என்கிற சட்டத்திலிருந்து கருணை அடிப்படையில் கோடையில் விதிவிலக்கு போல, உள்ளேயிருக்கும் மூளையைவிட வெளியிலிருக்கும் முடி அலங்காரம் முக்கியமா? அதனால் தான் இங்கே நூலகங்களைவிட அழகு நிலையங்கள் அதிகமா?

நமக்குப் பின்வரும் வாகன ஓட்டிக்கு தான் உலகத்திலேயே அதி முக்கிய அவசரம். கடவுள் கூடப் பக்தனுக்காகக் காத்திருப்பார், போரில்கூடக் குண்டுகளை நிறுத்தி பூளு கிராஸ் வண்டிக்கு வழிவிடுவார், ஆனால் மெட்ராஸ் சாலைகளில் பொறுமை என்பது சத்தியம் சாத்தியமில்லை!

போக்குவரத்து நெரிசலில் வண்டிகள் வரிசையாக (அப்படி என்றால் என்னவென்று கேட்கக்கூடாது) நின்றால், சாலையின் மறுபுறத்தில், அவர்கள் மட்டும் புத்திசாலிகள் போல் ஏறிச்செல்வது (இந்த வார்த்தை சென்னை தமிழில் மட்டுமே உள்ளது), அதனால் எதிர்திசை வாகனங்களை வரவிடாமல் செய்வதில் ஒரு துளிக்கூடக் குற்ற உணர்ச்சியில்லாமல் சென் மனநிலையில் இருப்பது இரண்டு சக்கர வாகன ஓட்டிகள், அதுவும் குழந்தைகள் வண்டியில் இருந்தால் அவர்களின் இந்தச் சாகசங்களுக்கு அளவேயில்லை.

ஷேர் அட்டோக்களைப் கேட்கவே வேண்டாம், அவர்கள் இடதுபுறம் வண்டியை ஓட்டினால் தான் அதிசயம், சந்திப்பில் சிகப்பு விளக்கு இருந்தால் எதிர்வரும் வண்டிகளுக்கு நடுவில் பூந்து செல்லலாம், அவர்களுக்குச் விதிகள் எதுவுமே கிடையாது, “ஷேர் அட்டோ” இந்திய மோட்டர் சட்டத்திற்கெல்லாம் மேலே, அதையும் தாண்டி புனிதமானது! எப்போதோ வரப்போகும் பறக்கும் காருக்கு இப்போதே பழகும் தொலைநோக்குப் பார்வையுடையவர்கள் அதன் “இளைய” ஓட்டுநர்கள்.

சாலையில் பாதசாரிகள் இருந்தால் கட்டாயம் ஹாரன் அடித்து அவர்களைப் பயமுறுத்த வேண்டும், அவர்கள் தீண்டதாகவர்கள், இந்தியா வல்லரசாவதை தடுப்பவர்கள் அவர்கள், ஒடுக்க அல்லது அழிக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள். மிதிவண்டி ஓட்டுநர்கள் பரவாயில்லை, இன்னும் கொஞ்ச காலம் இருந்துவிட்டுப் போகட்டும், மாத தவணையில் அவர்களும் பைக் வாங்கும் காலம் சீக்கிரம் வரும், அல்லது தமிழகம் வளர்ந்து அரசே அனைவருக்கும் “விலையில்லா” ஸ்கூட்டர் தரும் பொற்காலம் வரும்!

கண்டயிடத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்பதில் என் சக சென்னைவாசிகள் கண்ணும் கருத்துமாக இருப்பர்கள் – அதற்காகவே சென்னை மாநகராட்சி பளப்பளவென நடைப்பாதைகளை அமைத்துள்ளார்கள், அதன் மேல் கார்களையும் குட்டியானைகளையும் பத்திரமாக நிறுத்தலாம். சென்னை “பொலிவுறு” நகரமாக உயர்ந்தால் மேலும் பல நடைப்பாதை வாகன நிறுத்தகங்கள் கிடைக்கும். பாதசாரிகளுக்குத் தான் இருக்கவே இருக்கிறது தார் சாலைகள், கூடுதலாக நடந்தால் அவர்களின் கொழுப்பும் குறையும்.

