என் பையன் இப்போதெல்லாம் சினிமா பார்க்கிறான், விஜய் (Vijay) படங்கள் பார்க்கப் பிடிக்கிறது, பள்ளியிலும் அதைப் பற்றிப் பேசுகிறார்கள் போல். இந்த வாரம் அவனை தீபாவளி வெளியீடான விஜய்யின் வேலாயுதம் படத்திற்கு அழைத்துச் சென்றேன்.

சத்தியம், ஐ-நாக்ஸில் சீட்டு இல்லாததால் விருகம்பாக்கத்தில் புதிதாக வந்துள்ள “சந்திரா மால்” ஃபேம் திரையரங்கிற்கு சென்றோம், இணையத்தில் பதிவு செய்திருந்தாலும் வரிசையில் நின்று டிக்கேட்டை மாற்றிக் கொண்டு தான் செல்ல வேண்டும். ஆற்காட் சாலையில் வழக்கத்திற்கும் அதிகமான நெரிசல், அதனால் பதினைந்து நிமிடம் தாமதமாகத்தான் செல்ல முடிந்தது. எனக்கு ஒரே எரிச்சல்,  தியேட்டரில் பார்த்தால் எனக்கு நீயுஸ் ரீலும், விளம்பரங்களும் தொடங்கி, வணக்கம் வரைப் பார்க்க வேண்டும். சந்திரா மாலில் ஒரேயிடத்தில் நான்கு கார்கள் (ஒன்றன் மேல் ஒன்றாக) நிறுத்த நவீன வசதி செய்துள்ளார்கள், அதனால் சுலபமாக காருக்கு இடம் கிடைத்தது.  ஃபேம் திரையரங்கு நன்றாகவும், வசதியாகவும் (Screen 1) பெரிதாகவும் உள்ளது, இதை நான் எதிர்ப்பார்க்கவில்லை தான். இந்தப் பக்கம் இருக்கும் சென்னைவாசிகள் நவீன திரையரங்கிற்காக இனி மைலாப்பூர், அண்ணா சாலை செல்ல வேண்டாம் – இப்படியே பராமரிப்பார்கலாப் பார்க்கலாம்.

சரி படத்திற்கு வருவோம்.  காவலன் எனக்கு பிடித்திருந்தது, நல்ல காமெடி, அதனால் இதுவும் அப்படியிருக்கும் எனப் பார்த்தால் இது முழுக்க முழுக்க கமர்ஷியல் விஜய் படம். சந்தானம் தன் வேலையை இயல்பாக செய்து ரசிக்க வைக்கிறார் (மனுஷன் இன்னும் கொஞ்சம் அடக்கிவாசித்தால் அவருக்கு நல்லது) – கடைசியில் ஓட்டைப் பிரித்துக் குதிக்கும் இடம் நல்ல சிரிப்பு. ஆக்‌ஷனிற்கு விஜய்யும், கிளு கிளுப்பிற்கு ஹன்சிகாவும், இரண்டு குத்துப் பாட்டும் கிடைத்துவிட்டதால் இயக்குனர் ராஜா கதைக்கு ரொம்ப யோசிக்கவில்லை போல – விஜய்யின் முந்தைய சிவகாசியையும், விக்ரமின் கந்தசாமியையும், காஷ்மீர் திவரவாதிகளையும், ஒரு ரசாயன வெடிப்பையும், மகாநதி சீட்டு கம்பெனி போண்டியையும் சேர்த்து கலக்கி நல்ல சுத்தமான மசாலாப் பொடியைத்தூவி கதையை முடித்துவிட்டார். ஜெனிலியாவிற்கு படத்தில் அவ்வளவாக வேலையென்று ஒன்றுமில்லை, அவ்வப்பொது வந்துப் போகிறார். மொலச்சு மூணு இலையவிடலப் பாடல் தனியாகக் கேட்க அருமையாகயிருந்தாலும் படத்தில் வரும் காட்சிகளுக்கு ஒட்டவேயில்லை – வீண் செய்துவிட்டார் ராஜா; ஜில்லாக்ஸ் பாட்டு ஹன்சிகாவாலும், விஜய்யின் துள்ளலாலும் நம்மை கொஞ்சம் இருக்கையிலேயே ஆடவைக்ககிறது.

விஜய் பிடிக்கும் என்றால் பார்க்கலாம். மற்றப்படி சொல்ல எதுவுமில்லை.

வேலாயுதம்

Categorized in:

Tagged in:

,