பூமி சூடாகிக் கொண்டியிருக்கிறது, அதற்குக் காரணம் வாகன மாசு. அதனால் நாம் வாகனப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். இதற்கு உலகத்திலேயே முன்மாதிரி சென்னைவாசிகள் தான். பத்தடியில் இருக்கும் திருப்பம் வரை சென்று திரும்பி எதிர்ப்பக்கம் போனால், மொத்தம் இருபதடி செல்ல வேண்டும், இரண்டு இடத்தில் திருப்ப வேண்டும், அங்கே காத்திருக்க வேண்டும், அதை மிச்சம் செய்யச் சாலையின் இந்தப்பக்கத்திலேயே எதிர்திசையில் ஓட்டுவந்தால் மாசைக் குறைக்கலாமில்லையா? ஒழுங்கான புறம் வருபவர்கள், பார்த்து நிறுத்தி தான் வருவார்கள், ஒன்றுமாகாது ஏனென்றால் அவர்கள் ஒழுக்கசீலர்கள்.

கடைசியாக உங்கள் வண்டியிலிருப்பவர்கள் இறங்க வேண்டுமா? அவர்கள் சௌகரித்திற்காகவும் பாதுக்காப்புக்காகவும் சொல்கிறேன், சாலையின் ஓரத்தில் நிறுத்தி இறக்கி விடாதீர்கள், ஷேர் அட்டோக்களையும் பல்லவன்களையும் பார்த்துத் தெரிந்துக்கொள்ளுங்கள், பாதுக்காப்பாக அவர்களை நடுரோட்டில் இறக்கிவிடுங்கள் – அப்போது தான் இரண்டு புறம் வரும் வாகன  ஓட்டுக்களுக்கும் அவர்கள் தெரிவார்கள்.

இதெல்லாம் பார்த்தால் பயமாக இருக்கிறதா, அப்போது வீட்டிலேயே இருந்து வேலை செய்யுங்கள், இருக்கவே இருக்கிறது நெட்பிலிக்ஸும் அமேசான் ப்ரைமும் சினிமாப் பார்க்க, சாப்பிட ஆர்டர் செய்ய இருக்கிறது – ஸுவிகியும் சோமாட்டோவும்!

வாழ்க சென்னை, வளர்க சென்னையின் வாகன நெரிசலும்.

Update 10th September 2018

இன்று வந்த தமிழ் இந்துவில் சமஸ் அவர்களின் கட்டுரை இது –  லண்டன்: நடப்பதற்கு ஒரு நகரம். அதைப் படிக்க எனக்கு தோன்றியது:

என்று தணியும் நடப்பவர்களின் தாகம்?

இதைப் படிக்க,ஆங்கிலேயர்களே இன்னுமொரு இருபது முப்பது ஆண்டுகள் சென்னையை ஆண்டு, சரிப்படுத்தி/சுத்தப்படுத்திக் கொடுத்துவிட்டு சென்றிருக்கலாமோ என்று தான் தோன்றுகிறது. அவர்கள் உத்தமர்கள் இல்லை, நம்மைச் (இந்தியர்களை) சுரண்டியவர்கள், மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர்கள் தங்களின் தவற்றை (இயற்கை பராமரிப்பில்) உணர்ந்து சரி செய்யத் தயங்காதவர்கள் [ஒரு நூறாண்டுகளுக்கு முன் வரை லண்டன் தேம்ஸ் நதி சென்னை கூவத்தைவிட மோசமாக இருந்ததாம்] – நம்மை நாமே ஆளும் நமக்கு, அந்தத் துப்புயில்லை என்பது நிதர்சனம்.

இன்னொரு விதத்தில் பார்த்தால், இதெல்லாம் வளர்ந்த நாடுகளின் பிரச்சனை.  நமக்கு (இந்தியர்களுக்கு) இன்னும் பொருளாதாரம், வறுமை, கல்வி, (ஏழைகளுக்கு) மருத்துவம், சாதி, மதம், என்று பல பிரச்சனைகளை இருக்கிறது, முதலில் அவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும் – அதெல்லாம் நடக்கட்டும், அப்புறம் மனிதர்கள் நடப்பதைப் பற்றிக் கவலைப்படலாம் – அதுவும் சரி தான்!

Streets of London in 1998, when I went there for the first time

Tagged in: